2012-10-12 16:27:26

சென்னை-மயிலைப் பேராயர் : மக்கள் தாங்கள் வாழும் சூழல்களில் இயேசுவைக் கண்டுணருவதற்கு உதவிகள் தேவை


அக்.12,2012. இவ்வெள்ளிக்கிழமை காலையில் இடம்பெற்ற 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஏழாவது பொது அமர்வில் உரையாற்றிய சென்னை-மயிலைப் பேராயர் மலையப்பன் சின்னப்பா, மக்கள் தாங்கள் வாழும் சூழல்களில் இயேசுவைக் கண்டுணருவதற்கு உதவிகள் செய்யப்படுமாறு கேட்டுக் கொண்டார்.
தனிப்பட்ட மனிதர்கள் கடவுளை அடைவதற்கு இந்திய மரபில் Mangas(வழிகள்), grana manga (அறிவு), bakati manga (கடவுளன்பு), kunma manga (செயல்முறை) ஆகிய நான்கு வழிகள் இருக்கின்றன, இவற்றுள் ஒன்றைப் பயன்படுத்திக் கடவுளை அடைய முடியும் எனவும் பேராயர் சின்னப்பா கூறினார்.
மேலும், பல்சமயச் சூழல் கொண்ட இந்தியாவில் உரையாடலின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்த பேராயர் சின்னப்பா, ஒவ்வொரு மதத்திலும் ஒளியின் அடையாளம் இருக்கின்றது, பாஸ்காப் பேருண்மையில் பங்குதாரர்களாக ஆவதற்கு தூய ஆவி ஒவ்வொருவருக்கும் வாய்ப்புக்களை வழங்குகிறார் எனவும் கூறினார்.
கடவுளோடு உறவு கொள்வதற்குத் தியானம் வழியாகவும் அவ்வுறவை ஏற்படுத்தலாம் என்றும், சமுதாயத்தில் நசுக்கப்பட்டும் பாகுபடுத்தப்பட்டும் இருக்கின்ற பழங்குடிகள், தலித்துக்கள், இன்னும் மற்ற இனங்களின் ஏழைகளை முன்னேற்றுவது புதிய நற்செய்திப்பணித் திட்டத்தில் முதலிடம் வகிக்க வேண்டுமென்றும் சென்னை-மயிலைப் பேராயர் சின்னப்பா கேட்டுக் கொண்டார்.
இவ்வெள்ளிக்கிழமை காலையில் இடம்பெற்ற ஏழாவது பொது அமர்வில் 23 மாமன்றத்தந்தையர் உரையாற்றினர்.







All the contents on this site are copyrighted ©.