2012-10-01 15:49:40

வாரம் ஓர் அலசல் – “முதியோர், வளர்ச்சிக்குப் புதிய சக்தி"


அக்.01,2012. அன்பு நேயர்களே, உயிரினங்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு பருவம் முதுமை. இது இயற்கையின் நியதி. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தப் பருவத்தைப் பார்த்துவிட்டுத்தான் பலரும் பரகதி செல்கின்றனர். ஒவ்வொரு மனிதரிலும் ஆண்டு ஒன்று கடந்து போனால் வயதும் ஒன்று கூடுகிறது. அதுமட்டுமல்ல, இன்றைய இளமையும் நாளைய முதுமையை நோக்கிப் பயணமாகும் படிக்கட்டின் தொடக்கம்தான். இந்தப் புரிதல் இருந்தால்,''அந்தப் பெரிசுக்குச் சொன்னா விளங்காது'' என்று இளையோரும், ''நான் சொல்றதைக் கேட்கவே மாட்டீங்கிறாங்க'' என்று முதியோரும் புலம்புவதற்கு இடமே இருக்காது. மேலும், இன்றைய நவீன மருத்துவமும், சத்துணவும், நலவாழ்வு வசதிகளும் மனிதர்களின் சராசரி ஆயுள்காலத்தை அதிகரித்து வருகின்றன. அறுபதும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடையவர்களை முதியோர் என்று ஐ.நா. கணிக்கின்றது. WHO உலக நலவாழ்வு நிறுவனம் ஜப்பானின் டோக்கியோவில் இத்திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகில் அடுத்த 50 ஆண்டுகளில் முதியோரின் எண்ணிக்கை ஏறக்குறைய இருநூறு கோடியாக உயர்ந்திருக்கும். தற்போது உலகில் ஏழு வளரும் நாடுகள் உட்பட 15 நாடுகளில் ஒரு கோடிக்கு மேற்பட்ட முதியோர் உள்ளனர். இன்று உலகில், ஒன்பது பேருக்கு ஒருவர் அறுபதும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடையவர்கள். இந்த நிலை 2050ம் ஆண்டுக்குள் ஐந்து பேருக்கு ஒருவர் என மாறிவிடும். 1950ம் ஆண்டில் 20 கோடியே 50 இலட்சமாக இருந்த முதியோரின் எண்ணிக்கை இந்த 2012ம் ஆண்டில் 81 கோடியாக உயர்ந்துள்ளது. 2010க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் மனிதரின் ஆயுள்காலம், வளர்ந்த நாடுகளில் 78 ஆண்டுகளாகவும், வளரும் நாடுகளில் 68 ஆண்டுகள் ஆகவும் இருக்கின்றது. இந்நிலை, 2040க்கும் 2050க்கும் இடைப்பட்ட காலத்தில் வளர்ந்த நாடுகளில் 83 ஆண்டுகள் ஆகவும், வளரும் நாடுகளில் 74 ஆண்டுகள் ஆகவும் இருக்கும். நூறு வயதைக் கடந்தவர்கள் 2011ம் ஆண்டில் 3,16,600 ஆக இருந்தனர். இவர்களின் எண்ணிக்கை 2050ம் ஆண்டில் 32 இலட்சமாக இருக்கும்.
உலகில் முதியோர் குறித்த மேலும் பல புள்ளி விபரங்களை ஐ.நா.வெளியிட்டுள்ளது. முதுமை, அனுபவங்களின் மூலதனம், இளமையை அசைபோடும் இன்ப இசை, இன்ப துன்பங்களின் இனிய இராகம், வளர்ச்சிக்குப் புதிய சக்தி என்றெல்லாம் புகழ்ந்து சொல்லப்படுகின்றது. மூன்றாவது பருவம் என்றும் அழைக்கப்படும் முதியவர்களை முதியவர்கள் என்று சொல்வதைவிட முதிர்ந்தவர்கள் என்று சொல்வது இன்னும் சிறப்பாக இருக்கும். இவர்கள் எல்லாவற்றிலும் முதிர்ந்தவர்களாக, பக்குவம் அடைந்தவர்களாக இருக்கிறார்கள். புகழ்பெற்ற கவிஞர் Henry Wadsworth, இத்தாலியின் உன்னதக் கவிஞரான Dante Alighieriன் The Divine Comedy என்ற காப்பியத்தை முதலில் மொழி பெயர்த்த அமெரிக்கர் ஆவார். Henry Wadsworth தனது வயதான காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுவந்த விதத்தைப் பார்த்து அன்று பலரும் வியப்படைந்தார்கள். வயதாகி தலைமுடிகள் எல்லாம் நரைத்து வெள்ளையாகிவிட்ட நிலையிலும் அவர் புகழ்பெற்ற கவிஞராக எழுதிக் கொண்டிருந்தார். அப்போது பலர் அவரிடம் இதற்கான இரகசியம் என்னவென்று கேட்டார்கள். அதற்கு Henry Wadsworth தனது வீட்டிற்கு அருகிலிருந்த ஓர் ஆப்பிள் மரத்தைக் காட்டிச் சொன்னார்: “இந்த மரம் பல ஆண்டுகளாக உள்ளது. அதற்கும் வயதாகி விட்டது. ஆயினும் இன்றும் அது பூத்துக் குலுங்கி, சுவையான கனிகளைத் தருகின்றது. இதில் ஒரு சிறப்பு என்னவெனில் இப்போது இந்த மரம் தரும் கனிகளின் சுவை இதற்கு முன்னர் தரப்பட்டதைவிட நன்றாக உள்ளது. அதுபோல எனக்கு வயதாகி விட்டாலும் நான் மேலும் சிறப்பாக என் கவிதைகள் மூலம் என் வாழ்வின் வளர்ச்சியைக் காட்டுவதற்கு விரும்புகிறேன்” என்று.
