2012-10-17 15:32:43

திருஅவையில் திருப்புமுனைகள் – அருளாளர் கதேரி தேகாவிட்டா


அக்.17,2012. யாரும் புனிதராகலாம். ஏழையும் ஆகலாம், செல்வரும் ஆகலாம், சமூகத்தால் ஒதுக்கப்பட்டுள்ள இனங்களும் ஆகலாம், எல்லாரும் ஆகலாம். மனிதர் அனைவரும் புனிதராக ஆவதற்கே அழைக்கப்பட்டுள்ளார்கள். இறைவனது ஏட்டில் பாரபட்சம் என்பதற்கு இடமே இல்லை. தூய பேதுரு, கொர்னேலியு இல்லத்தில் உரையாற்றியது போல, கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை, அவர் ஓரவஞ்சனை செய்வதில்லை, எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடப்பவரே அவருக்கு ஏற்புடையவர். அதேபோல் யோபு புத்தகம், பிரிவு 34, வசனம் 19ல், கடவுள் ஒருதலைச்சார்பாய் நடத்தமாட்டார், ஏழைகளைவிடச் செல்வரை உயர்வாகக் கருதவுமாட்டார், ஏனெனில் மனிதர்கள் அனைவரும் அவர் கைவேலைப்பாடுகள் எனச் சொல்லப்பட்டுள்ளது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த அருளாளர் கதேரி தேகாவிட்டாவின் வாழ்க்கை வரலாறை வாசிக்கும்போது கடவுளின் இந்த பாரபட்சமற்ற, ஒருதலைச்சார்பற்ற பண்பு தெளிவாகத் தெரிகிறது. 1980ம் ஆண்டில் இவரை அருளாளர் என அறிவித்தார் அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால். மறைபரப்பு ஞாயிறாகிய அக்டோபர் 21, வருகிற ஞாயிறன்று கத்தோலிக்கத் திருமறையின் புனிதர் பட்டியலில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் இணைக்கப்படவிருக்கிறார் அருளாளர் கதேரி தேகாவிட்டா. அமெரிக்கப் பூர்வீக இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கத்தோலிக்கத் திருமறையில் பீடத்தில் ஏற்றிப் போற்றப்படவிருப்பது இதுவே முதன் முறையாகும். கதேரி, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைக்குப் பாதுகாவலராகக் கத்தோலிக்கத் திருஅவையில் போற்றப்பட்டு வருகிறார். இதற்கு என்ன காரணம் எனப் பார்ப்போம்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுயார்க்கின் Ossernenonல் 1656ம் ஆண்டு வாக்கில் Mohawk பழங்குடி இனத்தில் பிறந்தவர் கதேரி தேகாவிட்டா. இவர் பிறந்த இடம் தற்போதைய Auriesvilleக்கு அருகில் உள்ளது. தேகாவிட்டாவின் திருமுழுக்குப் பெயர் கத்ரீன். இது Iroquois மொழிகளில் கதேரி என்று அர்த்தமாகும். அதாவது அனைத்தையும் ஓரிடத்தில் வைப்பது என்று பொருள். கதேரியின் தந்தை Mohawk பழங்குடி இனத்தின் தலைவராவார். அவரது தாய் ஒரு கத்தோலிக்க Algonquin. அதாவது Algonquin பழங்குடி இன மொழி பேசுபவராவார். இவர் கானடாவின் Montrealலில் ப்ரெஞ்ச் மறைபோதகர்களால் பயிற்றுவிக்கப்பட்டு கத்தோலிக்கத்தைத் தழுவினார். ஆயினும் அவரது இனத்தவர் அவரை அழைத்துச் சென்று Mohawk இனத் தலைவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். அருளாளர் கதேரி தேகாவிட்டா பற்றி அறிவதற்குமுன்னர் அவரது பூர்வீகம் பற்றியும் சிறிது தெரிந்து கொள்வோம்.
