2012-10-03 15:53:04

அகதிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு பேராயர் தொமாசி ஐ.நா.வில் வலியுறுத்தல்


அக்.03,2012. உலகில் தொடங்கியுள்ள அண்மை மோதல்கள் புதிதாக அகதிகளையும் புலம்பெயர்வோரையும் உருவாக்கியுள்ளவேளை, அகதிகளுக்கும் நாடுகளுக்குள்ளே புலம் பெயர்ந்திருப்பவர்களுக்கும் தோழமையுணர்வு காட்டப்பட்டு அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு பேராயர் சில்வானோ தொமாசி ஐ.நா.வில் கேட்டுக் கொண்டார்.
UNHCR என்ற ஐ.நா.வின் அகதிகள் நிறுவனம் சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் நடத்தும் 63வது அமர்வில் இச்செவ்வாயன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொமாசி இவ்வாறு கூறினார்.
பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பயனற்ற வன்முறைகள் பயன்படுத்தப்படுவதால், நூறாயிரக்கணக்கான மக்களின், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறாரின் துன்பங்களில் இவற்றின் விளைவுகள் தெளிவாகத் தெரிகின்றன என்றும் பேராயர் கூறினார்.
ஊடகங்களும் அரசியல்ரீதியாக ஆர்வத்தைத் தூண்டும் செய்திகளையே வெளியிட்டு, பெருமளவில் புலம் பெயரும் மக்கள் குறித்துப் பொது மக்களுக்குச் சொல்லத் தவறுகின்றன என்றுரைத்த பேராயர் தொமாசி, அகதிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுமாறு ஐ.நா.வைக் கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.