2012-10-13 15:53:48

பொதுக்காலம் - 28ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


அக்.13,2012 RealAudioMP3 . பூஜ்யத்திற்கு, சைபருக்கு மதிப்பு இருக்கிறதா? இருக்கிறது. தனியாக இருக்கும்போது இல்லாத மதிப்பு, இன்னொரு எண்ணோடு ஒட்டிக்கொண்டதும், தொற்றிக் கொண்டதும் வந்து விடுகிறது. பூஜ்யத்தைப் பற்றி ஏன் இந்த திடீர் ஆராய்ச்சி?
வறியோர்களின் எண்ணிக்கையில் உலகில் முன்னணி இடத்தில் உள்ள இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஒரு வீடு உலகத்திலேயே அதிக செலவில் கட்டப்பட்டுள்ள வீடு என்று சொல்லப்படுகிறது. வீட்டின் மதிப்பு? 4000 கோடி ரூபாய். 4000 கோடிக்கு எத்தனை பூஜ்யங்கள்? இங்குதான் ஆரம்பித்தது என் பூஜ்ய ஆராய்ச்சி.
உலக சந்தையில் ஏறத்தாழ 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த வீட்டில் குடியிருப்பவர்கள் 6 பேர் - அம்மா, மகன், மனைவி அவர்களது மூன்று பிள்ளைகள்... இந்த ஆறு பேருக்கு உதவி செய்ய 600 வேலைக்காரர்கள். இந்த வீட்டைப்பற்றி பொறாமையில் நான் புழுங்குவதாக, புலம்புவதாக நினைக்கவேண்டாம். செல்வத்தைப்பற்றி, செல்வந்தர்களைப்பற்றி இயேசு இன்றைய நற்ச்செய்தியில் கூறியது இப்படிப்பட்ட சிந்தனைகளை ஆரம்பித்து வைத்தது.
ஏராளமாய் சொத்து இருந்த ஒருவர் நிலைவாழ்வு பெற என்ன வழி என்று தேடி இயேசுவிடம் வந்தார் என இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இயேசு அவரிடம் கட்டளைகளைக் கடைபிடிக்கச் சொல்கிறார். அவரோ அதற்கும் மேல் என்ன செய்வது என்று கேட்கும்போது, இயேசு: "நீ சேர்த்த செல்வங்களை எல்லாம் ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு என் பின்னே வா." என்கிறார். அவர் எதிபார்க்காத சவால் இது. இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது என இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். அவர் தேடிவந்த நிலை வாழ்வைவிட, அவருடைய சொத்துகள் அவரை அதிகமாய் பற்றியிருந்ததால், அவரால் இயேசுவின் சவாலை ஏற்க முடியவில்லை. போகும்போது அவர் இயேசுவை திரும்பி, திரும்பி பார்த்துக்கொண்டே போயிருப்பார். எந்த ஒரு நிமிடமும், இயேசு இன்னொரு எளிதான வழியைச் சொல்லமாட்டாரோ என்ற ஏக்கத்தில் அவர் அப்படி பார்த்தபடியே சென்றிருப்பார்.
இயேசுவும் அவரைக் கனிவோடு பார்த்தபடியே நின்றிருப்பார். இத்தனைச் செல்வங்கள் இருந்தும் அவர் கடவுள் மட்டில் இவ்வளவு ஈடுபாடு கொண்டு, கட்டளைகளை எல்லாம் இளவயது முதல் கடைபிடித்திருக்கிறாரே என்று, இயேசுவுக்கு அவர் மேல் மதிப்பு இருந்திருக்கும்... ஆனாலும், என்ன செய்வது? அவரால் அடுத்த நிலைக்கு உயர முடியவில்லையே என்று இயேசுவுக்கு அவர் மேல் பரிதாபம் ஏற்பட்டிருக்கும். அந்த பரிதாப உணர்வில் வெளிவந்ததுதான் ஆழமான வார்த்தைகள்: “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.”
