2012-10-12 16:13:24

திருத்தந்தை : கிறிஸ்தவம் ஒரு மரம், அது என்றும் இளமையானது


அக்.12,2012. கிறிஸ்தவம் ஒரு மரம், அது எப்பொழுதும் வைகறைப்பொழுதாக இருக்கின்றது, அது என்றும் இளமையானது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வியாழனன்று இடம்பெற்ற விசுவாச ஆண்டுத் தொடக்கத் திருப்பலியில் கலந்து கொண்ட உலக ஆயர் பேரவைகளின் தலைவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் கலந்து கொண்ட தந்தையர்கள் என 120 பேரை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து நன்றி தெரிவித்து நிகழ்த்திய உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் தீர்மானங்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றதா என, இப்பொதுச்சங்கம் தொடங்கியதன் இந்த ஐம்பதாம் ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி யாரும் கேள்வி எழுப்பினால், இப்பொதுச்சங்கத்தைத் தொடங்கி வைத்த அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர் அன்று கூறியதே அவர்கள் கேள்விக்குப் பதிலாக இருக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்தவம், ஏதோ கடந்த காலங்களின் ஒன்று என்றோ அல்லது அது பின்னோக்கி உள்ளது என்றோ நோக்கப்படக் கூடாது, ஏனெனில் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர், கிறிஸ்தவம் என்றும் இளமையானது என்று அருளாளர் 23ம் அருளப்பர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூறியதை எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கிறிஸ்தவம், நித்திய கடவுளின் பிரசன்னத்தால் குறிக்கப்பட்டுள்ளது, காலம் நிறைவுற்றபோது அது உலகில் நுழைந்தது, அது ஒவ்வொரு காலத்திலும் பிரசன்னமாய் இருக்கின்றது, ஏனெனில் ஒவ்வொரு காலமும் கடவுளின் படைப்பின் வல்லமையிலிருந்தும், அவரது “இன்றைய” நித்தியத்திலிருந்தும் மலர்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
தூய ஆவி திருஅவைக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த அருளின் காலமாக இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் இருந்தது, கடவுளின் அன்புச்சுடரை ஒவ்வொரு மனிதரின் இதயத்திலும் கொண்டுவர வேண்டியது இக்காலத்தில் மிகவும் முக்கியமானது என்றும் திருத்தந்தை எடுத்துச் சொன்னார்.
இவ்வியாழன் திருவழிபாட்டில் பங்குகொண்ட ஏறக்குறைய 500 திருஅவைத் தலைவர்களுடன் சேர்ந்து இவ்வெள்ளிக்கிழமை மதிய உணவு அருந்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.