2012-10-06 13:41:18

அக்டோபர் 07, பொதுக்காலம் - 27ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 இந்த ஞாயிறன்று, கணவன், மனைவி உறவைப்பற்றி... குடும்ப உறவுகளைப்பற்றிச் சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நான் கலந்துகொண்ட திருமணத் திருப்பலிகளில் ஒருசில முறை அருள் பணியாளர்கள் சொன்ன ஒரு கதை இது. இக்கதை நமது சிந்தனைகளை ஆரம்பித்து வைக்கிறது.
கிறிஸ்தவத் திருமணங்களுக்கு முன்னால், மாப்பிள்ளை, பெண் இருவருக்கும் மறைகல்வி எவ்வளவு தெரிந்திருக்கிறதென பங்குத்தந்தை சோதிப்பார். அப்படி ஒரு முறை, திருமணத்திற்கு நாள் குறிக்க வந்த ஓர் இளைஞனிடம் பங்குத்தந்தை கேட்டார்: “இயேசு திருமணத்தைப்பற்றி ஏதாவது சொல்லியிருக்கிறாரா? அப்படி சொல்லியிருந்தால், என்ன சொல்லியிருக்கிறார்?” என்று பங்குத்தந்தை கேட்டதும், இளைஞன் தடுமாறினார். பின்னர், திடீரென ஞானோதயம் உண்டாகி, இளைஞன் பதில் சொன்னார்: "சொல்லியிருக்கிறார், சாமி... ‘தந்தையே, இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்’ என்று இயேசு சொல்லியிருக்கிறார்." இளைஞன் சொன்ன இப்பதிலைக் கேட்டு, பங்குத்தந்தை தடுமாறிப் போனார்.

வேடிக்கையாகச் சொல்லப்படும் ஒரு கதை இது. “இவர்கள் அறியாமல் செய்கிறார்கள்” என்று இயேசு சொன்னது, திருமணத்தைப்பற்றி அல்ல என்பது நமக்குத் தெரியும்... ஆனால், நாம் திருமணங்களை அறிந்து செய்கிறோமா? அறியாமல் செய்கிறோமா? என்ற கேள்வியை எழுப்புவது நல்லது. இது என்ன கேள்வி?... இவ்வளவு முக்கியமான ஒரு முடிவெடுக்கும்போது எப்படி அறியாமல் செய்கிறோம் என்று சொல்லமுடியும் என்று பலர் எதிர் கேள்வி கேட்கலாம். திருமணங்களை நாம் அறிந்துதான் செய்கிறோம். ஒத்துக்கொள்கிறேன். ஆனால், நாம் எவற்றையெல்லாம் அறிந்து செய்கிறோம்? எவற்றையெல்லாம் அறியாமல் செய்கிறோம்? என்று சிந்திப்பது பயனளிக்கும்.

குலம், கோத்திரம், நாள், நட்சத்திரம் இவைகளெல்லாம் பொருந்தி வருகின்றனவா என்று ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் செய்கிறோம். அடுத்ததாக, படிப்பு, தொழில், சம்பளம், சொத்துக்கள் என்று ஒரு நீண்ட கணக்கு. வரதட்சணை, அல்லது அன்பளிப்பு என்ற ஏதோ ஒரு பெயரில் எவ்வளவு தருவது, எவ்வளவு பெறுவது என்று ஒரு வியாபார ஒப்பந்தம்... இந்த ஆராய்ச்சிகள் தேவையா? இவைதாம் நாம் அறியவேண்டியவைகளா?

திருமண வாழ்வுக்கு முன்னேற்பாடாக எதை நாம் அறியவேண்டும்? பழைய திரைப்படப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது... "கட்டடத்துக்கு மனைப் பொருத்தம் அவசியம். காதலுக்கு மனப் பொருத்தம் அவசியம்."
நம்மில் எத்தனைப் பேர் மனப் பொருத்தம் பார்க்கிறோம்? இனம், குலம், மதம், பணம் என்று எத்தனையோ பொருத்தங்கள் பார்க்கும் நாம், குணம், மனம் இவற்றின் பொருத்தம் பார்ப்பது அரிது. மனம், குணம் இவைப் பொருந்தவில்லை என்றால், இவை போகப் போகச் சரியாகிவிடும் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்கிறோம். மனம், குணம் இவைகளில் என்னதான் பொருத்தம் பார்த்தாலும், நாளுக்கு நாள் மாறக்கூடிய இவைகளுக்கு என்ன உத்தரவாதம்? இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு மேற்கொள்ளப்படும் காதல் திருமணங்களில் கூட இந்த உத்தரவாதம் இல்லையே.

