2012-10-15 16:29:21

வாரம் ஓர் அலசல் – நமக்கு நேர்வதெல்லாம், நம்மால் நேர்வதே


ஒருநாள் ஒரு கழுகு
மலைச் சிகரத்திலிருந்து எழுந்து
கர்வத்தோடு தன் சிறகை
விரித்து வானத்தில் உயரே
பறந்தது.

தன் விரிந்த இறகுகளைப்
பார்த்து மெச்சியபடி கூறியது:
இன்று பூமியின் முகம்
என் சிறகுகளின் கீழே
கிடக்கிறது.

நான் மேல் நோக்கிப்
பறந்தால்
சூரியனுக்கு அப்பால்
செல்ல முடியும்.
நான் கீழே
பார்வையைச் செலுத்தினால்
கடலுக்கு அடியில் இருக்கும்
அணுவைக்கூடப் பார்க்க முடியும்.
இப்படிப் பெருமையடித்துக் கொண்டு
அது பறந்து கொண்டிருந்தபோது
வில்லில் வல்லவன் ஒருவன்
அதைநோக்கி அம்பு எய்தான்.
கழுகின் சிறகில் தைத்த அம்பு,
அதை வானத்திலிருந்து
பூமிக்குக் கொண்டு வந்தது.

மண்ணில் விழுந்த கழுகு
சிறகடித்துக் கொண்டு
மீனைப்போல் துடித்தது.
ஒரு சின்ன இரும்புத் துண்டுக்கும்
மரக் குச்சிக்கும்
எப்படி இப்படி வேகமாகப் பறந்து தாக்கும்
வல்லமை கிடைத்தது என்று
வியந்தது.
அது அம்பை உற்றுப் பார்த்தது.
அதில் தன் சொந்த
இறகுகளைக் கண்டது.

அது கூறியது:
நான் யாரைக் குறை சொல்வது
நமக்கு நேர்வதெல்லாம்
நம்மால் நேர்வதே.

பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் Nasir Khusraw எழுதிய கவிதை இது. வேடன் அம்பு எய்யும்போது குறிதவறாமல் இருப்பதற்காக அதன் நுனியில் கழுகின் இறகைக் கட்டிக்கொள்வது வழக்கம். இதனால்தான் இந்தக் கழுகு இப்படிச் சொன்னது. ஆம் அன்பர்களே, இந்தக் கழுகு சொன்னது போன்று, நமக்கு நேர்வதெல்லாம், நம்மால் நேர்வதே. இந்தக் கூற்றில்தான் எவ்வளவு ஆழமான உண்மை பொதிந்து கிடக்கிறது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்(FAO), வேளாண்மை வளர்ச்சிக்கான அனைத்துலக நிதி நிறுவனம்(IFAD), உலக உணவுத் திட்ட நிறுவனம்(WFP) ஆகிய மூன்று ஐ.நா. நிறுவனங்கள் சேர்ந்து கடந்த வாரத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளன. FAO பொது இயக்குனர் ஹோசே கிராசியானோ த சில்வா இவ்வறிக்கை குறித்துப் பேசுகிறார்.....

2010க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகில் தங்களது வாழ்நாள்களில் நீண்டகாலமாக சத்துணவுப் பற்றாக்குறைவால் துன்புற்றுக் கொண்டிருப்போர் ஏறக்குறைய 87 கோடி. இந்த எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் எட்டில் ஒரு பாகம். இப்படித் துன்புறுவோரில் 30 கோடிப் பேர் சிறார்கள். இவர்களில் ஏறக்குறைய 98 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர். ஆசியக் கண்டம், சத்துணவுப் பற்றாக்குறைவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்கக் கண்டத்தில் மட்டும்தான் பசிக்கொடுமை அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஆப்ரிக்காவில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டு கோடியாகும். இத்தகைய கவலைதரும் நிலைக்கு மத்தியிலும், உலகில் பசிக்கொடுமையைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கையுடனே ஐ.நா.நிறுவனங்கள் இருப்பதாக அந்தப் புதிய அறிக்கை கூறுகின்றது. ஏனெனில் 1990களில் பசியோடு படுக்கைக்குச் சென்ற மக்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் தற்போது அவ்வாறு செல்பவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 20 இலட்சம் குறைவு என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. மனித முன்னேற்றம் குறித்த எட்டு இலக்குகளை 2015ம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு ஐ.நா.வின் 189 உறுப்பு நாடுகள், இரண்டாயிரமாம் ஜூபிலி ஆண்டில் இசைவு தெரிவித்தன. அதில் ஒன்று சத்துணவுப் பற்றாக்குறைவால் துன்புறுவோரின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைப்பதாகும்.

