2012-10-10 15:18:49

தட்டுங்கள் திறக்கப்படும் செப வேண்டல்


அக்.07,2012. இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாகத் தம் சீடர்களுக்குத் தோன்றி இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார். பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார். இவ்வாறு இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றியபோது அவர்களிடம், நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கை கொண்டோர் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் என்று கூறினார்.
இயேசு தம் சீடர்களுக்கு விடுத்த அழைப்பை ஏற்று அவர்கள் உலகின் பல பாகங்களுக்கும் சென்று அவரின் நற்செய்தியை அறிவித்தார்கள். கி.பி.52ம் ஆண்டிலே, அதாவது இயேசு இறந்த சிறிது காலத்துக்குள்ளாகவே அவருடைய திருத்தூதர் தோமையார் இந்தியா வந்து நற்செய்தி அறிவித்து இந்திய மண்ணிலே கொல்லப்பட்டார் என்பது வரலாறு. புனித பேதுரு உரோமையில் சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டுக் கொல்லப்பட்டார். இவ்வாறு இயேசுவின் சீடர்களும் அவர்களுக்குப் பின் வந்தவர்களும், நற்செய்திக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளார்கள். உரோமையிலுள்ள கொலோசேயம் என்ற இடத்தில் எண்ணற்ற கிறிஸ்தவர்கள் கொடிய விலங்குகளுக்கு இரையாகப் போடப்பட்டார்கள். இந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றில் எத்தனையோ கிறிஸ்தவர்கள், ஏன் இக்காலத்திலும் கொல்லப்பட்டு வருகிறார்கள். ஒரிசாவின் கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்கள் வன்முறைக்கு உள்ளானார்கள். பாகிஸ்தானில் தெய்வநிந்தனை சட்டம் என்ற பெயரில் எத்தனையோ அப்பாவிக் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள். வடகிழக்கு நைஜீரியாவின் Mubi கல்லூரி மாணவர் விடுதிக்குள் இவ்வாரத்தில் புகுந்த இசுலாமியத் தீவிரவாதக் குழு ஒன்று, கிறிஸ்தவ மாணவர்களைத் தனியாகப் பிரித்து அவர்களுள் சிலரைத் துப்பாக்கியால் சுட்டும் மீதியுள்ளோரை கழுத்தை வெட்டியும் கொலை செய்துள்ளது. 25 முதல் 30 கிறிஸ்தவ மாணவர்கள் கொலைச்செய்யப்பட்டிருக்கலாம் என்று செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. இவ்வாறு கிறிஸ்தவர்கள் உலகின் பல இடங்களில் தொடர்ந்து துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
இத்தனை துன்பங்களுக்கு மத்தியில் கிறிஸ்தவம் மடிந்து மறைந்து போகவில்லை. யாராலும் அதை அழிக்கவும் முடியாது. ஆயினும் தங்களது கிறிஸ்தவ விசுவாசத்தை நடைமுறைப்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை பாரம்பரியக் கிறிஸ்தவ நாடுகளில் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் கிறிஸ்தவ நாடுகளாய் இருந்தவை, கிறிஸ்தவ விசுவாசத்தை கடல்கடந்து சென்று போதித்த நாடுகளாய் இருந்தவை இன்று விசுவாசத்தில் தளர்ச்சி அடைந்திருப்பதைக் காண முடிகின்றது. நவீன தொழில்நுட்பங்களும் அறிவியல் வளர்ச்சியும் கடவுளை ஒதுக்கித் தன்னை மையப்படுத்தி வாழ்வதற்கு மனிதரைத் தூண்டுகின்றன. எனவே திருஅவை நற்செய்திப் பணியை இந்தக் காலத்துக்கு ஏற்றமுறையில் அறிவிப்பதற்கு கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இக்காலத்திய இணையதளங்கள், ஃபேஸ்புக், டிவிட்டர், என பல வழிகளில் முயற்சிக்கின்றது. பாரம்பரியக் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் ஆழப்பட வேண்டுமென்று அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இந்த அக்டோபர் மாதத்தில் இதே கருத்துக்காகச் செபிக்குமாறு கத்தோலிக்கர் அனைவரையும் கேட்டுள்ளார். பழங்காலக் கிறிஸ்தவ நாடுகளில் நற்செய்தி அறிவிப்புப்பணி புதிய முறையில் உத்வேகம் அடைந்து நல்ல பலன்களைத் தருமாறு ஆண்டவரைச் செபிக்குமாறு கேட்டுள்ளார். இந்த அக்டோபர் 21ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக மறைபரப்பு தினக் கொண்டாட்டங்கள் நல்ல கனிகளை அறுவடை செய்யச் செபிக்குமாறும் திருத்தந்தை நம் அனைவரிடமும் கேட்டுள்ளார்.