கவிஞர் Henry Wadsworth போன்ற வயதில் முதிர்ந்தவர்கள், இன்றைய இளைய தலைமுறைக்கு அனுபவங்களின் புதையல்களாகத் திகழ்கிறார்கள். இத்தகைய பெரியோரின் அறிவுரைகளும் அனுபவங்களும் இளையவர்களுக்கு மிகவும் தேவை. ஏனெனில் முதியோரின் ஞானம், இளையோரின் தொலைநோக்குப் பார்வையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதேநேரம், பெரியவர்களும் தங்களது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது நல்லது. Calvin Coolidge சொன்னது போன்று, எந்த மனிதரும் தாங்கள் பெற்றவைகளுக்காக கவுரவிக்கப்படுவதில்லை. ஆனால், அவர்கள் கொடுத்ததற்காகத்தான் கவுரவிக்கப்படுகிறார்கள்.
எனவே முதியவர்கள் சமுதாயத்துக்குச் செய்துவரும் அரும்பணிகளை நினைவுகூர்ந்து அவர்களைப் போற்றவும், அவர்களைப் பாதிக்கும் விவகாரங்களை உலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டுவதற்குமென அக்டோபர் முதல் தேதியன்று அனைத்துலக முதியோர் தினத்தைக் கடைப்பிடித்து வருகிறது ஐ.நா.நிறுவனம். 1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ஐ.நா.பொது அவையில் இந்த உலக தினம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1991ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் தேதியன்று அனைத்துலக முதியோர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த உலக நாள், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் கானடாவிலும் தேசிய தாத்தா பாட்டிகள் தினமாகவும், ஜப்பானில் முதியவர்களை மதிக்கும் தினமாகவும் சிறப்பிக்கப்படுகின்றது. “நீண்ட ஆயுள்காலம்: வருங்காலத்தை வடிவமைக்கிறது” என்ற தலைப்பில் இத்திங்களன்று இத்தினம் சிறப்பிக்கப்பட்டது. இத்தினத்திற்கென செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், முதியவர்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்று கேட்டுள்ளார்.
இன்று உலக அளவில் முதியவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதும், மனிதரின் ஆயுள்காலம் தொடர்ந்து நீண்டு வருவதும் இந்த நமது காலத்தின் பெரும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களில் ஒன்றாக இருக்கின்றது. மக்கள் தொகையில் ஏற்படும் இந்த மாற்றம் ஒவ்வொரு சமூகத்தையும், குடும்பத்தையும், மனிதரையும் பாதிக்கின்றது. தனிமனிதர் தங்கள் வாழ்நாளில் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதை மீண்டும் சிந்திக்கச் செய்கின்றது. இந்த அனைத்துலக முதியோர் தினத்தன்று, முதியவர்களின் நல்வாழ்வுக்கு உறுதியளிப்போம். அவர்கள் சமுதாயத்தில் அர்த்தமுள்ள வகையில் செயல்பட்ட ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு அவர்களது அறிவு மற்றும் திறமையிலிருந்து நாமும் பயன்பெறுவோம் என்று பான் கி மூன் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மனிதரின் ஆயுள்காலம் நீடித்து வருவது, மனித சமுதாயத்தின் மிகப்பெரும் சாதனைகளில் ஒன்று என WHO நிறுவன அறிக்கையும் கூறுகிறது.
அன்பு நேயர்களே, இன்று பல முதியவர்கள் தங்களது மூப்பை சமுதாயத்தின் வளர்ச்சிக்கெனவே பயன்படுத்துகிறார்கள். அரசுகள் நிர்ணயித்துள்ள பணி ஓய்வு வயதினால், பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், சமுதாயங்களில் தொடர்ந்து உழைக்கும் கரங்களாகவே இருக்கின்றனர். பல பிறரன்பு நிறுவனங்கள் மற்றும் ஆலயங்களில் தன்னார்வப் பணிகள் மூலமாகத் தங்களது அறிவையும் அனுபவத்தையும் இவர்கள் பகிர்ந்து கொள்வதிலும், பேரப்பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் முதியவர்களின் சேவைகள் குறிப்பிடும்படியாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஆப்ரிக்காவில் இலட்சக்கணக்கான வயதுவந்த எய்ட்ஸ் நோயாளிகள் வீடுகளில் தங்களது வயதான பெற்றோரால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அந்த நோயாளிகள் இறந்த பின்னர் அவர்களது பிள்ளைகளை வளர்ப்பது இந்த தாத்தா பாட்டிகளே. தற்போது ஆப்ரிக்காவில் 15 வயதுக்குட்பட்ட ஒரு கோடியே 40 இலட்சம் சிறார், எய்ட்ஸ் நோய்ப் பெற்றோரால் அநாதைகளாகி உள்ளனர். இவர்களைப் பெரும்பாலும் பராமரிப்பது தாத்தா பாட்டிகளே.
