2012-10-20 15:50:12

பொதுக்காலம் - 29ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 மதிப்பும் மரியாதையும் பெறுவது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஊற்றெடுக்கும் தாகம். இத்தாகத்தைத் தணிக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகளைக் கொண்டு, மரியாதையின் இலக்கணத்தைப் பலரும் பல வழிகளில் எழுதுகிறோம். சிம்மாசனங்களில் அமர்ந்து மாலைகள் பெறுவது ஒருவகை மரியாதை. சிலுவைகளில் அறையப்பட்டு உருகுலைந்தாலும், மக்களின் மனம் எனும் சிம்மாசனங்களில் அமர்வது மற்றொரு வகை மரியாதை.
இஞ்ஞாயிறன்று அருளாளர்களான நான்கு பெண்களையும், மூன்று ஆண்களையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கானில் புனிதர்களாக உயர்த்துகிறார். இந்த ஏழு புனிதர்களும் பெற்றுள்ள மரியாதை, சிம்மாசனங்களில் அமர்ந்து அதிகாரம் செய்ததால் வந்த மரியாதை அல்ல. இவர்களில் பலர் சிலுவைகளைச் சுமந்ததால் இன்று புனிதர்களாக நம்முன் உயர்ந்து நிற்கிறார்கள். சிலுவை வழியில், சேவை வடிவில் இப்புனிதர்கள் மதிப்பும், மரியாதையும் பெறும் இன்று, சிலுவையா, சிம்மாசனமா என்ற கேள்வியை இன்றைய ஞாயிறு நற்செய்தி நமக்கு முன் வைக்கிறது. சிலுவை, சிம்மாசனம் இரண்டும் அரியணைகள். சிம்மாசனம் என்ற அரியணைக்காக உயிரைத் தந்தவர்களும், உயிரை எடுத்தவர்களும் உண்டு. சிலுவையில் உயிரைத் தந்தவர்களும், உயிரை எடுத்தவர்களும் உண்டு.

இறை வார்த்தை சபையைச் சார்ந்த ஜான் புல்லன்பாக் (John Fullenbach) என்ற குரு தன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தைச் சொல்கிறார். உரோமையில் இறையியல் ஆசிரியராக இருக்கும் ஜான், அருளாளரான அன்னை தெரேசா உயிரோடிருந்தபோது, கொல்கத்தா சென்று அன்னையுடன் பணிசெய்ய விரும்பினார். அன்னையும் அழைப்பு விடுத்தார். கொல்கத்தாவில் பணியை ஆரம்பித்த முதல் நாள் ஓர் அருட்சகோதரியுடன் கொல்கத்தாவின் மிகவும் ஏழ்மையான ஒரு பகுதிக்கு ஜான் செல்லவேண்டி இருந்தது. அப்பகுதியில் ஒரு வயதானப் பெண்மணி அவர்களிடம், "தயவு செய்து என் வீட்டுக்கு வாருங்கள். என் கணவர் சாகக்கிடக்கிறார்." என்று வேண்டினார். மிகவும் அழுக்காய் இருந்த ஒரு குடிசைக்குள் ஜானும் அந்தச் சகோதரியும் சென்றனர். பல நாட்கள் படுக்கையில் இருந்த ஒரு மனிதரை அங்கே கண்டனர். ஜானுக்குப் பெரிய அதிர்ச்சி. இவ்வளவு மோசமான நிலையில் ஒரு மனிதர் இருக்கமுடியுமா என்ற அதிர்ச்சி... அவ்வளவு நாற்றம் அங்கே. அவரைத் தங்கள் இல்லத்திற்குக் கொண்டு செல்லலாம் என்று சகோதரி கூறியதும், இருவரும் குனிந்து அவரைத் தூக்க முயன்றனர். அப்போது, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த மனிதர், ஜான் முகத்தில் எச்சில் துப்பினார். அதிர்ச்சி, கோபம் எல்லாம் ஜானைத் தாக்கின. ஓரளவு சமாளித்துக்கொண்டு, அந்த மனிதரை அன்னையின் இல்லத்திற்குக் கொண்டு போய் சேர்த்தார். தொடர்ந்து அங்கே தங்கிய நாட்களில், ஜான் அனுபவித்த அதிர்ச்சிகள் பல உண்மைகளைச் அவருக்குச் சொல்லித்தந்தன. அவரது விசுவாசத்தை உறுதிபடுத்தின.
அன்னை தெரேசாவும், பிற சகோதரிகளும் செய்த சேவை அவரை அதிகமாய்ப் பாதித்தது. அதைவிட, அந்த நோயாளிகளில் சிலர் சகோதரிகள் மீதும், அன்னை மீதும் கோபப்பட்டு, பேசிய வார்த்தைகள், நடந்துகொண்ட விதம்... இவைகளை அந்த சகோதரிகள் சமாளித்த அழகு... இவை அனைத்தும் அவரது விசுவாச வாழ்வை ஆழப்படுத்தியதாகக் கூறுகிறார்.