உலக மக்களில், சிறப்பாக பழைய கிறிஸ்தவ நாடுகளில் கிறிஸ்தவ விசுவாசத்தை ஆழப்படுத்தும் நோக்கத்தில் புதிய நற்செய்திப்பணி என்ற தலைப்பில் இஞ்ஞாயிறன்று 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தையும் தொடங்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். வத்திக்கான் பேதுரு வளாகத்தில் நிகழ்த்தும் திருப்பலியோடு இதைத் தொடங்கி வைக்கிறார். இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தில் 262 மாமன்றத் தந்தையர்கள் உட்பட 408 பேர் பங்கு கொள்கிறார்கள். மேலும் இத்திருப்பலியில் புனிதர்கள் அவிலா ஜான், பின்ஜென் ஹில்டெகார்டு ஆகிய இருவரையும் திருமறையின் மறைவல்லுனர்கள் எனவும் அறிவித்தார். இந்த உலக ஆயர்கள் மாமன்றம் சிறப்புற நடைபெறச் செபிப்போம்.
உலகில் கிறிஸ்தவம் பரவத் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை நற்செய்தி அறிவிப்பது எளிதான செயலாக இருக்கவில்லை. இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பதற்குத் துணிச்சல் தேவை. அத்துடன் போதிப்பவரின் வாழ்வும், அவரது போதனையின் வழியில் அமைய வேண்டும். அவரது வாழ்வு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய், மற்றவர்கள் பின்பற்றக்கூடியதாய் இருக்க வேண்டும். சொல்லும் செயலும் ஒத்துச் செல்லவில்லையெனில் போதனையை யாரும் கேட்க மாட்டார்கள். கேட்டாலும் பின்பற்ற மாட்டார்கள். இவன் சொல்லி நான் கேட்பதா, நேற்று பெய்த மழையிலே இன்று முளைத்த காளான், முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள போதிக்க வந்துட்டான் என வசைபாடுவார்கள். ஆயினும், நற்செய்திப்பணியில் புறக்கணிக்கப்படுதலும் ஏற்றுக்கொள்ளப்படாமையும் இருக்கும். ஆனால் இந்த மாதிரி சூழல்களில் இயேசு உடன் இருக்கிறார். இறைவாக்கினர் எரேமியாவை இறைவன் போதிக்க அனுப்பியபோது அவர் தயங்கினார். நான் சிறுபிள்ளையாயிற்றே என்று சொன்னார். அப்போது ஆண்டவர்,
தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன். அவர்கள் உனக்கெதிராய்ப் போராடுவார்கள். ஆயினும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நாம் உன்னோடிருக்கிறோம்
என்று சொன்னார். இறைவனது திருசொற்களை எடுத்துச் சொன்னதற்காக இறைவாக்கினர் எரேமியா சிறையில் அடைக்கப்பட்டார். கசையால் அடிக்கப்பட்டார். கிணற்றில் தூக்கி எறியப்பட்டார். ஆயினும் எல்லாத் துன்பங்களையும் சவால்களாக ஏற்றுக் கொண்டு இறைவனது உதவியை மட்டுமே நாடித் தொடர்ந்து பணி செய்தார். தென் தமிழகத்தில் இறையடியார் தேவசகாயம் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவரைச் சங்கிலிகளால் கட்டி ஊர் ஊராய் இழுத்துச் சென்றார்கள். கடைசியில் யாருக்கும் தெரியாதவாறு கொன்று போட்டார்கள். புனித அருளானந்தரை கொளுத்தும் வெயிலில் பாறையில் உருட்டினார்கள். அவரைக் கயிறுகளால் கட்டி கிணற்றில் தலைகீழாக இறக்கினார்கள். இறுதியில் கழுமரத்தில் ஏற்றித் தலையை வெட்டிக் கொன்று போட்டார்கள்.
