2012-10-09 16:32:56

சிரியாவில் அமைதி நிலவ உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர்கள் அழைப்பு


அக்.09,2012. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் மூன்றாவது பொது அமர்வு இச்செவ்வாய் காலை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னிலையில் காலை செபத்துடன் ஆரம்பமானது.
இம்மாமன்றத்தின் மூன்று தலைவர் பிரதிநிதிகளில் ஒருவரான மெக்சிகோ நாட்டு குவாதலஹாரா பேராயர் கர்தினால் தலைமையில் தொடங்கிய இம்மாமன்றத்தில் 142 மாமன்றத் தந்தையர்கள் உட்பட 255 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காலை 9 முதல் பகல் 12.30 வரை நடைபெற்ற காலை பொது அமர்வில் 21 மாமன்றத் தந்தையர்கள் உரையாற்றினர்.
சிரியாவில் அமைதி நிலவ வேண்டுமென்று இச்செவ்வாய் காலை பொது அமர்வில் அழைப்பு விடுத்த மாமன்றத் தந்தையர்கள், சிரியாவில் கடும் சண்டையினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தனர்.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியின் சவால்கள் குறித்தும் பேசிய மாமன்றத் தந்தையர்கள், குடியேற்றதாரர்க்கு நற்செய்தி அறிவிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
மேலும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னிலையில் இத்திங்கள் மாலை 4.30 மணிமுதல் 7 மணிவரை இடம்பெற்ற இந்த ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாவது பொது அமர்வில் ஆசியாவுக்கென, ஆசிய ஆயர்கள் பேரவையின் கூட்டமைப்பின் பொதுச்செயலர் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் உட்பட ஒவ்வொரு கண்டத்திற்கும், அக்கண்டத்தின் ஆயர்கள் பேரவையின் கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர்.
ஐரோப்பாவுக்கென எஸ்டர்காம்-புடாபெஸ்ட் பேராயர் கர்தினால் Péter ERDÖ, ஆப்ரிக்காவுக்கென Dar es Salaam பேராயர் கர்தினால் Polycarp PENGO, இலத்தீன் அமெரிக்காவுக்கென Tlalnepantla பேராயர் Carlos AGUIAR RETES, ஓசியானியாவுக்கென நியுசிலாந்தின் வெல்லிங்டன் பேராயர் John Atcherley DEW ஆகியோர் உரையாற்றினர்.
256 பேர் கலந்து கொண்ட இந்தப் பொதுஅமர்வில் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.







All the contents on this site are copyrighted ©.