2012-09-28 15:36:59

உரிய பாதுகாப்பில்லாவிட்டால் அணுஉலையை மூடுவோம்" உச்சநீதிமன்றம்


செப்.28,2012. கூடங்குளம் அணுமின் நிலையத்தில், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஏற்பாடுகள் திருப்தியாக இல்லாவிட்டால், அதன் உரிமத்தை இரத்து செய்வதற்கும் தயங்கமாட்டோம் என்று இந்திய உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கு எவ்வளவு கோடி முதலீடு செய்திருந்தாலும் கவலையில்லை, மக்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல்தான் முக்கியமானது, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்தத் தவறினால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட நேரிடும் என்றும் இந்திய மத்திய அரசை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்தனர்.
அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் அளித்த 17 பரிந்துரைகளில் இன்னும் 11 பரி்ந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை, முறையான சுற்றுச்சூழல் அனுமதியில்லை என்ற அம்சங்களின் அடிப்படையிலும், அணு உலை விபத்து ஏற்பட்டால் வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, சென்னை உயர்நீதிமன்றம் அந்த அணுமின் நிலையத்துக்கு வழங்கிய அனுமதியை எதிர்த்து, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கியது என்று நீதிமன்றம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்குப் பதிலளிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை அக்டோபர் 4ம் தேதி நடைபெற உள்ளது.
இன்னும், பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக்கொண்ட அளவின்படி காவிரிநதி நீரைத் தமிழகத்துக்குத் திறந்து விடுமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.