2012-10-10 15:30:21

திருஅவையில் திருப்புமுனைகள் – புனித பிரான்சிஸ் போர்ஜியா


அக்.10,2012. “நாம் அனைத்துப் பணிகளையும் இறைவனில் செய்து அவரது மகிமைக்காக அர்ப்பணிக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது அப்பணிகள் நிலையானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும். அரசர்களோ, உயர்குடிமக்களோ, வணிகர்களோ, விவசாயிகளோ யாராயிருந்தாலும் கிறிஸ்துவின் எடுத்துக்காட்டான வாழ்வால் தூண்டுதல் பெற்று இறைவனின் மகிமைக்காக அனைத்தையும் செய்ய வேண்டும். செபம் செய்யும்போதும், திருப்பலி காணும்போதும், உணவருந்த அமர்ந்திருக்கும்போதும், வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும்போதும், படுக்கையில் உடுப்புக்களைக் கழற்றும்போதும், எல்லா நேரங்களிலும் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் கசையால் அடிக்கப்பட்டபோது அனுபவித்த வேதனைகளை நினைவுகூர வேண்டும். அப்போது நமது மனதிலுள்ள அனைத்துத் தீமைகளையும் இயேசு நம்மிடமிருந்து அகற்றி விடுவார். இவ்வாறு நாம் இவ்வுலகப் பொருள்கள்மீது அளவுக்கு அதிகமாகப் பற்று வைக்காமல் இயேசுவின் திருச்சிலுவையைத் தழுவிக் கொள்வோம்”.

இப்படிச் சொன்னவர் இஸ்பெயினின் உயர்குடிமகன் ஒருவர். 16ம் நூற்றாண்டில் இஸ்பெயின் அரசவையில் உயர்ந்த பதவியை வகித்த ஒருவர். இவர்தான் புனித பிரான்சிஸ் போர்ஜியா. இஸ்பெயின் நாட்டு வலென்சியாவைச் சேர்ந்த காண்டியாவில் பிரபுக்கள் குடும்பத்தில் 1510ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி பிறந்தார். இவர் திருத்தந்தை 6ம் அலெக்சாண்டர், மன்னர் Aragonனின் Ferdinand, பேரரசர் 5ம் சார்லஸ் ஆகியோருக்கு உறவினர். அரசவையிலே கல்வி கற்ற பிரான்சிஸ், 18வது வயதில் திறமையான இளைஞராக பேரரசர் 5ம் சார்லஸ் அரசவையில் பணியைத் தொடங்கினார். போர்த்துக்கீசிய உயர்குடிப் பெண்ணாகிய Eleanor de Castro என்பவரை 19வது வயதில் திருமணம் செய்தார். Eleanor, பேரரசியின் உற்ற நண்பி. பிரான்சிஸைப் போலவே பக்தியிலும் நல்ல பண்புகளிலும் சிறந்து விளங்கியவர் Eleanor. இந்த இளம் தம்பதியர் அரசவையில் உயர் சலுகைகளை அனுபவித்தனர். இந்தத் தம்பதியருக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்தனர். பிரான்சிஸ் மிக நேர்த்தியான நிர்வாகியாக விளங்கினார். இதனால் அரசவையில் பரவலாகக் காணப்பட்ட ஊழலை நான்காண்டுகளில் ஒழித்தார். நீதிநிறைந்த நிர்வாகத்தைக் கொண்டு வந்தார். பஞ்ச காலத்தில் துன்பப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்தார். அக்காலத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருநற்கருணை வாங்குவது அரியசெயலாகும். ஆனால் பக்தியுள்ள பிரான்சிஸ் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருநற்கருணை உட்கொண்டார். 1542ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி இவரது தந்தை இறந்த பின்னர் தனது 33வது வயதில் காண்டியின் பிரபுவானார்.