Iroquois என்பது வட அமெரிக்காவில் Mohawk, Oneida, Onondaga, Cayuga, Seneca, Tuscarora ஆகிய ஆறு பழங்குடி இனத்தவர் பகுதிகளைச் சேர்ந்த ஒரு கூட்டமைப்பாகும். இந்த மக்கள் St.Lawrence நதிக் கரையிலும், பெரிய ஏரிகள் பகுதிகளிலும் அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியிலும் வாழ்ந்தவர்கள். தற்போது இந்த இன மக்கள் நியுயார்க், கானடாவின் கியுபெக், Ontario ஆகிய இடங்களில் வாழ்கின்றனர். இவர்கள் பொதுவாக இயற்கையை வழிபடுபவர்கள். அருளாளர் தேகாவிட்டாவுக்கு நான்கு வயது நடந்தபோது அதாவது 1661ம் ஆண்டு முதல் 1663ம் ஆண்டுவரை இவரது Mohawk கிராமத்தை பெரியம்மை கடுமையாகத் தாக்கியது. இதில் Tekakwitha வின் சகோதரரும் பெற்றோரும் இறந்தனர். கதேரியும் பெரியம்மையால் தாக்கப்பட்டுக் குணமடைந்தார். ஆயினும் இவரது முகம் முழுவதும் அம்மைத் தழும்புகள். கண்பார்வையும் கொஞ்சம் பாதிக்கப்பட்டது. சூரியஒளி இவளது பார்வையைப் பிடுங்கிக் கொண்டது. ஆயினும், அவள் நடந்து செல்லும்போது அவளால் அவள் செல்லும் வழியைக் கண்டு கொள்ள முடியும். Tekakwithaவின் பெற்றோர் இறந்த பின்னர் இவரது அத்தைகள் மற்றும் தாய் மாமாவாகிய Kanienkehaka பழங்குடி இனத் தலைவரது கண்காணிப்பில் வளர்ந்தார். இவளது கிராமத்தினர் அந்த இடத்தைவிட்டு விட்டு Mohawk ஆற்றின் வடகரையில் குடியேறினர். இவ்விடம் தற்போது நியுயார்க்கின் Fonda ஆகும்.
Tekakwithவின் இளமைப்பருவம் மற்ற பழங்குடி இனச் சிறுமிகளுடன் ஆடல்பாடல்களுடன் கழிந்தது. இயற்கையோடு இணைந்து வாழ்ந்து தங்களது எதிர்கால வாழ்வுக்குத் திட்டமிட்டனர். ஒரு இனிய இளைஞியாக, அதேசமயம் கூச்ச சுபாவம் உள்ளவளாக இருந்தாள் Tekakwitha. வயல்களில் வேலை செய்து அத்தைமார்களுக்கு உதவினாள். பக்கத்திலுள்ள காடுகளுக்குச் சென்று மருந்துகள் தயாரிக்கத் தேவையான செடிகளின் வேர்களைச் சேகரித்து வந்தாள். காடுகளில் விறகு பொறுக்கினாள். நீர் ஊற்றுக்களிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தாள். அம்மைத் தழும்புகள் இருந்ததால் தலையில் எப்போதும் முக்காடு போட்டிருப்பாள். இவள் பாசிமணிகள் கோர்ப்பதில் திறமைசாலி. இவள் சிறுவயதிலே திருமுழுக்குப் பெறாவிட்டாலும் அவளது தாய் செய்த செபங்களையும் கத்தோலிக்க விசுவாசத்தைப் பற்றிய தாயின் போதனைகளையும் இவள் மறக்கவில்லை. இந்த நினைவுகளே Tekakwitha தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கக் காரணமாயின. காட்டிற்கு அடிக்கடித் தனியாகச் சென்று கடவுளிடம் பேசினாள். அவளது இதயத்திலும் இயற்கையின் குரலிலும் அவர் பேசுவதைக் கேட்டாள்.
கதேரிக்கு 18 வயது நடந்தபோது இயேசு சபை மறைபோதக அருள்தந்தை Jacques de Lamberville என்பவர் Caughnawaga என்ற இடத்துக்குச் சென்று அங்கு ஒரு சிற்றாலயம் கட்டினார். கதேரியின் மாமா இந்தப் புதிய மதத்தை விரும்பாவிட்டாலும் மறைபோதகர்களின் பிரச்சனத்தைச் சகித்துக் கொண்டார். கதேரி தனது தாய் சொன்ன கதைகளைக் கேட்டிருந்ததால் இந்தப் புதிய மதத்தால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவரானார். அருள்தந்தை de Lamberville, Tekakwithaவின் மாமாவைச் சரிகட்டினார். Tekakwitha, கத்ரீன் எனப் புதுப்பெயர் சூட்டப்பட்டார். கத்ரீன் என்றால் Mohawk மொழியில் கதேரி என்பதாகும். இருந்தபோதிலும் இவளது குடும்பம் இவளது மதமாற்றத்தை ஏற்கவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் இவள் வேலை செய்யாமல் இருந்ததால் அன்று இவளுக்கு உணவு கொடுக்க மறுத்துவிட்டனர். சிறார்கள் இவளைக் கேலிசெய்து இவள்மீது கல்லெறிந்தார்கள். இவள் கிறிஸ்தவத்தை மறுதலிக்கவில்லையெனில் சித்ரவதைப்படுத்துவதாகவும் கொலை செய்யப்போவதாகவும் குடும்பத்தினர் மிரட்டினர். தனது குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தியதால் தனது கிராமத்தைவிட்டு வெளியேறினார். தனது வாழ்வு முழுவதையும் கடவுளுக்கு அர்ப்பணமாக்க விரும்பி 1667ம் ஆண்டு ஜூலையில் காடுகள், ஆறுகள், சதுப்புநிலம், சேறு சகதி நிலம் என 322 கிலோ மீட்டர் கடந்து Montrealலுக்கு அருகில் Sault Saint-Louisல் இருந்த புனிதFrancis Xavier கத்தோலிக்க மறைப்பணி மையத்தை அடைந்தாள். இவ்வாறு இவள் வந்து சேர இரண்டு மாதங்கள் எடுத்தன. இவளது மனஉறுதியைக் கண்ட இயேசு சபை குருக்கள் 1677ம் ஆண்டு கிறிஸ்மஸ் அன்று புதுநன்மை கொடுத்தார்கள்.