அன்னை தெரேசாவின் சேவையைப் பார்வையிடவும், அவரோடு சேர்ந்து பணி செய்யவும் நூற்றுக்கணக்கானோர் கொல்கத்தா சென்றிருக்கின்றனர். ஒரு முறை, அன்னையுடன் ஒரு நாள் முழுவதும் செலவிட்ட ஒரு பத்திரிக்கையாளர், அந்த நாள் இறுதியில் அன்னையிடம்: "எனக்கு யாராவது பத்தாயிரம் டாலர்கள் தருகிறேன் என்றால்கூட இது போன்ற வேலைகளை நான் செய்யமாட்டேன்." என்றாராம். அதற்கு அன்னை தெரேசா அவரிடம்: "நானும் அப்படித்தான். பத்தாயிரம் டாலருக்காக இந்த வேலைகளைச் செய்யமாட்டேன்." என்று பதில் சொன்னாராம்.
இவ்விதம் பணி செய்த அன்னை தெரேசாவைப் போல், எத்தனையோ தன்னலமற்ற பணியாளர்கள் மக்கள் மனதில் அரியணை கொண்டிருக்கிறார்கள். இதற்கு மாறாக, அரியணை ஏறுவதற்காக, மக்களைப் படிகற்களாகப் பயன்படுத்திய பலரை மக்கள் மறந்து விட்டனர்.

இயேசுவின் வலப்பக்கமும், இடப்பக்கமும் இரு அரியணைகளில் அமர்வதற்குத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்த இரு சீடர்கள் இன்றைய நற்செய்தியின் நாயகர்கள். அவர்களிடம், நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை என்று இயேசு சொல்கிறார். இயேசு சொல்லும் இந்த வார்த்தைகள் இன்றையத் தலைவர்கள் பலருக்குப் பொருத்தமான வார்த்தைகள்... அரியணையில் ஏறுவதற்கும், ஏறியபின் அங்கேயே தொடர்ந்து அமர்வதற்கும் தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நம்மை ஆச்சரியத்தில், அதிர்ச்சியில், அவமானத்தில் நெளிய வைக்கின்றன. இவர்கள் அறியாமல் செய்கிறார்களா, அல்லது மதியிழந்து செய்கிறார்களா என்ற கேள்வியை நம்முள் எழுப்புகின்றன. மரியாதை, அதிகாரம் எனபனவற்றை தவறாகப் பயன்படுத்தும் தலைவர்கள் அறியாமையில் செய்கிறார்கள் என்று இயேசு பெருந்தன்மையுடன் சொல்கிறார். இந்த அறியாமையின் உச்சக்கட்டமாக, இயேசுவை இத்தலைவர்கள் சிலுவை என்ற அரியணையில் ஏற்றியபோது, மீண்டும் இயேசு 'இவர்கள் அறியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்' என்று தந்தையிடம் வேண்டியது நமக்கு நினைவுக்கு வருகிறது.

செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இரு அரியணைகளில் அமர்வதற்கு விடுத்த இந்த விண்ணப்பம் மற்ற சீடர்களுக்குக் கோபத்தை மூட்டியது. பேராசை, பொறாமை, கோபம் என்ற இந்தச் சங்கிலித் தொடர் தன் சீடர்களைக் கட்டிப்போடும் ஆபத்து உள்ளது என்பதை உணர்ந்த இயேசு, உண்மையான மதிப்பு என்றால் என்ன, மரியாதை பெறுவது எவ்விதம் என்ற பாடத்தை அவர்களுக்குச் சொல்லித் தருகிறார். உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். இயேசுவின் இந்தக் கூற்று நமக்கு ஒரு பெரும் சவாலாக அமைகிறது. இயேசுவின் இக்கூற்றை அடிப்படையாகக் கொண்டு பணியாளர் தலைமைத்துவம் (Servant Leadership) என்ற கருத்து, தற்போது மேலாண்மைப் பள்ளிகளில் பாடமாகச் சொல்லித் தரப்படுகிறது.