உத்தரவாதத்தைப் பற்றி பேசும்போது, மற்றொரு எண்ணம் எழுகிறது. பொருட்களை வாங்கும்போது உத்தரவாதம் பார்த்து வாங்குகிறோம். உத்தரவாதம் பெற்ற பொருள் சரியில்லை என்றால், திருப்பிக் கொடுத்துவிட்டு, வேறு ஒன்று வாங்கி வருகிறோம். திருமண உறவில், வாழ்வில் இப்படி மாற்ற முடியுமா?

இந்தக் கேள்விதான் இன்றைய நற்செய்திக்குப் பின்னணி. பரிசேயர் இயேசுவை அணுகி கேட்கும் கேள்வி இது: "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" மனைவி எதோ ஒரு பொருள் போலவும், அந்தப் பொருளை ஆண்மகன் திருப்பிக் கொடுப்பது போலவும்.. இந்தக் கேள்வி ஓலிக்கிறது! இயேசுவைச் சோதிக்கவே இந்தக் கேள்வி கேட்கப்பட்டது என்றும் நற்செய்தியாளர் மாற்கு சுட்டிக்காட்டுகிறார். கேட்பவர்கள் எந்தக் கோணத்தில் கேட்டாலும் இயேசுவுக்குக் கவலையில்லை. இஸ்ரயேல் சமுதாயம் நல்ல உண்மைகளைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதில் எப்போதும் குறியாய் இருந்த இயேசு, இத்தருணங்களையெல்லாம் பயன்படுத்திக்கொண்டார். இஸ்ரயேல் மக்கள் மத்தியில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த சமூக நிலை சரியானது அல்ல, அவர்கள் ஏறத்தாழ ஒரு பொருளைப் போலவே நடத்தப்பட்டனர். இதே அவலம் இன்றும் பல நிலைகளில், பல வடிவங்களில் நம் சமுதாயத்தில் உள்ளது.

"கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்று பரிசேயர்கள் இயேசுவிடம் கேட்டபோது, விருப்பப்பட்டால் வாங்கிக்கொள்ளலாம், விருப்பமில்லையெனில், திருப்பித் தரலாம் என்ற பாணியில் பெண்களை வியாபாரப் பொருளாக்கும் அவர்களது கடின மனதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். "ஆணுக்குப் பெண் சரி நிகர் சமம்" என்று ஆணித்தரமாய் சொல்கிறார், இயேசு. ஆணையும், பெண்ணையும் இறைவன் படைத்த வேளையில், அவர்களை இணையாக, ஒருவருக்கொருவர் துணையாக படைத்தார் என்பதைத் தொடக்க நூல் இரண்டாம் பிரிவில் இன்றைய முதல் வாசகமாகக் கேட்டோம். இதே எண்ணங்களை இயேசுவும் வலியுறுத்துகிறார்.

யார் பெரியவர் என்று போன வார நற்செய்தியில் கேள்வி எழுப்பிய சீடர்கள் மத்தியில் இயேசு ஒரு குழந்தையை வைத்தார். இந்த வார நற்செய்தியிலும், இயேசு "சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது" (மாற்கு நற்செய்தி 10: 14) என்கிறார்.
கடந்த மூன்று வாரங்களாய் குழந்தைகளிடமிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள இயேசு தொடர்ந்து கூறி வருகிறார். வாழ்க்கையின் பிரச்சனைகளைச் சமாளிக்க, வளர்ந்துவிட்ட நமக்குத் தெரியவில்லை என்றால், குழந்தைகளிடம் பாடங்கள் கற்றுக்கொள்ளலாமே!