இயேசுவின் இந்த கூற்று சீடர்களைத் திகைப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தியதாக நற்செய்தி சொல்கிறது. திகைப்பும் வியப்பும் இருக்காதா பின்னே? செல்வந்தர் இறையாட்சிக்கு உட்படுவது மிக, மிக எளிது; விண்ணக வாசலில் அவர்கள் வரிசையில் நிற்கக்கூட தேவையில்லை; அவர்களுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என இஸ்ரயேல் மக்கள் நம்பிவந்தபோது, "மன்னிக்கவும். அவர்களுக்கு விண்ணரசில் இடம் இல்லை. அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு முயன்றால், ஒருவேளை நிறைவாழ்வுக்குச் செல்லமுடியும்." என்று இயேசு சொன்னது அதிர்ச்சியைத் தராமல் என்ன செய்யும்? செல்வத்தைப்பற்றி, செல்வந்தரைப்பற்றி சீடர்கள் கொண்டிருந்த எண்ணங்களைத் தலைகீழாகப் புரட்டி, அவர்களைச் சிந்திக்கவைத்தார் இயேசு. இன்று நமக்கும் செல்வம், செல்வந்தர் இவற்றைப்பற்றி சிந்திக்க இந்த நற்செய்தி மூலம் ஓர் அழைப்பு விடுக்கிறார்.
செல்வம் சேர்ப்பது, செல்வங்களால் சிறைப்படுவது, செல்வத்தைப் பகிர்வது என்று மூன்று கோணங்களில் செல்வத்தைப்பற்றி சிந்திக்கலாம். ஒருவர் தன் சொந்த முயற்சியாலோ, அல்லது பரம்பரையாய் வந்த வசதியாலோ செல்வந்தர் ஆகிறார். ஆகட்டுமே... கொஞ்சம் பொறுங்கள். அவ்வளவு எளிதாக, மேலோட்டமாகப் பேசவேண்டாம். அந்தச் செல்வம் நேர்மையான வழிகளில் வந்த செல்வம் என்றால், அவர்கள் வாழ்ந்து அனுபவிக்கட்டும். தலைமுறை, தலைமுறைகள் வாழ்ந்து அனுபவிக்கட்டும் என்று வாழ்த்துவோம்.
ஆனால், சேர்க்கப்பட்டச் செல்வம் நேர்மையற்ற, குறுக்கு வழிகளில் வந்திருந்தால், கேள்விகள் எழும், சாபங்கள் வெடிக்கும். அதுவும் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி, அவர்கள் வாழ்வைச் சீரழித்து சேர்க்கப்பட்டச் செல்வம் என்றால், கோபமும், சாபமும் எழுவதில் நியாயம் உள்ளது. பல ஏழைகளுடைய வயிறு பற்றி எரியும்போது, அந்த நெருப்பில் குளிர்காயும் செல்வந்தர்களைப்பற்றி நினைக்கத் தோன்றுகிறது.
நீரோ மன்னன் பிடில் வாசிக்கும் திறமை பெற்றவனாம். அழகான இசை படைப்புகள் அவன் இசைக் கருவியிலிருந்து வெளி வருமாம். அவனுக்கு திறமை இருந்தது. இசையை உருவாக்கினான். இதில் என்ன தவறு என்ற கேள்வி எழும். ஆனால், அவன் அந்த இசையை உருவாக்க, உரோம் நகரைத் தீயிட்டு கொளுத்தினான் என்பார்கள். கொழுந்துவிட்டு எரியும் நகரமும், அங்கு எழும் மக்களின் அவல ஓலங்களும் அவனது இசைப் படைப்பைத் தூண்டியதாகச் சொல்லப்படுகிறது.
திறமை இருந்தது, இசைத்தான் என்று இப்போது சொல்ல முடியுமா? இதே கேள்வியை செல்வந்தரைப் பற்றி பேசும்போதும் எழுப்பவேண்டும். திறமை இருந்தது செல்வம் சேர்த்துக்கொண்டார் என்று மேலோட்டமாகப் பேசமுடியாது. பின்னணிகள் அலசப்பட வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் Forbes magazine உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் பட்டியலைத் தரும். இந்தப் பட்டியல் வெளியிடப்படும் போதெல்லாம் எனக்குள் ஒரு வித்தியாசமான எண்ணம். இந்த கோடீஸ்வரர்கள் அதிகாரப் பூர்வமாய் வெளியிடும் சொத்து விவரங்களை வைத்து இந்த பட்டியல் வந்திருக்கிறது என்றால், இன்னும் கணக்கில் வராத சொத்துக்கள் எவ்வளவு இருக்கும் என்று ஒரு குதர்க்கமான கேள்வி எனக்குள் எழும். இந்த கோடீஸ்வரர்களைவிட நமது அரசியல் தலைவர்கள் பெரிய செல்வந்தர்கள் ஆயிற்றே. அவர்கள் ஏன் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை? என்ற மற்றொரு குதர்க்கமான கேள்வியும் எழும். என்னைப்போல் கேள்வி பலருக்கும் இருக்கும் என்று எதிர்பார்த்து, இந்தப் பட்டியலை விக்கிபீடியா வெளியிடும் போது அவர்கள் தரும் முன்னுரை இது: This list of billionaires is based on an annual ranking of the world's wealthiest people compiled and published by Forbes magazine… The list does not include heads of state whose wealth is tied to their position. இந்தப் பட்டியலில் அரசுத் தலைவர்களைச் சேர்க்கவில்லை, காரணம், அவர்களது செல்வங்களின் அளவு அவர்கள் வகிக்கும் பதவியோடு தொடர்புடையது.
