2012-10-11 16:17:21

திருத்தந்தை விசுவாச ஆண்டை தொடங்கி வைத்தார்


அக்.11,2012. ஒரு சிறிய கிராமத்தில் ஓர் ஏழை தினக்கூலிக் குடும்பம் இருந்தது. அக்குடும்பத்திலே இருந்த சிறுவனுக்குத் தீராத நோய். கிராமத்து மருத்துவம் பார்த்தார்கள். பலன் இல்லை. அருகிலிருந்த நகரத்து மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஒன்றரை மாதங்களாகச் சிகிச்சை அளித்தும், அச்சிறுவனைத் தாக்கியிருந்த நோய் என்னவென்று மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவன் சில நாள்களாக கண்திறக்கவில்லை, வாய்பேசவில்லை. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். துக்கத்தினால் துவண்டது அக்குடும்பம். மருத்துவமனையில் அச்சிறுவனைப் பார்க்க வந்த ஓர் உறவினர் அவனது பெற்றோரிடம், வேளாங்கண்ணி ஆரோக்யத்தாயிடம் கொண்டு செல்லுங்கள், சிறுவன் குணம் பெறுவான் என்று ஆலோசனை சொன்னார். அப்பெற்றோரும் உடனடியாக வேளாங்கண்ணி சென்றனர். அந்தத் தாயின் பீடத்தின் முன்பாகச் சிறுவனைக் கிடத்திக் கண்ணீரோடு மன்றாடினார்கள். தாயே, அம்மா நாங்கள் யாரிடம் போவோம், நீதான் எங்கள் தஞ்சம், உம்மையன்றி எமக்கு வேறு ஆறுதல் கிடையாது, என் பிள்ளைக்கு உயிர்பிச்சை கொடு தாயே எனச் செபித்துக் கொண்டிருந்தனர். ஆச்சரியம், சிறிது நேரத்தில் சிறுவன் கண்விழித்தான். எழுந்து நடந்தான். ஆம். அச்சிறுவனின் பெற்றோரின் விசுவாசம் உயிர்பெற்றது.
ஆம். கடவுளால் எல்லாம் முடியும். விசுவசிப்பவனுக்கு எல்லாம் கைகூடும். மலருக்குத் தேவை வாசம். மனிதருக்குத் தேவை சுவாசம். கிறிஸ்தவருக்குத் தேவை விசுவாசம். இன்றைய தொழில்நுட்ப உலகில் இந்த விசுவாசம் ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்வுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை வலியுறுத்தி 2012ம் ஆண்டு அக்டோபர் 11, இவ்வியாழன் காலை வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தி விசுவாச ஆண்டை ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கத்தோலிக்கத் திருஅவையின் வரலாற்றில் திருத்தந்தையர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட ஆண்டை அறிவித்து, கிறிஸ்தவர்கள், விசுவாசத்தின் ஒரு குறிப்பிட்ட தன்மையை ஆழமாகப் புரிந்துகொள்வதற்குத் தங்களை அர்ப்பணிக்குமாறு அழைப்பு விடுக்கின்றனர். அண்மை பத்து ஆண்டுகளில், செபமாலை ஆண்டு(அக்.2002-அக்.2003), திருநற்கருணை ஆண்டு(அக்.2004-அக் 2005), புனித பவுல் ஆண்டு (28ஜூன் 2008 - 29 ஜூன் 2009), குருக்கள் ஆண்டு(19ஜூன்2009–11ஜூன்2010), ஜூபிலி ஆண்டு என திருத்தந்தையர் அறிவித்தனர். புனிதர்கள் பேதுரு பவுல் மறைசாட்சியானதன் 19ம் நூற்றாண்டை நினைவுகூரும் விதமாக திருத்தந்தை 6ம் பவுல், 1967ம் ஆண்டில் விசுவாச ஆண்டை அறிவித்தார். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு நிறைவு மற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு வெளியிடப்பட்டதன் 20ம் ஆண்டின் நிறைவாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இந்த 2012ம் ஆண்டில் விசுவாச ஆண்டை அறிவித்துள்ளார். இந்த விசுவாச ஆண்டு 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதியன்று நிறைவடையும். மேலும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு நிறைவாக புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த உலக ஆயர்கள் மாமன்றமும் இம்மாதம் 7ம் தேதியன்று வத்திக்கானில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. மூன்று வாரங்கள் நடைபெறும் இதில் 262 மாமன்றத் தந்தையர்கள் உட்பட 408 பேர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வியாழனன்று தொடங்கிய விசுவாச ஆண்டின் தொடக்க நிகழ்வாக, இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், 80 கர்தினால்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில்(1962-1965) கலந்து கொண்டு இன்றும் உயிரோடு இருக்கும் தந்தையருள் 14 பேர், கீழைரீதிகளின் முதுபெரும் தலைவர்கள் 8 பேர், தற்போதைய