குழந்தைகளிடம் பாடங்களைக் கற்றுக்கொள்ள நமது தன்மானம் இடம்தரவில்லையெனில், வயது முதிர்ந்த பெரியவர்களிடம், திருமண உறவில் பல்லாண்டுகள் வாழ்ந்து அனுபவ மலையின் சிகரத்தைத் தொட்டிருக்கும் பெரியவர்களிடம் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாமே! வயது முதிர்ந்தவர்களும் இரண்டாம் குழந்தைப் பருவத்தில் உள்ளவர்கள் என்பதை நாம் கேட்டிருக்கிறோம்... இதோ, 80 வயது நிறைந்த ஒரு குழந்தை நமக்குச் சொல்லித்தரும் ஒரு பாடத்தை ஒரு கதையாகக் கேட்டு, நமது சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்.

காலை மணி 8.30… மருத்தவமனையில் எல்லாரும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர். அந்நேரம் அங்கு 80 வயது நிறைந்த ஒரு முதியவர் வந்தார். சில நாட்களுக்கு முன் அவர் கையில் கீறல் விழுந்து தையல்கள் போடவேண்டியிருந்தது. அன்று தையலைப் பிரிக்கும் நாள். அவர் நேரே 'நர்ஸ்'இடம் சென்று, தன் கட்டை அவிழ்க்குமாறு சொன்னார். நர்ஸ் அவரைச் சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார். முதியவரோ, தனக்கு 9 மணிக்கு ஒரு முக்கிய வேலை உள்ளதென்று சொல்லி, தனக்கு உடனே உதவும்படி நர்ஸ்இடம் வேண்டிக்கொண்டார்.
நர்ஸ் அவரது கட்டை அவிழ்த்துக் கொண்டிருக்கும்போது, அவருடைய அவசர வேலையைப்பற்றி கேட்டார். அருகிலிருந்த மற்றொரு மருத்துவமனைக்குச் சென்று, தன் மனைவியுடன் காலை உணவு அருந்தவேண்டும் என்று முதியவர் சொன்னார். அவர் தாமதமாகச் சென்றால், அவர் மனைவி கோபித்துக்கொள்வாரோ என்று நர்ஸ் கேட்டதும், முதியவர் சிரித்தார்...
"என் மனைவி Alzheimer's நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, கடந்த ஐந்து ஆண்டுகளாக அவருக்கு நான் யார் என்பதுகூடத் தெரியாது" என்று அவர் சொன்னார்.
நர்ஸுக்கு ஆச்சரியம்... "நீங்கள் யாரென்றே தெரியாமல் இருக்கும் உங்கள் மனைவியை ஒவ்வொரு நாளும் பார்க்கச் செல்கிறீர்களா?" என்று அவர் தன் ஆச்சரியத்தை வெளியிட்டார்.
அதற்கு அந்த முதியவர், தன் புன்னகை மாறாமல், "அவருக்குத்தான் என்னைத் தெரியாது, ஆனால், எனக்கு அவரை நன்கு தெரியும்" என்று கூறினார்.
கண்களில் பொங்கிய கண்ணீரை அடக்கிக்கொண்டு நர்ஸ் அந்த முதியவருக்கு உதவிகள் செய்தார்.

இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளின் வேர்களைத் தேடிப்போனால் அங்கு உறவுகளின் பிரச்சனைகளை நாம் எளிதில் பார்க்கலாம். இந்தப் பிரச்சனைகளுக்கு ஆணிவேராக இருப்பது நீயா, நானா...யார் பெரியவர் என்ற கேள்விதான்... ஆணா, பெண்ணா, நீயா, நானா...யார் பெரியவர் என்ற கேள்வியை எழுப்பாமல், இருவரும் இணை என்று உணரும்போது, திருமண வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வழியுண்டு.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்
என்று பாரதி சொன்ன இந்த உண்மையை மட்டும் இந்த உலகம் உணர்ந்தால்...
இந்த உண்மையின் ஆழத்தை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள முடிந்தால்...
அப்படிப் புரிந்துகொள்வதன் மூலம், இவ்வுண்மையை மனதார ஏற்றுக்கொள்ள முயன்றால்...
ஆண்-பெண் உறவுகள் எவ்வளவோ நலமுடன், பலமுடன் வளரும். திருமண வாழ்வின் பிரச்சனைகள் தீரும். உறுதி நிறைந்த மனிதச் சமுதாயம் உருவாகும்.








All the contents on this site are copyrighted ©.