இயேசுவின் இந்த சவாலை ஏற்று வாழ்ந்த தலைவர்கள் வரலாற்றில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஜார்ஜ் வாஷிங்டன் பற்றி சொல்லப்படும் ஒரு கதை என் நினைவுக்கு வருகிறது. அமெரிக்க உள்நாட்டுப் போர் நிகழ்ந்த நேரம். ஒரு நாள் ஜார்ஜ் வாஷிங்டன் சாதாரண உடைகள் அணிந்து தன் குதிரையில் ஏறிச் சென்றார். போகும் வழியில் ஒரு தளபதியின் குதிரைவண்டி சேற்றில் அகப்பட்டிருந்ததைப் பார்த்தார். அந்த வண்டியைச் சேற்றிலிருந்து வெளியேற்ற நான்கு வீரர்கள் வெகுவாக முயன்று கொண்டிருந்தனர். தளபதியோ அருகில் நின்று அவர்களுக்கு கட்டளைகள் கொடுத்துக் கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற வாஷிங்டன் தளபதியிடம், "ஏன் நீங்களும் இறங்கி உதவி செய்தால் வண்டியை வெளியில் எடுத்துவிடலாமே!" என்று சொன்னதற்கு, தளபதி, "நான் ஒரு தளபதி" என்று அழுத்தந்திருத்தமாய் சொன்னார். உடனே, வாஷிங்டன் குதிரையிலிருந்து இறங்கி, வீரர்களுடன் சேர்ந்து முயற்சி செய்து, வண்டியை வெளியில் தூக்கிவிட்டார். பின்னர் தளபதியிடம் "அடுத்த முறை உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், உங்கள் அரசுத் தலைவரைக் கூப்பிடுங்கள்... நான் வந்து உதவி செய்கிறேன்" என்று சொல்லி தளபதியின் கையைக் குலுக்கினார். அப்போதுதான் தளபதிக்குப் புரிந்தது, தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன் என்று.

ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம் ஒன்று இப்போது என் நினைவுக்கு வருகிறது. சீக்கியரான ஒரு மாவட்ட ஆட்சியர், தமிழ் நாட்டில் ஒரு முக்கிய நகருக்கு நியமனம் ஆனார். மக்களுக்கு நன்மை பயக்கும் பல அதிரடி மாற்றங்களை மாவட்ட ஆட்சியாளர் அந்நகரில் கொணர்ந்தார். சிம்மாசனத்தில் அமர்ந்து மாலையையும், மரியாதையையும் எதிர்பார்க்கவில்லை இத்தலைவர்.. நேர்மையாக, சிறப்பாக செயல்பட்டார்.
ஒரு நாள் அதிகாலையில் இவர் வழக்கம்போல் உடற்பயிற்சிக்காக நடந்து போனபோது, ஓர் இடத்தில் சாக்கடை அடைத்துக்கொண்டு தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது. ஒரே நாற்றம். நகராட்சி ஊழியர் அதைச்சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்தனர். மாவட்ட ஆட்சியர் அங்கே போனதும், கேட்டார்: "என்ன பிரச்சனை?" "சாக்கடை அடைச்சிருக்கு, சார்." "அது தெரியுது. சுத்தம் பண்றதுதானே." "ஒரே நாத்தமா இருக்கு சார், எப்படி இறங்குறதுன்னு தெரியல." அவர்கள் சொல்லி முடிக்கும் முன்பு, அவர் சாக்கடையில் இறங்கி, அங்கிருந்த கருவிகளை வைத்து, அந்த அடைப்பை எடுத்து விட்டார். பிறகு மேலே வந்து, "இப்படித்தான் செய்யணும்" என்று சொல்லி அவர் வழி போனார். சாக்கடை அடைப்பு திறந்தது, அவர்கள் வாயடைத்து நின்றனர்.

வாழ்க்கையின் பெரும் பகுதியை ஏழைகளுக்காகவும், சமுதாயத்தால் விலக்கப்பட்டவர்களுக்காகவும் செலவழித்த அன்னை தெரேசா ஒரு பெரிய தலைவரா? ஆம். கோடான கோடி மக்கள் மனதில் அரியணை கொண்டிருக்கும் தலைவர் அவர். அதிகாரம் என்பதற்குச் சரியான இலக்கணம் சொல்பவர்கள்.. ஜார்ஜ் வாஷிங்டனும், சீக்கியரான அந்த மாவட்ட ஆட்சியரும்...
பணியாளர் தலைமைத்துவத்திற்கு இவர்களெல்லாம் எடுத்துக்காட்டுகள். உலகின் பெரிய, பெரிய வியாபார நிறுவனங்களெல்லாம் பணியாளர் தலைமைத்துவத்தைப் பற்றி சிந்திக்கவும், செயல்படவும் ஆரம்பித்துவிட்டன. இவர்களை இந்தப் பாதையில் சிந்திக்கத் தூண்டிய இயேசுவின் வார்த்தைகள் நம்மையும் நல்வழிபடுத்த வேண்டுவோம்.

சிம்மாசனம், சிலுவை, இரண்டுமே அரியணைகள் தாம். நாம் மட்டும் சுகம் காணலாம் என்று அரியணை ஏறி அமர்ந்தால், சுற்றியிருந்து சாமரம் வீசுகிறவர்கள் கூட நம்மை மதிக்கமாட்டார்கள். கட்டாயம் நேசிக்க மாட்டார்கள். ஆனால், பலருக்கும் சுகம் தருவதற்கு சிலுவை என்ற அரியணை ஏறினால், பல நூறு ஆண்டுகளுக்கும் மக்கள் மனதில் மதிப்போடும், அன்போடும் அரியணை கொள்ள முடியும்.

சிம்மாசனமா, சிலுவையா... தேர்ந்து கொள்ளுங்கள்.








All the contents on this site are copyrighted ©.