இந்த உலகில் ஒரு கணிசமான தொகையினர் பசியாலும் சத்துணவுப் பற்றாக்குறைவாலும் நீண்ட காலமாகத் துன்புற்று வருகிறார்கள் என்றால் அது மனிதராகிய நம்மால் நேர்ந்ததே. உலகில் உணவுப்பற்றாக்குறையால், ஊட்டச்சத்துணவு இல்லாமையால் ஒருபக்கம் மக்கள் மடிய, இன்னொரு பக்கம் உணவுப் பொருள்கள் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகில் ஒவ்வோர் ஆண்டும் வீணாக்கப்படும் உணவின் மதிப்பு 293 கோடி அமெரிக்க டாலர் எனவும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் வீடுகளில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 4 கோடி டன் உணவுப் பொருள்களும் இத்தாலிய உணவுப்பொருள் அங்காடிகளில் 4 இலட்சத்து 50 ஆயிரம் டன் உணவுப் பொருள்களும் வீணாக்கப்படுகின்றன எனவும் ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இப்படி வீணாக்கப்படும் உணவுப் பொருள்கள் வெளியேற்றும் கார்பன்டை ஆக்ஸைடு வாயு சுற்றுச்சூழலையும் மிகவும் பாதிக்கின்றது. எடுத்துக்காட்டாக, தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவிலிருந்து ஒரு கிலோகிராம் cherrie பழங்களை உரோம் நகருக்குக் கொண்டு வருவதற்கு 12 ஆயிரம் கிலோ மீட்டர் விமானப் பயணம் தேவைப்படுகின்றது. இந்தப் பயணத்தில் இவை ஏறக்குறைய 16 கிலோ கிராம் அளவு கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுவதாகச் சொல்லப்படுகின்றது.

