2012-09-27 15:47:29

திருத்தந்தை : இலண்டன் ஒலிம்பிக்ஸ் மக்களை ஒன்றிணைத்ததில் சிறப்பான பங்காற்றியுள்ளது


செப்.27,2012. போட்டிகளை அமைதியான வழிகளில் பொதுவில் நடத்துவதற்கு மக்களை ஒன்றிணைக்க முடியும் என்பதற்கு இவ்வாண்டில் இலண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் தெளிவான எடுத்துக்காட்டுகளாய் இருக்கின்றன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தொடர்புடைய FIMS என்ற பன்னாட்டு Sports Medicine நிறுவனம் நடத்தும் 32வது அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வோரை காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இவ்வியாழனன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இந்நிறுவனத்தின் மாநாடு முதன்முறையாக உரோமையில் நடத்தப்படுவது பற்றியும் குறிப்பிட்டார்.
மனிதர், விளையாட்டு வீரராகவோ அல்லது மாற்றுத்திறனாளியாகவோ, யாராக இருந்தாலும் ஒவ்வொரு மனிதரின் அழகு, ஆற்றல், பேருண்மை ஆகியவற்றை விளையாட்டு விளக்குகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
விளையாட்டுக்கு ஒரு சரியான, அர்ப்பணிக்கப்பட்ட அணுகுமுறை இருக்கும்போது விளையாட்டு வீரர்கள் மத்தியில் அது அறநெறி மற்றும் ஆன்மீகப் புத்துணர்ச்சியை வளர்க்க உதவும் என்று இதனாலேயே கூற முடிகின்றது திருத்தந்தை கூறினார்.
இந்த மாநாட்டில் ஐந்து கண்டங்களின் 117 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்வதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, கலாச்சாரங்கள், நாடுகள், சூழ்நிலைகள் ஆகியவற்றையும் கடந்து மக்களைத் தூண்டுவதற்கு விளையாட்டு, எவ்வாறு சக்தியைக் கொண்டுள்ளது என்பது பற்றியும் பேசினார்.
எனினும், விளையாட்டு, போட்டியை மட்டும் கொண்டிருக்கவில்லை என்பதால், விளையாட்டு வீரர்களைக் கண்காணிப்பவர்கள் அவர்களது உடல் தேவைகளையும் கடந்து அவர்களின் ஒழுக்கநெறி மற்றும் ஆன்மீகத்திலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Sports medicine என்பது, விளையாட்டு வீரர்களின் உடல்தகுதி, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தொடர்புடைய காயங்களுக்குச் சிகிச்சை, காயங்கள் ஏற்படாதவண்ணம் தடுத்தல் போன்றவற்றைக் கவனிக்கும் மருத்துவப் பிரிவு ஆகும். இந்தப் பிரிவு 20ம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில்தான் உருவானது.








All the contents on this site are copyrighted ©.