2012-10-02 14:56:12

திருப்பீட உயர் அதிகாரி : புதிய அறிவின் இலக்கு, பொதுநலனைக் கருதியதாய் அமைய வேண்டும்


அக்.02,2012. சமுதாய முன்னேற்றத்துக்கும், ஆய்வாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நீதியான இழப்பீடு வழங்கப்படுவதற்கும் அறிவுச்சொத்துப் பாதுகாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்பதைத் திருப்பீடம் ஏற்கிறது என்று பேராயர் சில்வானோ தொமாசி ஐ.நா.வில் தெரிவித்தார்.
WIPO என்ற உலக அறிவுச்சொத்து நிறுவனம், சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் இத்திங்கள் முதல் இம்மாதம் 9ம் தேதி வரை நடத்திவரும் 50வது கூட்டத்தில் உரையாற்றிய ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் தொமாசி இவ்வாறு கூறினார்.
பன்னாட்டு அளவில் அறிவுச்சொத்தைப் பாதுகாத்து ஊக்குவிப்பதில் சமநிலை காக்கப்படுவதற்கு கடந்த ஆண்டில் ஐ.நா. எடுத்த முயற்சிகளைப் பாராட்டிப் பேசினார் பேராயர் தொமாசி.
ஒரு சமுதாயத்தின் கலாச்சார வாழ்வில் அனைவரும் சுதந்திரமாகப் பங்கு பெற்று கலைகளை அனுபவிப்பதற்கு அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் எண் 27 அனுமதியளிக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசிய பேராயர் தொமாசி, தகவல் பெறவும், கலாச்சாரம் மற்றும் கல்வி பெறவும் மாற்றுத்திறானாளிகள் சமவாய்ப்புகள் பெறுவதற்கு, உரிமங்கள் தடையாய் இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார்.
வளர்ந்த நாடுகளில் கண்பார்வை பாதிக்கப்பட்டோர் 5 விழுக்காட்டு நூல்களையே வாசிக்க முடிகின்றது என்றும் உரைத்த அவர், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள அதிகம் முன்னேறிய நாடுகளில்கூட இந்நிலை இருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.