2012-10-16 16:39:31

ஆயர்கள் மாமன்றத்தில் : குடும்பங்களைப் பாதுகாப்பதற்குப் பன்னாட்டு அளவில் யுக்திகள் தேவை


அக்.16,2012. இத்திங்கள் மாலை இடம்பெற்ற 12வது பொது அமர்வில் 249 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர். 16 மாமன்றத் தந்தையர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த அமர்வின் இறுதியில் “ஐரோப்பாவின் மணிகள்” என்ற குறும்படம் திரையிடப்பட்டது.
கிறிஸ்தவத்துக்கும், ஐரோப்பியக் கலாச்சாரத்துக்கும் வருங்கால ஐரோப்பாவுக்கும் இடையே இருக்கும் உறவுகள் என்ற தலைப்பிலான இப்படத்தைப் பார்த்த திருத்தந்தை, கிறிஸ்தவத்தின் ஒரு புதிய வசந்தம் தெரிவதாகக் கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆங்லிக்கன் பேராயர், கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தலைவர், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் எனப் பல தலைவர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல்கள் இப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த ஆயர்கள் மாமன்றத்தில் பேசிய இத்தாலியப் பேராயர் வின்சென்சோ பாலியா, குடும்பங்களைப் பாதுகாப்பதற்குப் பன்னாட்டு அளவில் யுக்திகள் தேவை என்றும், குடும்பங்களின் முக்கியத்துவம் குறித்து உலகின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார அளவில் வலியுறுத்தப்பட வேண்டுமென்றும் கூறினார்.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு வயதுவந்தவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று பேசிய பிட்ஸ்பெர்க் பேராயர் வில்லியம் ஸ்கூர்லா, பிரமாணிக்கமான கத்தோலிக்கர் திருஅவையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றனர் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.