அதாவது, இன்று வெள்ளை மாளிகையில் வாழும் பாரக் ஒபாமா, அமெரிக்க ஐக்கிய நாடு தன்னுடைய சொத்து என்று உரிமை கொண்டாடுவாரா? அல்லது, அவர் வாழும் வெள்ளை மாளிகையைத்தான் அவரால் உரிமை கொண்டாட முடியுமா? அப்படி ஒவ்வொரு நாட்டுத் தலைவரும் அந்த நாடு தன் சொத்து என்று கொண்டாட ஆரம்பித்தால்?... அப்படி யாரும் செய்வார்களா? இவ்விதம் செய்துள்ள எத்தனையோ தலைவர்களை நமக்குத் தெரியும். செல்வம் சேர்ப்பதைப்பற்றி நினைக்கும்போது என் மனதில் எழும் எண்ணங்கள் இவை.
செல்வங்களால் சிறைப்படுவது என் இரண்டாவது கருத்து. உலகிலேயே அதிக விலையுயர்ந்த வீட்டைப்பற்றி முதலில் பேசினேன். செல்வங்களில் சிறைப்படுவதற்கு இது ஓர் உதாரணம். 4000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு எல்லா வசதிகளும் கொண்டது. இதை வேறுவிதமாக சொல்லவேண்டுமானால், அந்த வீட்டில் வாழ்பவர்கள் எக்காரணத்திற்கும் வெளியேவரத் தேவையில்லை. இப்படி வாழ்வதும் ஒரு சிறைதானே. இப்படிக் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு வைக்கப்பட்டுள்ள பெயர்... ‘அன்டில்லியா’ (Antillia). ‘அன்டில்லியா’ பழம்பெரும் புராணங்களில் வரும் ஒரு கனவுத் தீவு. தீவு, சிறை... எல்லாமே நம்மைத் தனிமைப்படுத்தும். இந்த மாளிகையும் அப்படித்தான்.
செல்வங்களால் சிறைப்படுவது என்று கூறும்போது, பல ஆண்டுகளுக்கு முன்னால், செய்திதாளில் வாசித்த ஒரு கட்டுரை நினைவுக்கு வருகிறது. இதை எழுதியவர் France நாட்டில் பிறந்த Francois Gautier. பல ஆண்டுகளுக்கு முன்னால், சூரத் நகரில் கொள்ளைநோய் பரவியதை மையமாகக் கொண்டு அவர் எழுதிய ஒரு கட்டுரையில் அவர் செல்வந்தர்களைப் பற்றி கூறியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இந்தியாவில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளை அதிக சுத்தமாக வைத்திருப்பதைப் பார்த்து அசந்து போயிருக்கிறேன். ஆனால், இதே ஆட்கள் தங்கள் வீட்டைச் சுத்தம் செய்து சேகரித்த குப்பையை வீட்டுக்கு முன் போடுவார்கள். தெரு சுத்தம் பற்றி அவர்களுக்கு கொஞ்சமும் கவலை இருக்காது... கொள்ளை நோய் பரவிய சூரத் இந்தியாவிலேயே பணக்காரர்கள் நிறைந்த ஒரு நகரம், ஏனெனில் அங்கே உள்ள ஒரு தலையாயத் தொழில் வைரத் தொழில். அந்த நகரில் கொள்ளை நோயா, எப்படி என்று கேட்பவர்கள் அந்த ஊர் தெருக்களைப் பார்க்கவேண்டும். வீடுகள் அரண்மனைகளாய் இருந்தாலும், பொதுச்சுத்தம் என்று வரும்போது அந்த ஊர் மிகுவும் அழுக்காய் இருந்தது. கொள்ளை நோய் அவர்கள் அனைவரின் சமுதாயச் சிந்தனையை உலுக்கி எடுத்த ஒரு பாடம். தன் வீடு சுத்தமாய் இருந்தால் மட்டும் போதாது, பொது இடமும் சுத்தமாய் இல்லை என்றால், அது விரைவில் தன் வீட்டையும் பாதிக்கும் என்பதை அந்த வைர வியாபாரிகள் கொள்ளை நோய் மூலம் கற்றுக்கொண்டனர். ஆனால் இந்தியாவின் பல நகரங்கள் இன்னும் இந்த பாடத்தைக் கற்றுக்கொள்ளவில்லை... என்று அவர் எழுதியிருந்தார்.