வளரும் நாடுகளில் மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகளிலும் முதியவர்களின் சேவைகள் வியக்க வைக்கின்றன. கூனிப்போன உடம்புடன் கடும் குளிரிலும் பனியிலும் காலை 6 மணிக்கே ஆலயம் வந்து பணிவிடை செய்கின்றனர். செஞ்சிலுவைச் சங்கங்கள், ஏழைகளுக்கு உணவு பரிமாறப்படும் இடங்கள் எனப் பல இடங்களில் இவர்களை உழைக்கும் சக்திகளாகப் பார்க்க முடிகின்றது. இஸ்பெயின் நாட்டில், ஏறக்குறைய எல்லா வயதுகளையுடைய நோயாளிகளைப் பாரமரிப்பது பெரும்பாலும் முதியவர்களே, அதிலும் குறிப்பாகப் பெண்களே. இவர்கள் வேலை செய்யும் நேரமும் அதிகரித்துள்ளது. 65க்கும் 74 வயதுக்கும் உட்பட்டவர்கள் 201 நிமிடங்களும், 75க்கும் 84 வயதுக்கும் உட்பட்டவர்கள் 318 நிமிடங்களும் நோயாளிகளைக் கவனிப்பதில் செலவிடுகின்றனர். அதேசமயம் 30க்கும் 49 வயதுக்கும் உட்பட்டவர்கள் 50 நிமிடங்கள் மட்டுமே நோயாளிகளுக்கெனச் செலவிடுகின்றனர் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.
தங்கள் கணவர்களால் புறக்கணிக்கப்பட்ட மகள்கள் குடும்பங்களைப் பராமரிக்கும் வயதான மற்றும் நோயாளிப் பெற்றோர்கள் பற்றி அடிக்கடி இப்போது ஊடகங்களில் வாசிக்கவும் பார்க்கவும் முடிகின்றது. சென்னை வடபழனியில் வீடு வீடாக சோப்பு விற்கும் ஒரு மூதாட்டி பற்றிய செய்தியை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. வயதில் குறைந்த மற்ற பெண்களைவிட இந்த மூதாட்டி அதிகமாக விற்பனை செய்தாலும் அந்தக் குழுவின் தலைவிக்கு இந்த மூதாட்டியைப் பிடிப்பதே இல்லையாம். இவர் காலை ஏழரை மணிக்கே வேலையைத் தொடங்கி விடுகிறார். காலில் செருப்பு இல்லாமல் கொளுத்தும் வெயிலில் வீடு வீடாய்ச் சென்று இவர் விற்றால்தான் தன்னுடன் இருக்கும் கடைசி மகளுக்கும், கணவனைவிட்டுப் பிரிந்த வந்த மகளின் பிள்ளைகளுக்கும் சோறு கிடைக்கும். 3 குழந்தைகளும் சிறு குழந்தைகளாக இருந்த போதே இவரது கணவர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து விட்டார். ஒரு மகளையும் மகனையும் யாரோ ஏமாற்றி தத்து எடுத்துச் சென்றுவிட்டனர். கணவனைப் பிரிந்து உறவுகளைப் பிரிந்து குழந்தைகளையும் இழந்து ஒரு பெண் பிள்ளையோடு வாழ்ந்த இவருக்கு உதவுவதற்கு யாருமில்லை. அன்றையக் கூலி அன்றைய உணவிற்கு என்கிற ரீதியில் தினமும் பிழைப்பு ஓடுகிறது.
முதுமை உடல் தளர்ந்து போகிற ஒரு பருவம். உடல் புதுப்பிக்கப்படாமல் இருந்தால் மனமும் களைப்படைந்து சோர்ந்து விடும். ஆயினும் இயலாமை வந்தாலும் சோக கீதம் இல்லாமல் இன்று பல முதியவர்களின் வாழ்வு அமைந்திருக்கின்றது. முதுமை கீறல் விழுந்த இசைத்தட்டாக இருக்கலாம், ஆனால் இவர்கள் குடும்பங்களைத் தாங்கும் தூண்களாகவும், வளர்ச்சிக்குப் புதிய சக்திகளாகவும் இருக்கிறார்கள். முதியவர்கள் முன்னேற்றத்தின் வெற்றியாகவும் இருக்கின்றார்கள். எனவே வயதானவர்களின் அனுபவங்களை நமது மூலதனங்களாக்குவோம்.







All the contents on this site are copyrighted ©.