2012-10-15 16:45:42

மாமன்றத் தந்தையர் மாலி நாட்டில் அமைதிக்கு அழைப்பு


அக்.15,2012. மாலி நாட்டில் தற்போதைய இடைக்கால அரசுக்கும் புரட்சிக்குழுவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் சண்டை மதத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று இத்திங்கள் காலை பொது அமர்வில் 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் கூறினர்.
ஆப்ரிக்காவின் மாலி நாடு தற்போது எதிர்கொள்ளும் சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகள், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்குத் தடைகளாக இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டிய மாமன்றத் தந்தையர், அந்நாட்டுக்கு அமைதி மற்றும் உரையாடலின் முக்கியத்துவம் குறித்துப் பேசினர்.
ஆப்ரிக்காவைத் தவிர, ஐரோப்பாவிலும், உலகமயமாக்கல் இரத்தம்சிந்தாத புதியவடிவ மறைசாட்சித்தன்மைகளை உருவாக்கியிருக்கின்றன, கடவுள் மறுக்கப்பட்டவராக மட்டுமல்லாமல், அறியப்படாதவராகவும் இருக்கிறார் என்றும் மாமன்றத் தந்தையர் பேசினர்.
பொதுநிலை விசுவாசிகளின் உருவாக்குதல், குடும்பங்களைப் பாதுகாத்தல், பல்வேறு கிறிஸ்தவ மற்றும் பல்சமயங்களுக்கு இடையே உரையாடலை ஊக்குவித்தல் போன்ற தலைப்புக்களில் இம்மாமன்றத் தந்தையர் உரையாற்றினார்கள்.
திருஅவையின் மறைவல்லுனராகிய புனித அவிலாத் தெரேசாள் திருவிழாவாகிய இத்திங்கள் காலை திருத்தந்தையின் முன்னிலையில் செபத்துடன் தொடங்கிய 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 11வது பொது அமர்வில் 251 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர்.
ஹாங்காங் ஆயர் கர்தினால் John TONG HON தலைமையில் ஆரம்பித்த இந்தப் பொது அமர்வில் குரோவேஷியாவின் Zagreb பேராயர் கர்தினால் Josip BOZANI, திருப்பீட குடியேற்றதாரர் மர்றும் புலம்பெயர்வோர்க்கான அவைத் தலைவர் கர்தினால் Antonio Maria VEGLIÒ, இத்தாலியின் San Marino-Montefeltro ஆயர் Luigi NEGRI போன்ற மாமன்றத் தந்தையர் உரையாற்றினர்.
இந்தப் பொது அமர்வின் இறுதியில் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலர் பேராயர் நிக்கொலா எத்ரோவிச், “ஆயர் : உலகின் நம்பிக்கைக்கு இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் பணியாளர்” என்ற தலைப்பில் நடந்த 10வது உலக ஆயர்கள் மாமன்றம் குறித்த தொகுப்பு ஒன்றைத் திருத்தந்தையிடம் கொடுத்தார். திருத்தந்தையும் அனைவருக்கும் ஒவ்வொரு பிரதியை வழங்கினார்.







All the contents on this site are copyrighted ©.