2012-10-05 15:38:24

விசுவாச ஆண்டு பரிபூரண பலன்


அக்.05,2012. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு நிறைவு நாளான இம்மாதம் 11ம் தேதியன்று தொடங்கும் விசுவாச ஆண்டுக்குப் பரிபூரண பலனை அறிவித்துள்ளது திருப்பீட பாவமன்னிப்புச்சலுகைத் துறை.
2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதியன்று தொடங்கி 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதியன்று நிறைவடையும் விசுவாச ஆண்டில் வழங்கப்படும் பரிபூரண பலன் மூலம் பாவங்களுக்கானத் தற்காலிகத் தண்டனைகளிலிருந்து மன்னிப்புப் பெற முடியும்.
தங்களது பாவங்களுக்காக உண்மையிலே மனம் வருந்தி ஒப்புரவு திருவருட்சாதனத்தைப் பெற்று திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபிக்கும் அனைத்து விசுவாசிகளும் இந்தப் பலனைப் பெறலாம்.
மேலும், நற்செய்திப் போதனைகளில் குறைந்தது மூன்று தடவைகளும் அல்லது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் கொள்கைத்திரட்டுகள் மற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு குறித்து ஆலயத்தில் அல்லது தகுதியான இடத்தில் இடம்பெறும் வகுப்புக்களில் குறைந்தது மூன்று தடவைகள் பங்கெடுத்தாலும் இந்தப் பரிபூரண பலனைப் பெறலாம்.
விசுவாச ஆண்டில் தல ஆயரால் குறிக்கப்பட்ட ஒரு பசிலிக்கா அல்லது ஒரு பேராலயத்துக்கும், கிறிஸ்தவக் கல்லறைக்கும், ஒரு திருத்தலத்துக்கும் திருப்பயணமாகச் சென்று, நம் ஆண்டவர் கற்றுக் கொடுத்த செபம், அதிகாரப்பூர்வ விசுவாச அறிக்கை, அன்னைமரியா அல்லது திருத்தூதர்கள் அல்லது பாதுகாவலர் புனிதரை நினைத்துச் செபத்திலும் தியானத்திலும் சிறிது நேரம் செலவிட்டாலும் இந்தப் பரிபூரண பலனைப் பெறலாம்.
இந்தப் பரிபூரண பலனுக்கு இன்னும் சில செயல்முறைகளையும் கொடுத்துள்ளது திருப்பீட பாவமன்னிப்புச்சலுகைத் துறை.







All the contents on this site are copyrighted ©.