2012-10-01 15:59:21

புகைப்பழக்கத்தை ஒரு மாதம் கைவிடுங்கள்: பிரிட்டன் அரசு விளம்பரம்


அக்.01,2012. இங்கிலாந்தில் புகைப்பழக்கம் உள்ளவர்களை இலக்குவைத்து ஒரு புதிய பிரச்சார நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திங்களன்று தொடங்கியுள்ள 'ஸ்டாப்டோபர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பிரச்சாரம் 28 நாட்களுக்கு நடக்கிறது.
புகைப்பழக்கம் உள்ளவர்கள் ஒரு மாதத்துக்காவது புகைப் பழக்கத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்பது இந்தப் பிரச்சாரத்தில் முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம் உள்ளவர்கள் கஷ்டப்பட்டு ஒரு மாத காலத்துக்கு அந்த மோசமான பழக்கத்தைக் கைவிடுகிறார் என்றால், அவர் அப்பழக்கத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு வாய்ப்பு குறைவு என்று ஆய்வுகள் கூறுகின்றன.
புகைப்பிடிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கும் தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள் மூலமாகவும், தினசரி செய்தியஞ்சல் சேவை மூலமாகவும், வீதி நிகழ்ச்சிகள் மூலமாகவும் பிரிட்டன் முழுவதும் இந்த அக்டோபரில் இந்தப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
புற்றுநோயினால் உயிரிழப்பவர்களில் நான்கில் ஒருவருக்கும், புற்றுநோய் வருபவர்களில் ஐந்தில் ஒருவருக்கும் புகைப்பழக்கம் காரணமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.