2012-09-28 15:22:09

பன்னாட்டு அளவில் பாதுகாக்கப்பட்ட மனிதர்களுக்கு எதிரானக் குற்றங்களுக்குத் தண்டனை மற்றும் அவற்றைத் தடை செய்தல் ஒப்பந்தம்


செப்.28,2012. தூதரக அதிகாரிகள் உட்பட பன்னாட்டு அளவில் பாதுகாக்கப்பட்ட மனிதர்களுக்கு எதிரானக் குற்றங்களுக்குத் தண்டனை மற்றும் அக்குற்றங்களைத் தடை செய்தல் குறித்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 1973ம் ஆண்டின் ஒப்பந்தத்தைத் திருப்பீடம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தைத் திருப்பீடம் ஏற்றுக்கொண்டது குறித்த நிகழ்வு, இப்புதனன்று நியுயார்க் ஐ.நா.தலைமையகத்தில், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி மற்றும் ஐநா.பொதுச்செயலர் பான் கி மூன் முன்னிலையில் இடம்பெற்றது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், தூதரக அதிகாரிகள் உட்பட பன்னாட்டு அளவில் பாதுகாக்கப்பட்ட மனிதர்களுக்கு எதிரானக் குற்றங்களுக்குத் தண்டனை மற்றும் அக்குற்றங்களைத் தடைசெய்யும் நடவடிக்கைகளிலும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் செயல்களிலும் திருப்பீடம் ஆதரவாக இருக்கும் என்று தெரியவருகிறது.
வத்திக்கான் நாட்டின் பெயரிலும் அதன் சார்பாகவும் திருப்பீடம் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. ஐ.நா.வில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தான 30 நாள்களுக்குப் பின்னர் வத்திக்கானும் திருப்பீடமும் இதனை அமல்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.