2012-10-06 15:28:31

13வது உலக ஆயர்கள் மாமன்றம் அக்.07-28


அக்.06,2012. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்குகொள்ளவிருக்கும் மாமன்றத் தந்தையர்கள் உள்ளிட்ட 408 பிரதிநிதிகளுடன் இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூட்டுத்திருப்பலி நிகழ்த்தி இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தைத் தொடங்கி வைக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
49 கர்தினால்கள், 7 கீழைரீதிச் சபைத் தலைவர்கள், 71 பேராயர்கள், 120 ஆயர்கள், 86 அருள்பணியாளர்கள், 9 வல்லுனர்கள், 27 பார்வையாளர்கள், 3 மொழி பெயர்ப்பாளர்கள் உட்பட 408 பேர் திருத்தந்தையோடு கூட்டுத்திருப்பலி நிகழ்த்துவார்கள்.
இத்திருப்பலியில் ஜெர்மனியின் புனித பின்ஜென் ஹில்டெகார்டு, இஸ்பெயினின் புனித அவிலா ஜான் ஆகிய இருவரையும் மறைவல்லுனர்கள் என அறிவிப்பார் திருத்தந்தை.
கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதற்கான புதிய நற்செய்திப்பணி என்ற தலைப்பில் இம்மாதம் 7 முதல் 28 வரை நடைபெறவிருக்கும் இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில், சென்னை-மயிலைப் பேராயர் மலையப்பன் சின்னப்பா, இலங்கையின் பதுல்லா ஆயர் ஜூலியன் வின்ஸ்டென் செபஸ்தியான் பெர்னான்டோ உட்பட 39 பேர் ஆசியாவிலிருந்து கலந்து கொள்கின்றனர்.
பாரம்பரியக் கிறிஸ்தவ நாடுகளில் நற்செய்தியைப் புதிய வழிகளில் அறிவிப்பதற்குச் செயல்திட்டங்களை உருவாக்கும் நோக்கம் கொண்ட இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒவ்வொரு செயலையும் செபம் துணைநின்று வழிநடத்தும் என்று, உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் பேராயர் நிக்கோலா எத்ரோவிச் அறிவித்தார்.
இந்த ஆயர் மாமன்றத்திற்காக ஒவ்வொரு கிறிஸ்தவரும் செபிக்குமாறும் கேட்டுள்ளார் பேராயர் எத்ரோவிச்.
இந்த மாமன்றத்தின்போது எல்லாப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் 23 பொது அமர்வுகளும், எட்டு சிறிய அமர்வுகளும் இடம்பெறும். இந்தச் சிறிய அமர்வுகள் மாமன்றத்தின் 12 அதிகாரப்பூர்வ மொழிகளில் நடைபெறும் எனவும் பேராயர் எத்ரோவிச் கூறினார்.
இம்மாதம் 28ம் தேதி இந்த மாமன்றத் தந்தையரோடு கூட்டுத்திருப்பலி நிகழ்த்தி இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தை நிறைவு செய்வார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.