இந்தியாவிலுள்ள அரசு சேமிப்புக் கிடங்குகளில், 2008ம் ஆண்டிலிருந்து இதுவரை 36 ஆயிரம் டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக, கடந்த செப்டம்பர் 28ம் தேதி ஓர் அதிர்ச்சிச் செய்தி வெளியானது. வீணடிக்கப்பட்ட இந்த உணவுத் தானியங்கள் மூலம், எட்டுகோடி மக்களின் பசியை போக்கியிருக்க முடியும் என்றும் கூறப்பட்டிருந்தது. கடந்த ஐந்தாண்டுகளில், இந்திய உணவுக் கழகத்துக்கு (எப்.சி.ஐ.,) சொந்தமாக, நாடு முழுவதும் உள்ள சேமிப்புக் கிடங்குகளில், எவ்வளவு உணவு தானியங்கள் கெட்டுப் போயின' என்பது பற்றிய விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தேஜிந்தர் பால் சிங் பக்கா என்பவர் கேட்டிருந்தார். அதற்கு அளிக்கப்பட்ட பதிலில்தான் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. பயன்படுத்தப்பட முடியாத அளவுக்கு கடந்த ஐந்தாண்டுகளில் 36 ஆயிரம் டன் உணவு தானியங்கள் கெட்டு போயின. இதில், அதிகபட்சமாக, இந்தியாவின் உணவு தானியக் களஞ்சியம் என அழைக்கப்படும், பஞ்சாபில்தான், 19,290 ஆயிரம் டன், உணவு தானியங்கள் அழுகி விட்டன எனச் சொல்லப்பட்டிருந்தது.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சனை கடந்த பல நாள்களாக இரண்டு மாநிலங்களில் கடுமையாய் இடம்பெற்று வருவது நம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். காவிரி நடுவர் மன்றம் அனுமதித்த அளவைவிட பல இலட்சம் ஏக்கர் அதிகமாக கர்நாடகம் சாகுபடி செய்துள்ளதாக இந்திய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட செய்தியும் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியானது. ஒருபக்கம் மக்கள் பசியாலும் பஞ்சத்தாலும் செத்துக் கொண்டிருக்க, மறுபக்கம் தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வாழும் நிலையைத்தான் நாம் வாழும் இக்காலத்தில் காண முடிகின்றது. நமக்கு நேர்வதெல்லாம், நம்மால் நேர்வதே. அதாவது மனிதருக்கு நேர்வதைத் தடுத்து நிறுத்துவதற்கு மனிதரால் முடியும். சூறைக்காற்றில் கோபுரத்தின் உச்சியில் விழுந்த எச்சில்இலை, தன்னைவிட உயர்ந்தவன் யார் என்று கர்வம் கொண்டதாம். ஆனால் எந்தக் காற்றால் அது கோபுரத்தின் உச்சிக்குச் சென்றதோ அதே காற்றால் அது கீழே விழுந்தது அடுத்த கதை. இதுதான் இன்று நடப்பது. எந்தச் சக்தியால் ஒருவர் அரியணையில் அமர்ந்து அட்டூழியம் செய்கிறாரோ அதே சக்தியாலே அவர் அரியணையிலிருந்து இறக்கப்படுவார். இதையும் நாம் எல்லா நாடுகளிலும் கண்கூடாகக் கண்டு வருகிறோம். மனிதருக்கு நல்லது செய்யாத எவரும் எந்த மனிதாரால் உய்வுபெற்றாரோ அதே மனிதரால் உதைத்துக் கீழே தள்ளப்படுவார் என்பது எழுதி வைக்கப்படாத உண்மை.

இன்று பசிப்பிணியாலும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவாலும் மட்டுமல்ல, தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களாலும் பலர் உயிரிழந்து வருகின்றனர். உலக நலவாழ்வு நிறுவனத்தின்(WHO) அண்மை அறிவிப்பின்படி, தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களால் ஐந்து வயதுக்கு உட்பட்ட 15 இலட்சம் சிறார் இறக்கின்றனர். இது உலகில் இடம்பெறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறாரின் இறப்பில் 17 விழுக்காடாகும். இந்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டாலும், இன்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட 70 இலட்சம் சிறார் ஆண்டுதோறும் இறக்கின்றனர். தினமும் இருபதாயிரம் சிறார் என்ற கணக்கில் இந்த இறப்பு இடம்பெறுகின்றது. அதிலும், சாப்பிடுவதற்கு முன்னால் கைகளை ஒழுங்காகக் கழுவாத காரணத்தினால், அதிலும் கையால் சாப்பிடும் பழக்கம் உள்ள இந்தியாவில் கைகளை ஒழுங்காகக் கழுவாமல் சாப்பிடுவதால் வருடத்திற்கு ஐந்து இலட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே காரணத்தினால் உலக அளவில் 29 இலட்சம் குழந்தைகள் இறக்கின்றனர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது. எனவே வளரும் நாடுகளிலும் வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளிலும் கைகழுவுதல் குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவை எனவும் இந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஒழுங்காகக் கைகளைக் கழுவினால் வயிற்றுப்போக்கு, மூச்சுச் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து இலட்சக்கணக்கான சிறாரைக் காப்பாற்றலாம்.