இங்கிலாந்தில் ஒரு சிறிய கிராமம். அந்தக் கிராமத்தின் அருகில் அழகிய குன்று ஒன்று இருந்தது. அக்குன்றின் மேலே ஒரு பெரிய கல் ஓர் அழகிய முகத்தைக் கொண்டிருந்தது. அந்த முகத்தைப் போன்ற சாயலுடைய ஓர் இறைவாக்கினர், நல்ல மனிதர் அந்தக் கிராமத்துக்கு வந்து தங்கள் குறைகளைப் போக்குவார் என்று நம்பி ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அவ்வுருவத்தைத் தாங்கி எவரும் வரவில்லை. காத்திருந்ததுதான் மிச்சம். ஒருநாள் அவ்வூரில் ஒரு பெரியவர் இறந்து போனார். இறுதி மரியாதைக்காக அவரது உடல் வெளியில் வைக்கப்பட்டிருந்தது. அவ்வுடலைப் பார்த்த ஒருவர் மட்டும் அவரின் முகம் அந்த மலையிலுள்ள முகத்தைப் போன்று இருப்பதைக் கண்டு வியந்து போனார். இறந்த பின்னர் நினைத்துப் பயன் இல்லை. அந்தப் பெரியவர் அந்த ஊர்க்காரர் என்பதால் யாரும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை, கண்டு கொள்ளவுமில்லை. சொந்த ஊரில் யாரும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பது உண்மையாகி விட்டது.
நற்செய்திப்பணி செய்வோருக்கு எல்லா ஊர்களும் சொந்த ஊர்களே. இந்தப் பணியில் இறைவன் எப்பொழுதும் கூடவே இருக்கிறார். எனவே இந்த அக்டோபரில் இந்தப் பணி செய்வோருக்காகச் செபிப்போம். நம் வாழ்க்கையை ஒரு நற்செய்தியாக மாற்றுவதற்கு இறைவனின் அருள் வேண்டுவோம். நீதி, அன்பு, நட்பு, ஏழ்மை, தியாகம், பிறர்நலம்பேணல், மன்னிப்பு, அமைதி ஆகிய நற்செய்தி விழுமியங்கள் நம் குடும்பங்களிலும் நாட்டிலும் உலகிலும் இடம்பெற இறைவனை மன்றாடுவோம். கடும் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மக்களுக்காகவும், அங்கு விரைவில் நீதியுடன்கூடிய அமைதி நிலவவும் உருக்கமாகச் செபிப்போம். மக்கள் ஆயுதங்களைக் கைவிட்டு அமைதிக்கானப் பாதையைத் தேர்ந்தெடுக்குமாறு செபிப்போம்.
அமைதியின் ஆண்டவரே, எங்களுக்கு, குறிப்பாக சிரியா மக்களுக்கும், எங்களது வத்திக்கான் வானொலி நேயர் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் மனஅமைதியைத் தாரும். குடும்பங்களில் மன்னிப்பையும் சமாதானத்தையும் தாரும். எங்கள் வாழ்க்கையே, நாங்களே, நற்செய்தியாக இருக்க அருள்புரியும். சொல்லைவிட செயல் வலிமையானது என்பதை நாங்கள் உணர்ந்து வாழ உதவும்.
நோயினாலும் மனவேதனையினாலும் குடும்பப் பிரச்சனைகளாலும் துன்புறும் ஒவ்வோர் அன்புள்ளத்துக்கும் இறைவா, உமது குணமாக்குதலையும் ஆறுதலையும் அளித்தருளும். ஓய்வுபெற்ற கோவை என்.வெங்கடாச்சலம் ஆசிரியர், தனது மகனின் வேலைக்காகச் செபிக்குமாறு கேட்டுள்ளார். அக்குடும்பத்தின் கஷ்டத்தை இறைவன் அகற்றுமாறு செபிப்போம். சவுதியில் வேலை செய்யும் நமது இலங்கை அன்புள்ளம் கிரேஸ் மார்ட்டினின் ஒரே மகன் ரோசன் பிரதீப் இலங்கையில் ஏறக்குறைய ஓராண்டு சிறையில் இருந்த பின்னர், தாயின் கடும் முயற்சிகளுக்குப் பின்னர் தற்போது வெளியே வந்துள்ளார். அதற்கு அவரின் தாய் கிரேசியோடு நாமும் சேர்ந்து இறைவனுக்கு நன்றி சொல்வோம். இன்னும், பிரதீப் இம்மாதம் 21ம் தேதியும், அவரது மனைவி தேவதரிசினி இம்மாதம் 5ம் தேதியும், இவர்களது மகள் நிவேதா சுதர்சனி இம்மாதம் 25ம் தேதியும் தங்களது பிறந்தநாளைச் சிறப்பிக்கிறார்கள் என்று கிரேசி தொலைபேசியில் நமக்குத் தெரிவித்தார். இவர்களை இறைவன் நிறைவாய் ஆசீர்வதிக்குமாறும் செபிப்போம். இன்னும் அன்புள்ளங்களே, உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட தேவைகள் இருக்கும். இறைவன் உங்கள் வாழ்க்கையை அன்பும் அருளும் நிறைந்ததாய் மாற்றுமாறு செபிக்கின்றோம்.







All the contents on this site are copyrighted ©.