2012-10-17 15:51:28

பிலிப்பின்ஸ் அரசுக்கும் MILF என்ற புரட்சிக் குழுவுக்கும் இடையே உடன்பாடு


அக்.17,2012. பிலிப்பின்ஸ் அரசுக்கும் Mindanao பகுதியில் உள்ள MILF என்ற புரட்சிக் குழுவுக்கும் இடையே இத்திங்களன்று கையொப்பமான ஓர் உடன்பாட்டை அப்பகுதி ஆயர்கள் மகிழ்வுடன் வரவேற்றுள்ளனர்.
பிலிப்பின்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள Mindanao என்ற தீவைத் தனி நாடாக உருவாக்க வேண்டுமென்று அப்பகுதியில் உள்ள MILF என்ற இஸ்லாம் புரட்சிக் குழுவுக்கும், அரசுக்கும் இடையே கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல்கள் நிகழ்ந்து வந்துள்ளன. இதுவரை இந்த மோதல்களில் 1,50,000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொணரும் ஒரு முயற்சியாக, அப்பகுதிக்கு தனிப்பட்ட உரிமைகளை வழங்க பிலிப்பின்ஸ் அரசு சம்மதம் வழங்கியதைத் தொடர்ந்து, புரட்சிக் குழுவினர் தங்கள் போராட்டங்களைக் கைவிடுவதாகத் தெரிவித்து ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.
இவ்வுடன்பாடு நல்லதொரு ஆரம்பம் என்று கூறிய அப்பகுதி ஆயர்கள், தொடர்ந்து இந்த ஒப்புரவு முயற்சி வளர்வதற்கு இருதரப்பினரும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
அரசுக்கும் MILF புரட்சி குழுவுக்கும் இடையே உருவாகியுள்ள இந்த உடன்பாட்டை, அப்பகுதியில் வாழும் இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் மகிழ்வுடன் வரவேற்றுள்ளனர். இந்த அமைதி உடன்பாடு 2016ம் ஆண்டிற்குள் முழு வடிவம் பெறும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.