நமக்கு நேர்வதெல்லாம், நம்மால் நேர்வதே. உண்மைதான். நமக்கு நிகழும் எதிர்மறை நிகழ்வுகளை நம்மால் தடுக்க முடியும். அக்டோபர் 15, உலகக் கைகழுவும் தினம், அக்டோபர் 16, உலக உணவு தினம், அக்டோபர் 17, உலக வறுமை ஒழிப்பு தினம். இந்த மூன்று உலக தினங்களுமே ஒரு விதத்தில் ஒன்றையொன்று சார்ந்து உள்ளன. குழந்தைகளுக்கும் பள்ளிச்சிறாருக்குமென ஆரம்பிக்கப்பட்ட கைகழுவும் தினத்தில் யாரும் சேரலாம் என்று ஐ.நா.கூறுகிறது. “வேளாண்மைக் கூட்டுறவு அங்காடிகள் : உலகுக்கு உணவூட்டுவதற்கு முக்கியமானவை” என்ற தலைப்பில் இச்செவ்வாயன்று உலக உணவு தினமும், “வறுமையை ஒழிக்கச் சேர்ந்து செயல்படுவோம்” என்ற தலைப்பில் இப்புதனன்று உலக வறுமை ஒழிப்பு தினமும் கடைப்பிடிக்கப்படுகின்றன. பசியையும் நோயையும் ஏழ்மையையும் ஒழிக்க நம்மால் எதுவும் செய்ய முடியாதா அன்புள்ளங்களே!.

நமக்கும் நம் குழந்தைகளுக்கும் நேர்வதை நாம்தானே தடைசெய்து நிறுத்த வேண்டும். எனவே பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கும் தங்கள் ஊர்க் குழந்தைகளுக்கும் சில அறிவுரைகளைச் சொல்லலாமே. "சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்" என்பது நம் முன்னோர்களின் முதுமொழி. ஒரு நாட்டின் நலவாழ்வுதான் அந்நாட்டின் வளம். இந்த நலவாழ்வைப் பெறும் வழிமுறைகளில் மிக முக்கியமானது நம் கைகளைச் சுத்தப்படுத்துவதாகும். காற்று, நீர் மற்றும்பிற பொருட்களைத் தொடுவதன் மூலமும் ஏராளமான நோய்கள் பரவுகின்றன. எனவே கற்றுக்கொள்வோம், கற்றுக்கொடுப்போம்.

காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவிவிட்டு பல் துலக்கவும்,
கழிப்பறைக்குச் சென்று வந்தபின் சோப்பு போட்டு கைகளைக் கழுவவும்,
எந்த வேலை செய்தாலும், வாகனம் ஓட்டி வந்தபின்பும், சமைத்த பின்பும்கூட கைகளைக் கழுவவும்,
குழந்தைகளுக்கு எந்த உணவு கொடுப்பதற்குமுன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவியபின்பே கொடுக்கவும்,
கைகளைக் குறைந்தது 30 வினாடியாவது கழுவவும்,
அதிக வேதியப்பொருள் கலந்த சோப்புகளையும், பசைகளையும் பயன்படுத்தாது இருக்கவும்,
கற்றுக்கொள்வோம், கற்றுக்கொடுப்போம்.
இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, நோய்கள் நெருங்காத வண்ணம் 60 விழுக்காடு தடுக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

புக்கர் வாஷிங்டன் என்பவரது அகராதியில், என்னால் முடியாது, எனக்கு இது கிடைக்காது என்பதெல்லாம் இல்லையாம். அவருக்கு ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க ஆசை. ஆனால் அங்கு கறுப்பர்களுக்கு இடம் இல்லை என்பது தெரிந்திருந்தும் அங்குச் சென்று கேட்டார். மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது என்றார்கள். அப்படியானால் ஏதாவது வேலை கொடுங்கள் என்று கேட்க, துப்புரவு வேலை கொடுத்தார்கள். அந்த வேலையைச் செய்து கொண்டே அந்தப் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தார். பின்னர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். எழுநூறுமுறை அவரது ஆராய்ச்சிகள் தோல்வியில் முடிந்தபோதும், இந்த வழியில் அல்ல, வேறு வழியில் முயற்சிப்போம் என்று தொடர்ந்து முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றார். அடைந்தே தீருவேன் என்ற உறுதி உள்ளத்தில் உருவாகிவிட்டால் அதற்கு அணைபோட்டுத் தடுக்க யாராலும் முடியாது.

ஆம். நமக்கு நேர்வதெல்லாம், நம்மால் நேர்வதே. நாம் மனது வைத்தால் எதையும் சாதிக்கலாம்.







All the contents on this site are copyrighted ©.