1539ம் ஆண்டு மே முதல் தேதி பேரரசி இசபெல்லா திடீரெனக் காலமானார். அச்சமயம் பிரான்சிஸ் உரோமை சென்றிருந்தார். செய்தி கேள்விப்பட்டு அவர் நாடு திரும்பினார். அங்கு இசபெல்லாவின் உருக்குலைந்த இறந்த உடலைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அத்துணை அழகுநிறைந்த இசபெல்லாவின் இறந்த உடல் இருந்த நிலையே பிரான்சிஸ் இவ்வுலக இன்பங்களைத் துறக்க காரணமாக இருந்தது. இவ்வுலக மகிமை பெருமைகள் இவ்வளவுதான் என்பதை பேரரசி இசபெல்லாவின் இறந்த உடல் உணர்த்திற்று. இதுவே அவர் இயேசு சபையில் சேருவதற்குக் காரணமாக அமைந்தது. 1546ம் ஆண்டு பிரான்சிசின் அன்பு மனைவியும் இறந்தார். அப்போது அவர்களுக்கு 5 பிள்ளைகளே இருந்தனர். அப்போதுதான் புதிதாக உருவாகியிருந்த இயேசு சபையில் சேரவேண்டுமென்ற ஆவல் இருந்ததால் யாருக்கும் தெரியாமல் இலத்தீனும் இறையியலும் கற்றார். 1550ம் ஆண்டுவாக்கில் தனது இவ்வுலக செல்வங்களைத் துறந்தார். பேரரசர் 5ம் சார்லஸிடம் அனுமதி பெற்று, தனது மகன் Luis de Borja-Aragonவை காண்டியின் பிரபுவாக்கினார். தனது ஒரு மகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். பின்னர் இயேசு சபையில் 1551ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி குருவானார். இலெயோலாவில் புனித இஞ்ஞாசியாரின் குடும்ப அரண்மனையில் முதல் திருப்பலியை நிகழ்த்தினார்.

41 ஆண்டுகள் அரசவை வாழ்வு வாழ்ந்த பிரான்சிசின் பண்புகளைப் பல வகைகளில் பரிசோதித்தார் இயேசு சபை இல்ல அதிபர். நாட்டின் ஒரு பகுதிக்கே அதிபராக ஆட்சி செய்த இவரை, சமையல்காரருக்கு உதவிசெய்வதற்கும், அடுப்பு எரிப்பதற்கு விறகு தூக்கவும், சமையல் அறையைப் பெருக்கவும் கட்டளையிட்டார் இல்ல அதிபர்.. இவை அனைத்தையும் மிகுந்த தாழ்மையோடு செய்தார் பிரான்சிஸ். இயேசு சபை சகோதரருக்கு உணவு பரிமாறும்போது இவர் முழங்காலில் இருந்து தான் திறமையற்று செய்த செயல்களுக்காக மன்னிப்புக் கேட்கும்படியும் கட்டளையிடப்பட்டார். இவையனைத்தையும் முணுமுணுக்காமல் பொறுமையோடு செய்தார். இவர் கோபப்பட்டதே கிடையாதாம். தன்னை யாராவது பிரபு என்று சொல்லி மரியாதை செலுத்தினால் மட்டும் கோபப்படுவாராம். ஒருமுறை பிரான்சிசிக்கு ஏற்பட்ட காயத்துக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஒரு மருத்துவர் நியமனம் செய்யப்பட்டார். அவர் பிரான்சிசிடம், பிரபு, நான் உங்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது வேதனைப்படுத்தினேனோ என்று கேட்க, அதற்குப் பிரான்சிஸ் சிகிச்சை எனக்கு வேதனையளிக்கவில்லை. ஆனால் நீங்கள் ஒவ்வொரு நேரமும், பிரபு, மேதகு, இப்படி அடைமொழியிட்டு மிகுந்த மரியாதையுடன் அழைத்ததுதான் வேதனையளித்தது என்றாராம். இவ்வாறு மிகவும் பணிவுடன் நடந்து கொண்டவர் இயேசு சபை அருள்தந்தை பிரான்சிஸ்.

