2012-10-17 15:45:58

சிரியாவுக்குச் செல்லவுள்ள உலக ஆயர்கள் மாமன்றப் பிரதிநிதிகள் குழு


அக்.17,2012. சிரியாவில் இடம்பெற்றுவரும் கடும் சண்டையினால் துன்புறும் மக்களுக்குப் பாதுகாப்பும் பரிவும் வழங்கப்படுமாறு திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே கேட்டுக்கொண்டார்.
இச்செவ்வாய் மாலை இடம்பெற்ற 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 14வது பொது அமர்வின் தொடக்கத்தில் பேசிய கர்தினால் பெர்த்தோனே, சிரியாவில் இடம்பெற்றுவரும் அச்சமூட்டும் கொடுமைகள் நிறுத்தப்படுவதற்கு அரசியல்ரீதியாகத் தீர்வு காணப்படுமாறு வலியுறுத்தினார்.
இந்த ஆயர்கள் மாமன்றத்தில் சிரியா குறித்து சில மாமன்றத் தந்தையர் பகிர்ந்து கொண்டதைக் குறிப்பிட்ட கர்தினால் பெர்த்தோனே, இந்தப் பிரச்சனைக்கு அரசியல்ரீதியாக மட்டுமே தீர்வு காண முடியும் எனினும், துன்புறும் இம்மக்களுடன் திருத்தந்தையும், ஆயர்கள் மாமன்றத் தந்தையரும், மற்ற பிரதிநிதிகளும் கொண்டுள்ள ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதற்காக அந்நாட்டுக்கு ஒரு பிரதிநிதிக் குழுவை அனுப்புவதற்குத் திருத்தந்தை தீர்மானித்துள்ளார் என்று அறிவித்தார்.
மாமன்றத் தந்தையரைக் கொண்ட இந்தப் பிரதிநிதிகள் குழு இன்னும் சில நாள்களில் தமாஸ்கு சென்று துன்புறும் இம்மக்களுடன் திருத்தந்தையும், ஆயர்கள் மாமன்றத் தந்தையரும், மற்ற பிரதிநிதிகளும் கொண்டுள்ள ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் என்றும் அறிவித்தார் கர்தினால் பெர்த்தோனே.
Kinshasa பேராயர் கர்தினால் Mosengwo, திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, நியுயார்க் பேராயர் திமோத்தி டோலன், கொலம்பிய இராணுவ ஆன்மீக ஆலோசகர் ஆயர் Fabio Suescun Mutis, Phat Diem ஆயர் Joseph Nguyen Nang, திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி, திருப்பீடச் செயலகத்தின் பேரருட்திரு ஆல்பெர்த்தோ ஒர்த்தேகா ஆகியோரைக் கொண்ட குழு அடுத்த வாரத்தில் சிரியா செல்லும் என கர்தினால் பெர்த்தோனே அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.