2012-10-01 16:02:31

திருத்தந்தை : காங்கோ சனநாயக குடியரசில் அமைதிக்காக அழைப்பு


அக்.01,2012. காங்கோ சனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் அமைதி இடம்பெறுமாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
காங்கோ சனநாயக குடியரசில் ஏற்கனவே பிரச்சனகள் நிறைந்த கிழக்குப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அந்நாட்டு இராணுவம் முயற்சித்துவரும்வேளை, ஒரு புரட்சிக் குழுவுக்கும், சட்டத்துக்குப் புறம்பேயான உப இராணுவப் படைகளுக்கும் இடையே இந்த செப்டம்பரில் தொடங்கியுள்ள வன்முறை குறித்தும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

ஆப்ரிக்க நாடாகிய காங்கோ சனநாயகக் குடியரசில் இடம்பெற்றுவரும் தற்போதைய வன்முறைகளால் இந்த செப்டம்பரின் மத்தியில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றுரைத்த திருத்தந்தை, புலம்பெயர்ந்துள்ள மக்களோடு தான் ஆன்மீகரீதியில் ஒன்றித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்பாவி மக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் விதத்தில் அமைதியான வழிகளில் உரையாடல் இடம்பெறவும், நீதியின் அடிப்படையில் விரைவில் அமைதி கிட்டவும் தான் செபிப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை, காங்கோ சனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியிலும், மற்றும் அந்நாடு முழுவதிலும் சகோதரத்துவ இணக்கவாழ்வு ஏற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இந்நாட்டின் கிழக்குப் பகுதியில் கடந்த ஏப்ரலுக்கும் ஜூலைக்கும் இடைப்பட்ட நாள்களில் இடம்பெற்ற வன்முறையால் 25 ஆயிரம் பேர் நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்தனர் மற்றும் அண்டை நாடுகளான ருவாண்டாவுக்கும் உகாண்டாவுக்கும் ஏறக்குறைய 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தனர்







All the contents on this site are copyrighted ©.