2012-10-06 15:31:06

வத்திக்கான் காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினருக்குத் திருத்தந்தை வாழ்த்து


அக்.06,2012. பணியில் நேர்மை, பற்றுறுதி, தியாகம் ஆகிய பண்புகளுடன் புனித பேதுருவின் வழிவருபவர்க்குத் தாராள உள்ளத்துடன் பணி செய்துவரும் வத்திக்கான் காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினருக்குத் தனது நன்றியையும் பாராட்டையும் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Gendarmerie என்ற வத்திக்கான் காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினர் இவ்வெள்ளியன்று தங்களது விழாவைச் சிறப்பித்ததையொட்டி அவர்களுக்கு தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பினார் திருத்தந்தை.
திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீடச் செயலகத்தின் நேரடிச் செயலர் பேரருட்திரு ஆஞ்சலோ பெச்சு (Angelo Becciu) வாசித்தார்.
மேலும், திருத்தந்தையின் அறையிலிருந்து அவரது கடிதங்களையும் மற்றும்பிற இரகசிய ஆவணங்களையும் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள, திருத்தந்தைக்கு உணவு பரிமாறுதல், அறையைப் பராமரித்தல் உட்பட அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்துவந்த பவுலோ கபிரியேலே விவகாரத்தில் வத்திக்கான் Gendarmerieவின் பணி குறிப்பிடும்படியானது.
வத்திக்கான் Gendarmerieவின் பாதுகாவலரான அதிதூதர் மிக்கேல் விழா செப்டம்பர் 29ம் தேதியாகும். ஆயினும் இக்காவல்துறையினர் இவ்விழாவை இவ்வெள்ளியன்று சிறப்பித்தனர்.
20க்கும் 25 வயதுக்கும் உட்பட இத்தாலியக் குடியுரிமையுடையவர்கள் வத்திக்கான் Gendarmerieவில் சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள் குறைந்தது ஈராண்டுகள் இத்தாலியக் காவல்துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.







All the contents on this site are copyrighted ©.