2012-10-03 16:16:13

இலங்கையில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் துவக்கம்


அக்.03,2012. இலங்கையில் போர் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இந்திய அரசின் நிதியுதவியில் ஐம்பதாயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் வட மாநிலத்தில் மன்னார் உட்பட ஐந்து மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தியின் 143வது பிறந்தநாளாகிய இச்செவ்வாயன்று மகாத்மாவின் சிலைக்கு மலர்மாலைகள் சூட்டி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் பொருளாதார முன்னேற்ற அமைச்சர் பசில் ராஜபக்ச, இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே.காந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக், இரண்டாம் கட்ட வீடமைப்பில் 43 ஆயிரம் வீடுகள் கட்டப்படவுள்ளதாக அறிவித்தார். மேலும், இத்திட்டத்தின் முதற்கட்ட பயனாளிகளுக்கான காசோலையையும் வழங்கினார்.
50 ஆயிரம் வீடுகள் கட்டும் இந்தியத் திட்டத்தின் முதற்கட்டமாக, ஆயிரம் வீடுகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. இரண்டாம் கட்டத்தில் வடமாநிலத்தில் 40 ஆயிரம் வீடுகளும், கிழக்கு மாநிலத்தில் மூவாயிரம் வீடுகளும் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக இந்தியத் தூதர் அசோக் மேலும் கூறினார்.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஐந்தரை இலட்சம் ரூபாய் நிதியுதவி அவ்வீட்டைப் பெறுபவரின் வங்கிக் கணக்கில் நான்கு கட்டங்களில் நேரடியாகச் செலுத்தப்படவுள்ளது. மேலும், முதற்கட்டமாக குடும்பம் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம் 1,500 குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாக இந்தியத் தூதர் அந்நிகழ்வில் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.