போர்ஜியா குடும்பத்தைச் சேர்ந்த அருள்தந்தை பிரான்சிஸ் இயேசு சபையில் வேகமாகப் புகழடைந்தார். இயேசு சபையைத் தொடங்கிய புனித இஞ்ஞாசியார் இவரை முதலில் தூதரகப் பணிகளில் அமர்த்தினார். பின்னர் 1554ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி இஸ்பெயின், போர்த்துக்கல், கிழக்கு மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்குப் பொறுப்பாளராக நியமித்தார். இந்தப் பணியிலிருந்த ஏழாண்டுகளில் நிறையப் பயணங்களை மேற்கொண்டார். இஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகளில் 31 இயேசு சபைக் கல்லூரிகளைக் கட்டினார். இருபது நவதுறவு இல்லங்களைத் திறந்தார். இயேசு சபைக்கு எல்லா இடங்களிலும் நண்பர்களைச் சம்பாதித்தார். இஸ்பெயினிலும், போர்த்துக்கல்லிலும் இயேசு சபை விரைவாகப் பரவச் செய்தார். இயேசு சபையைத் தொடங்கிய புனித இஞ்ஞாசியாருக்குப் பின்னர் அச்சபையின் இரண்டாவது அதிபராகத் திகழ்ந்த அருள்தந்தை தியெகோ லைன்ஸ் இறந்ததையொட்டி பிரான்சிஸ் போர்ஜியா அச்சபையின் மூன்றாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1572ம் ஆண்டுவரை அதிபராகப் பணிசெய்த இவர், புனித இஞ்ஞாசியாருக்குப் பின்னர் திறமையான மாபெரும் சபை அதிபராக இருந்தார் என வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். உரோமையில் ரொமானும் என்ற கல்லூரியை ஆரம்பித்தவர் இவரே. இதுவே பின்னாளில் கிரகோரியன் பல்கலைக்கழகமாக மாறியது. உலகின் பல பாகங்களுக்கும் இயேசு சபை மறைப்பணியாளர்களை அனுப்பினார். அரசர்களுக்கும் திருத்தந்தையர்களுக்கும் ஆலோசகராக இருந்தார். விரிவாகப் பரவி வந்த இயேசு சபையின் அனைத்து விவகாரங்களையும் திறமையுடன் மேற்பார்வையிட்டு வந்தார். இவ்வளவு பெரிய பதவிகளை வகித்து வந்தாலும், இவர் ஒரு தாழ்மையான வாழ்வு வாழ்ந்தார். இவர் வாழ்ந்த காலத்திலே ஒரு புனிதராகக் கருதப்பட்டார். புனித பிரான்சிஸ் போர்ஜியார் நிலநடுக்கங்கள் வராமல் இருப்பதற்குப் பாதுகாவலர். இவரது திருவிழா அக்டோபர் 10ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. இவர் 1572ம் ஆண்டு இறந்தார். 1671ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி திருத்தந்தை 10ம் கிளமெண்டால் புனிதர் என அறிவிக்கப்பட்டு போர்த்துக்கல் நாட்டுக்குப் பாதுகாவலராகவும் அறிவிக்கப்பட்டார்.

“நாம் எப்போதும் நித்திய வாழ்வை நோக்கி நமது பாதையை அமைக்க வேண்டும். மனிதர்கள் நம்மைப் பற்றியும் நமது செயல்களைப் பற்றியும் என்ன நினைத்தாலும் நாம் கடவுளைப் பிரியப்படுத்தும்படி நடந்து கொள்ள வேண்டும்” என்று சொன்னவர் புனித பிரான்சிஸ் போர்ஜியார். இயேசு சபையினர் எங்கெங்கு பணி செய்தாலும் முதலில் அவர்கள் மக்களை விசுவாசத்தில் ஆழப்படுத்தி அவர்களின் ஆன்மாக்கள் பாதுகாக்கப்பட உதவ வேண்டும் என்றும் சொன்னவர் புனித பிரான்சிஸ் போர்ஜியார். இவ்வியாழனன்று தொடங்கும் விசுவாச ஆண்டில் இப்புனிதரின் வாழ்வு எல்லாருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கின்றது என்று உறுதிபடக் கூறலாம்.








All the contents on this site are copyrighted ©.