2012-10-16 16:37:04

ஆயர்கள் மாமன்றத்தில் : இருபதாம் நூற்றாண்டின் மறைசாட்சிகளின் இரத்தம் கிறிஸ்தவ வாழ்வுக்குப் புத்துயிர் கொடுத்துள்ளது


அக்.16,2012. இருபதாம் நூற்றாண்டின் மறைசாட்சிகளின் இரத்தம் கிறிஸ்தவ வாழ்வை உயிர்த்துடிப்புள்ளதாக்கியுள்ளது மற்றும் பல ஆண்டுகள் சர்வாதிகாரத்தால் உருவாக்கப்பட்ட வெறுமையையும் அது நிறைத்துள்ளது என்று இச்செவ்வாய் காலையில் இடம்பெற்ற 13வது பொது அமர்வில் கூறப்பட்டது.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்து வத்திக்கானில் நடைபெற்றுவரும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 13வது பொது அமர்வில் பேசிய மாமன்றத் தந்தையர்கள், 2010ம் ஆண்டில் நிலநடுக்கத்தால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டு சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஹெய்ட்டித் தலத்திருஅவைக்குத் தங்களது ஆதரவையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தனர்.
கம்யூனிச சர்வாதிகார ஆட்சியில் துன்பங்களை அனுபவித்தத் திருஅவைகளைச் சேர்ந்த மாமன்றத் தந்தையர் பேசுகையில், அப்போது அனுபவித்த துன்பங்கள் விசுவாசத்திற்கு உறுதியான சான்றுகளாக உள்ளன என்று கூறினர்.
மேலும், சீனாவின் Fengxiang ஆயர் Lucas Ly அனுப்பியுள்ள குறுஞ்செய்தியை இந்தக் காலை பொது அமர்வு தொடங்கியதும் வாசித்தார் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலர் பேராயர் நிக்கொலா எத்ரோவிச்.
சீனாவில் இருபது ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் 1979ம் ஆண்டில் விடுதலையான 90 வயதாகும் ஆயர் Lucas Ly, இந்த ஆயர்கள் மாமன்றப் பணிகளைத் தனது செய்தியில் ஊக்குவித்துள்ளார்.
இந்தப் பொது அமர்வில் 252 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.