2012-10-19 15:31:47

மாமன்றத் தந்தையர் : நெருக்க்டி நிறைந்த உலகில் நம்பிக்கையை வெளிப்படுத்துவதே புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியின் நோக்கம்


அக்.19,2012. கடவுள் எண்ணமற்ற, அதேவேளை கடவுளுக்காக ஏங்குகின்ற இன்றைய நெருக்கடி நிறைந்த உலகில் நம்பிக்கையை வெளிப்படுத்துவதே புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியின் நோக்கம் என்று, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 17வது பொது அமர்வில் கூறப்பட்டது.
இவ்வெள்ளிக்கிழமை காலை திருத்தந்தையின் முன்னிலையில் தொடங்கிய இந்தப் பொது அமர்வில் முந்தையநாள் நடைபெற்ற சிறு குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இம்மாமன்றத்தின் தலைவர் பிரதிநிதி ஹாங்காங் ஆயர் கர்தினால் John Tong Hon தலைமையில் தொடங்கிய இப்பொது அமர்வில் 253 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர்.
துன்புறும் சிரியா மக்களுக்கு உதவுவதற்கென வத்திக்கான் வங்கியில் ஆரம்பிக்கப்படும் புதுக்கணக்கில் மாமன்றத் தந்தையர் பணம் போடலாம் எனவும், வரும் நாள்களில் சிரியா செல்லவிருக்கும் பிரதிநிதிக்குழு, சிரியாவுக்குத் திருப்பீடம் வழங்கும் பணத்தோடு மாமன்றத் தந்தையரின் இந்தப் பணத்தையும் எடுத்துச் செல்லும் எனவும், உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் பேராயர் நிக்கொலா எத்ரோவிச் அறிவித்தார்.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியில் குடும்பங்கள் மறக்கப்படக் கூடாது என்றும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு மறைக்கல்வி வழங்குவது வலியுறுத்தப்பட வேண்டுமென்றும் இந்த அமர்வில் கூறப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.