2012-10-08 16:58:26

திருத்தந்தை : விசுவாச ஆண்டில் திருச்செபமாலையின் மகத்துவத்தை மீண்டும் கண்டுணருவோம்


அக்.08,2012. அன்னைமரியின் செபப் பள்ளியான திருச்செபமாலையின் மகத்துவத்தை மீண்டும் கண்டுணருமாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் உலகெங்கும் வாழும் அனைத்து விசுவாசிகளுக்கும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
13வது உலக ஆயர்கள் மாமன்றத்தை ஆரம்பித்து வைத்த திருப்பலியின் இறுதியில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, திருச்செபமாலையின் அரசியாக இஞ்ஞாயிறன்று(அக்.07) நாம் சிறப்பிக்கும் செபமாலை அன்னையிடம் செபிப்போம் எனக் கூறினார்.
செபமாலை அன்னை விழாவாகிய அக்டோபர் 7ம் தேதியன்று பொம்பைத் திருத்தலத்தில் பாரம்பரியமாக அன்னையிடம் மக்கள் செபிக்கின்றனர், இச்செபத்தோடு நாமும் நம்மை ஆன்மீகரீதியில் ஒன்றிணைப்போம் என்றும் அவர் கூறினார்.
தொடங்கவிருக்கும் விசுவாச ஆண்டில் செபமாலை பக்தியை ஒவ்வொருவரும் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்ற திருத்தந்தை, செபமாலையில் கிறிஸ்துவின் மறையுண்மைகளைத் தியானிப்பதன் மூலம் விசுவாசத்தின் எடுத்துக்காட்டான மரியாவால் வழிநடத்தப்பட நம்மை அனுமதிப்போம், இதன்மூலம் ஒவ்வொரு நாளும் நற்செய்தியை நாம் தன்மயமாக்க அன்னைமரி உதவுவார் என்று கூறினார்.
புதிய நற்செய்திப்பணி குறித்த ஆயர்கள் மாமன்றத்துக்காக விசுவாசிகள் செபிக்குமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.