ஆயர்கள் மாமன்றத் தந்தையருள் பேராயர்கள், ஆயர்கள் என 191 பேர், உலகின் ஆயர் பேரவைகளின் தலைவர்கள் 104 பேர் என 400 பேருடன் கூட்டுத்திருப்பலி நிகழ்த்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். தற்போதைய ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்ளும் கான்ஸ்டாண்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்புச் சபையின் முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமேயுஸ், இங்கிலாந்து ஆங்லிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ் போன்றோரும் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர். 50 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் இளம் இறையியலாளராகவும் வல்லுனராகவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டதைப் போலவே இவ்வியாழனன்றும் பச்சைநிறத் திருப்பலி ஆடை, வெண்மைநிறத் தொப்பியுடன் ஆயர்கள் அணிவகுத்து வந்தனர். வத்திக்கான் பேதுரு வளாகம் முழுவதும் விசுவாசிகளால் நிறைந்திருக்க, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது பயன்படுத்தப்பட்ட அழகான பெரிய நற்செய்தி நூல் இத்திருப்பலியில் முதலில் மதிப்பு மரியாதையுடன் வைக்கப்பட்டது. இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இத்திருப்பலியில் கலந்து கொண்ட பிற கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், கீழைரீதித் தலைவர்கள் என முக்கிய பிரமுகர்களைக் குறிப்பிட்டு எல்லாருக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுற்ற இந்த நாளில் நாம் விசுவாச ஆண்டை ஆரம்பிக்கிறோம். ஆன்மீகப் பாலைவனமாக மாறியிருக்கும் இன்றைய உலகில், வாழ்வதற்கான விழுமியங்களை மீண்டும் கண்டுணருவதற்கு இந்த விசுவாச ஆண்டு உதவும் என்று கூறினார்.
இத்திருப்பலியின் இறுதியில் கான்ஸ்டாண்டிநோபிள் முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமேயுஸ் திருத்தந்தைக்கும் ஆயர்களுக்கும் அனைத்து விசுவாசிகளுக்கும் வாழ்த்துரை வழங்கினார். கடந்த 50 ஆண்டுகளில் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத் தீர்மானங்களின் தாக்கங்கள் பற்றி எடுத்துரைத்தார். ஆர்த்தடாக்ஸ் சபையில் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் எடுத்துச் சொன்னார். திருமறையின் மறைபொருள், திருவழிபாட்டின் புனிதத்தன்மை, ஆயரின் அதிகாரம் போன்ற இப்பொதுச்சங்கக் கொள்கைத் திரட்டுகளின் இறையியல் மற்றும் முக்கிய தலைப்புகளை நடைமுறையில் உண்மையாகச் செயல்படுத்துவதற்குக் கடினமாக இருக்கின்றன. எனவே இப்பொதுச்சங்கத் தீர்மானங்களை ஆழமாக வரவேற்று அவற்றுக்கு விளக்கம் கொடுப்பதற்கு மேய்ப்புப்பணியில் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்றார்.
1965ம் ஆண்டில் திருத்தந்தை 6ம் பவுல் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை நிறைவு செய்தபோது வழங்கிய அப்பொதுச்சங்கத்தின் கடைசி ஏழு செய்திகள் மற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு இத்திருப்பலியின் இறுதியில் பல்வேறு நிலையினருக்கு வழங்கப்பட்டன. அரசுகள், அறிவியல் துறையினர், கலைஞர்கள், பெண்கள், உழைப்பாளர்கள், ஏழைகள், நோயாளிகள், துன்புறுவோர், இளையோர், மறைக்கல்வி ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினருக்கு இவை வழங்கப்பட்டன.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து காட்டப்பட்ட அதே விசுவாசம் இன்றையக் காலத்திலும் வாழ்ந்து காட்டப்பட வேண்டும். இது மாறிவரும் இன்றைய உலகில் வாழ்ந்து காட்டப்படும் உயிருள்ள விசுவாசமாக இருக்கும். அன்பர்களே, கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்ற ஆழமான நம்பிக்கையில் நமது வாழ்வை இறைவனிடம் அர்ப்பணித்து விசுவாச ஆண்டைத் தொடங்குவோம். விசுவாச வாழ்வில் உடன் வாழ்வோருக்குச் சாட்சிகளாகத் திகழ்வோம். புதிய நற்செய்திகளாக வாழ்வோம்.
மலருக்குத் தேவை வாசம். மனிதருக்குத் தேவை சுவாசம். கிறிஸ்தவருக்குத் தேவை விசுவாசம்.







All the contents on this site are copyrighted ©.