கதேரிக்கு ஒழுங்காக எழுத வாசிக்கத் தெரியாது. ஆனால் செப தப வாழ்வை மேற்கொண்டார். தனது இனமக்கள் மனம் திரும்ப வேண்டும் என்பதற்காக முள்களைப் பரப்பி அதன்மீது படுப்பாள். கிராமத்தில் நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் உதவி செய்தாள். தான் சந்தித்த எல்லாருடனும் கனிவுடன் பேசினாள். குச்சிகளில் சிலுவைகள் செய்து காடுகளில் எல்லா இடங்களிலும் வைப்பது இவளது வழக்கம். இந்தச் சிலுவைகளை, சிலுவைப்பாதை நிலைகளாக நினைத்துச் செபம் செய்வாள். கடவுளுக்கு எது விருப்பம் என்று யாரும் சொன்னால் அதைச் செய்வதற்குத் தாந் தயார் என்று இவள் சொல்வது வழக்கம். ஆலயத்தில் மணிக்கணக்காய் முழந்தாளிட்டுச் செபித்தாள். திருநற்கருணைமீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். மரங்களில் சிலுவை வரைந்து அங்கு மணிக்கணக்காய்ச் செபம் செய்வாள். பனியில் முழந்தாள்படியிட்டுச் செபிப்பாள். இவள் செபிக்கும்போது முகத்தோற்றம் மாறுதல் அடையுமாம். அவளது கழுத்தில் எப்பொழுதும் செபமாலை தொங்கும்.
கதரி இயேசு பற்றிச் சொன்ன கதைகளை உடன் இருந்தவர்கள் களைப்படையாமல் கேட்பார்களாம். நோயால் பாதிக்கப்ப்ட்டு தனது 24வது வயதில் 1680ம் ஆண்டில் இறந்தாள். இவள் இறந்த போது இவளது முகத்திலிருந்த அம்மைத் தழும்புகள் மறைந்து விட்டனவாம். இவள் அருகில் இருந்து பார்த்த இரண்டு இயேசு சபை குருக்களும் மற்றவர்களும் இதை ஒரு பெரிய புதுமையாகச் சொல்கிறார்கள். "இயேசுவே, நான் உம்மை அன்பு செய்கிறேன்" என்ற வார்த்தைகளே இவள் இறக்குமுன்னர் சொன்னவை. கதேரி பற்றிச் சொல்லும் நியுயார்க்கின் Ogdensburg ஆயர் Stanislaus Brzana, "கதேரி குழந்தை இயல்பு கொண்டவர். இவள் புனிதராக உயர்த்தப்படுவது இயற்கையை அன்புசெய்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தூண்டும்" எனக் கூறினார். கதேரியின் வாழ்வு குறுகியது, அழகானது. கதேரி, Mohawk மக்களின் லில்லி மலர்" எனவும் "உண்மையான மனிதர் மத்தியில் இருக்கும் அழகான மலர்" என்றும் போற்றப்படுகிறாள்.
கதேரியின் விழா அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஜூலை 14ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால், 2002ம் ஆண்டு உலக இளையோர் தினத்துக்குப் பாதுகாவலராக இவரை அறிவித்தார். கதேரி சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு எடுத்துக்காட்டு. வருகிற ஞாயிறன்று இவரைப் புனிதர் என அறிவிப்பார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.