2012-10-05 15:56:54

பங்களாதேஷில் வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு உச்ச நீதிமன்றம் ஆணை


அக்.05,2012. பங்களாதேஷில் புத்த மற்றும் இந்துமதச் சமூகங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதையடுத்து அந்நாட்டில் வழிபாட்டுத் தலங்களுக்குரிய பாதுகாப்பை வலுப்படுத்துமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உள்துறை அமைச்சகத்துக்கும் காவல்துறை தலைமை அதிகாரிக்கும் ஆணை பிறப்பித்துள்ளது.
புனித நூலான குரான் எரிந்த நிலையில் காட்டப்படும் படம் ஒன்று, ஒரு புத்தமதத்தவரால் ஃபேஸ் புக்கில் பிரசுரம் செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் சிட்டகாங் மற்றும் கோக்ஸ் பஜார் மாவட்டங்களில் எழுந்த வன்முறைகளில் 19 கோவில்கள், 100 வீடுகள் மற்றும் பல கடைகள் எரிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன.
பங்களாதேஷ் அரசியல் அமைப்பு, ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்புக்கும் சமய சுதந்திரத்துக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கு உறுதியளிக்கின்றது என்றுரைத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் யூனுஸ் அலி அக்காந்த், அண்மையில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்றுள்ளதால் அவர்களுக்குப் பாதுகாப்பு அவசியம் என்று கூறினார்.
பங்களாதேஷின் 15 கோடியே 20 இலட்சம் மக்களில் ஏறக்குறைய 90 விழுக்காட்டினர் முஸ்லீம்கள்.







All the contents on this site are copyrighted ©.