சுற்றிலும் வாழும் சமுதாயத்திற்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதுபோல், தான் வாழும் வீட்டை ஒரு தீவாகவே காணும் செல்வந்தர்கள் தங்களையேச் சிறைப்படுத்திக் கொண்டவர்கள்.
இந்தச் சிறையிலிருந்து தப்புவது எப்படி? செல்வத்தைப் பகிர்வது. அதுவும் இயேசு குறிப்பிட்டுச் சொன்னது போல், ஏழைகளிடம் பகிர்வது. பகிர்வைப்பற்றி பலமுறை பேசியிருக்கிறோம், கருத்துக்களைக் கேட்டிருக்கிறோம். தோர்டன் வில்டேர் (Thorton Wilder) என்ற நாடக ஆசிரியர் கூறியுள்ள பொன்மொழிகள்: "பணம் உரத்தைப் போன்றது. குமித்து வைத்தால், நாற்றம் எடுக்கும். பயன் அளிக்காது. பரப்பும்போதுதான் பயனளிக்கும்."
உலக மகா செல்வந்தர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் தொடர்ந்து பல ஆண்டுகள் இருப்பவர்கள்: பில் கேட்ஸ், வாரன் பஃபெட் (Bill Gates, Warren Buffet). இவர்களது வாழ்க்கையைக் கொஞ்சம் திருப்பிப்பார்த்தால், நமக்குப் பாடங்கள் கிடைக்கும்.
பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 2008ம் ஆண்டு வரை 28 பில்லியன் டாலர்களைச் சமூகச் சேவையில் செலவழித்திருக்கிறார்கள். பில் கேட்ஸ் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகும்போது, 58 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தன் சொத்துக்கள் முழுவதையும் சமூகச் சேவைக்கென எழுதிவைக்கப் போவதாகவும், தன் பிள்ளைகளுக்கு அந்தச் சொத்து சென்று சேராது எனவும் கூறியதாக செய்திகள் வெளியாயின. வாரன் பஃபெட் 2006ம் ஆண்டு உலக வரலாற்றில் இதுவரை எந்தத் தனி மனிதனும் செய்யாத ஒன்றைச் செய்தார். தன் சொத்திலிருந்து 37 பில்லியன் டாலர்களை பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்குக் கொடுத்தார்.
பில் கேட்ஸ், வாரன் பஃபெட் இருவரையும் புனிதராக்கும் முயற்சி அல்ல இது. ஆனால் உலகின் முதன்மையானச் செல்வந்தர்கள் தங்கள் செல்வங்களைப் பகிர்ந்துகொண்டது, அதுவும் ஏழைகளோடு பகிர்ந்துகொண்டது, நம்பிக்கைத் தரும் செய்திதானே!
பூஜ்யத்தில் ஆரம்பித்தோம், மீண்டும் பூஜ்யத்திற்கு வருவோம். 28 பில்லியன் டாலர்கள், 58 பில்லியன் டாலர்கள், 37 பில்லியன் டாலர்கள், இவைகளுக்கெல்லாம் எத்தனை பூஜ்யங்கள்? சரியாகத் தெரியவில்லை. தெரியவும் தேவையில்லை. ஆனால், இந்தப் பூஜ்யங்களுக்குச் சிறப்பான மதிப்பு உண்டு. எத்தனையோ பூஜ்யங்கள் கொண்ட செல்வங்களை பில் கேட்ஸ், வாரன் பஃபெட் இருவரும் ஏழைகளோடு பகிர்ந்ததால், அந்த பூஜ்யங்கள் பெருமதிப்பு பெற்றுவிட்டன. இன்றைய முதல் வாசகத்தில் கூறப்படும் உண்மை ஞானத்தைச் இவர்கள் இருவரும் பெற்றுள்ளனர் என்பதை உணரலாம். இவர்களைப் போல் நம்மையும் இறைவனின் ஞானம் வழிநடத்த வேண்டுவோம்:
சாலமோனின் ஞானம் 7: 7-11
எனவே நான் மன்றாடினேன்: ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை வேண்டினேன்: ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்: அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக்கல்லும் அதற்கு ஈடில்லை: அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்: அதற்குமுன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும். உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன் மீது அன்புகொண்டேன்: ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது. ஞானத்தோடு எல்லா நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது.








All the contents on this site are copyrighted ©.