2012-10-08 17:01:37

திருத்தந்தை : திருஅவைக்கு இரண்டு புதிய மறைவல்லுனர்கள்


அக்.08,2012. புனித பின்ஜென் ஹில்டெகார்டு, புனித அவிலா ஜான் ஆகிய இருவரையும் திருமறையின் மறைவல்லுனர்கள் என இஞ்ஞாயிறன்று அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறன்று 13வது ஆயர்கள் மாமன்றத் தந்தையரோடு நிகழ்த்திய திருப்பலியில், நற்செய்திப்பணியில் புனிதர்கள் உண்மையான செயல்பாட்டாளர்கள், இவர்கள் தங்கள் எடுத்துக்காட்டான வாழ்வால் புதிய நற்செய்திப்பணிக்கு முன்னோடிகளாய் இருக்கின்றார்கள் என்று கூறினார் திருத்தந்தை.
கலாச்சார, சமூக, அரசியல் அல்லது சமய எல்லைகளுக்குப் புனித வாழ்வு உட்பட்டதல்ல என்றும், இப்புனித வாழ்வின் அன்பு மற்றும் உண்மையின் மொழி, நன்மனம் கொண்ட அனைவராலும் புரிந்துகொள்ளப்படுகின்றது, இது புதிய வாழ்வின் தளராத ஊற்றாகிய இயேசு கிறிஸ்துவிடம் அவர்களை இட்டுச்செல்கிறது என்றும் திருத்தந்தை கூறினார்.
கடந்த காலத்தின் மறைபோதகத் தளங்களிலும், தற்போது கிறிஸ்தவர் அல்லாதவர்கள் வாழும் இடங்களிலும் தாராள உள்ளத்தோடு மறைப்பணியாற்றியவர்கள் மத்தியிலிருந்து புனிதர்கள் மலர்கிறார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
பெனடிக்ட் சபைத் துறவியாகிய புனித பின்ஜென் ஹில்டெகார்டு(1098-1179), ஓர் அறிவுக்களஞ்சியம். இவர் ஓர் இறைவாக்கினர், இசையமைப்பாளர், அறிவியலாளர், மெய்யியலாளர், இறையியலாளர், தியானயோகி, எழுத்தாளர், புனித பெர்னார்டின் நண்பர், கிறிஸ்து மற்றும் திருஅவைமீது மிகுந்த பற்றுறுதியுடன் செயல்பட்டவர்.
புனித அவிலா ஜான்(1499-1569) அப்போஸ்தலிக்கப் பணியில் செபத்தை இணைத்தவர். போதிப்பதில் காலத்தைச் செலவழித்தவர். குருத்துவ மாணவர்களை உருவாக்கும் பயிற்சியை மேம்படுத்தியவர்.
இவ்விரு புதிய மறைவல்லுனர்களுடன் கத்தோலிக்கத் திருமறையில் 35 பேர் மறைவல்லுனர்கள்.







All the contents on this site are copyrighted ©.