2012-10-13 16:08:43

குஜராத் மொழியில் ப்ரெய்ல் புதிய ஏற்பாட்டு நூல்


அக்.13,2012. பார்வையற்றவர்கள் வாசிக்கும் ப்ரெய்ல் எழுத்தில் குஜராத் மொழியில் புதிய ஏற்பாட்டு நூலை இவ்வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது குஜராத் தலத்திருஅவை.
உலகளாவியக் கத்தோலிக்கத் திருஅவையில் இவ்வியாழனன்று விசுவாச ஆண்டு தொடங்கியிருக்கும்வேளை, குஜராத் மாநிலத்தின் காந்திநகர் உயர்மறைமாவட்டம் இந்த விசுவாச ஆண்டைத் தொடங்கிய திருப்பலியில் இந்தப் புதிய ஏற்பாட்டு நூலை வெளியிட்டார் காந்திநகர் பேராயர் Stanislaus Fernandes.
பேராயர் Fernandesடன் சேர்ந்து, பங்களூரு புனித பேதுரு பாப்பிறை குருத்துவக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அருள்பணி செபஸ்தியான் பெரியண்ணா, குஜராத் மாநில இயேசு சபை அதிபரின் பிரதிநிதி அருள்தந்தை இலாரன்ஸ் தர்மராஜ், பார்வையற்றவர்க்கான இந்தப் புதிய ஏற்பாட்டு நூலைத் தயாரித்த இயேசு சபை அருள்தந்தை கிரிஷ் சந்தியாகு போன்றோர் கூட்டுத்திருப்பலி நிகழ்த்தினர்.
இதில், குஜராத் மாநில அரசின் பிரதிநிதிகள், பிறசமயப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டி கொடுத்த அருள்தந்தை கிரிஷ், இந்நூல் தயாரிப்பதற்குக் கிடைத்த உள்தூண்டுதல், இது தயாரிக்கப்பட்ட விதம் மற்றும் குஜராத்திலுள்ள ஏறக்குறைய அறுபதாயிரம் பார்வையிழந்தோருக்கு இந்நூல் உதவுவது குறித்து விளக்கினார்.
இயேசு சபை அருள்தந்தை கிரிஷ் சந்தியாகு, குஜராத் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பணி செய்து வருகிறார்.







All the contents on this site are copyrighted ©.