2012-10-03 16:03:46

சிரியாவில் கலாச்சாரப் பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்படுவதற்கு அழைப்பு


அக்.03,2012. சிரியாவிலுள்ள உலக மனிதகுல மற்றும் கலாச்சாரப் பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்படுவதற்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்.
அலெப்போ நகரின் வரலாற்று சிறப்புமிக்க மத்தியகாலங்களைச் சேர்ந்த சந்தைகள் குண்டுவெடிப்பில் அழிக்கப்பட்டுள்ளதையடுத்து சிரியாவின் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோவுக்கும் திருப்பீட கீழைரீதி பேராயத்துக்கும், திருப்பீட கலாச்சார அவைக்கும் விண்ணப்பங்களை விடுத்துள்ளனர்.
சிரியாவின் இராணுவத்துக்கும் எதிர்தரப்பு புரட்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் கடும் சண்டையில், அந்நாட்டின் வணிகத் தலைநகரமான அலெப்போவில் இப்புதனன்று மூன்று வாகனவெடிகுண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 27 பேர் இறந்துள்ளனர் மற்றும் 72 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அலெப்போவின் பழைய நகர்ப் பகுதியிலுள்ள Palmyra, Apamea போன்ற வரலாற்று மையங்களும், அருங்காட்சியகங்களும் தாக்குதல்களில் சிக்கியுள்ளன என்றுரைக்கும் அத்தலைவர்களின் விண்ணப்ப அறிக்கை, யூதமதத் தொழுகைக்கூடங்கள், ஆலயங்கள், மசூதிகள், பழங்காலத் துறவு இல்லங்கள், திருத்தலங்கள் போன்ற மதம் சார்ந்த இடங்கள் இராணுவத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சிரியாவில் இடம்பெறும் சண்டையால் அந்நாட்டிலிருந்து மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர் என்று ஐ.நா.வின் அகதிகள் நிறுவனம் கூறியது.







All the contents on this site are copyrighted ©.