2012-10-12 16:18:03

திருத்தந்தை : நற்செய்தியின் மகிழ்ச்சியை நம்மோடு நாம் சுமந்து செல்கிறோம்


அக்.12,2012. நற்செய்தியின் மகிழ்ச்சியை நம்மோடு நாம் சுமந்து செல்வதால், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நாம் மகிழ்ச்சி அடைந்தது போலவே இன்றும் மகிழ்ச்சி அடையலாம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வியாழனன்று ஆரம்பித்த விசுவாச ஆண்டைக் கொண்டாடும் விதமாக இத்தாலிய கத்தோலிக்க கழகம் மற்றும் உரோம் மறைமாவட்டம் இணைந்து வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் வியாழன் மாலை நடத்திய செபவழிபாடு மற்றும் ஒளி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான விசுவாசிகளை இரவு 9 மணிக்குத் தனது அறையின் சன்னல் வழியே வாழ்த்திப் பேசிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
வியக்கத்தக்க, கனிவான மற்றும் இறைவாக்குத்தன்மை கொண்ட அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே சன்னல் வழியாகத் தோன்றி, மறக்கமுடியாத, முழுவதும் கவிதைநயம் கொண்ட, நன்மைத்தனம் நிரம்பிய மற்றும் இதயத்தின் வார்த்தைகளை நம்மிடம் பேசினார் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த பல ஆண்டுகளாக நம் ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் முரண்பாடுகளைக் கண்டு வருகிறோம், தூய பேதுருவின் படகில் பயனற்ற மீன்களும் இருந்தன, திருஅவையிலும் மனிதப் பலவீனங்கள் இருக்கின்றன என்றுரைத்தார் திருத்தந்தை.
திருஅவையின் கப்பல் வலிமையான புயல் அலைகளில் பயணம் செய்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது, கடவுள் தூங்குகிறார் மற்றும் கடவுள் நம்மை மறந்து விட்டார் என்றுகூட சில நேரங்களில் நினைக்கும் அளவுக்கு அப்புயல்கள் நம்மை இட்டுச்சென்றுள்ளன என்றும் கூறினார் திருத்தந்தை.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர், நவீன உலகுக்கு ஏற்றதுபோல் மாற்ற விரும்பினார், இயேசு கிறிஸ்து மாறாதவர் என்பதால் அவரது முயற்சி இக்காலத்துக்கும் ஏற்றது என்றும் கூறினார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.