2012-09-26 16:34:39

பேராயர் மம்பர்த்தி : அனைத்துலகச் சட்டமே மனித மாண்பு மதிக்கப்படுவதற்கு இன்றியமையாதது


செப்.26,2012. சட்டத்தின்படி ஆட்சி நடைபெறுவதற்கு மனித மாண்பின் தலைசிறந்த விழுமியமே பாதுகாப்புமிக்க அடித்தளமாக அமைகின்றது, ஏனெனில் மனிதர் இறைவனின் படைப்பு என்ற உண்மையோடு இது தொடர்புடையது, அதேசமயம் சட்டத்தின் ஆட்சி தனது உண்மையான நோக்கத்தை எட்டுவதற்கு இது அனுமதிக்கின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தில் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் பன்னாட்டு அளவில் உரிமைகளின் நிலைமை குறித்த ஐ.நா. பொது அவையின் 67வது அமர்வில் உரையாற்றிய, திருப்பீடத்தின் நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி, சட்டத்தின் ஆட்சி பொதுநலனை ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.
அனைத்து அடிப்படை மனித உரிமைகளும் மனித மாண்புடன் தெளிவான விதத்தில் தொடர்பு கொண்டுள்ளன என்றும், தந்தையாக, தாயாக இருப்பதற்கான உரிமை, ஒரு குடும்பத்தை உருவாக்கி அதை வளர்ப்பதற்கான உரிமை, தங்கள் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்குப் பெற்றோருக்கு இருக்கும் உரிமை, வேலை செய்ய உரிமை, செல்வங்கள் சமமாகப் பங்கிடப்படும் உரிமை, கலாச்சார உரிமை, மனச்சான்றின் உரிமை, பேச்சுரிமை ஆகியவை உட்பட அனைத்து உரிமைகளும் சட்டத்தின் ஆட்சியைச் சார்ந்துள்ளன என்றும் பேராயர் கூறினார்.
இந்த உரிமைகள் எல்லாவற்றிலும் சமய சுதந்திரம் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்றுரைத்த பேராயர் மம்பர்த்தி, மனிதரின் இருப்பு குறித்த பெரிய கேள்விக்கான பதிலும், மனிதர் தன்னை இறைவனுக்குத் திறந்தவர்களாய் வைப்பதும், மனிதரின் சமயக்கூறும் அவரின் சமய சுதந்திரத்தைப் பொருத்தது என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.