2012-09-26 13:37:38

திருஅவையில் திருப்புமுனைகள் – புனித அவிலா ஜான் (St. John of Avila)


செப்.26,2012. “அன்புச் சகோதர சகோதரிகளே, சோதனைவேளைகளில் உலகம் அவைகளைவிட்டு விலகி ஓடவே நினைக்கின்றது. அதற்கு மாறாக, அந்த நேரங்களில் கடவுள் நமக்கு அளித்துள்ள மறைவான அருள்வளங்களை நீங்கள் பார்ப்பதற்கு அவர் உங்கள் கண்களைத் திறக்கவேண்டுமென்று செபிக்கிறேன். கடவுளின் மகிமையை நாம் நாடும்பொழுது சோதனைகள் மதிப்புமிக்கவையாக மாறுகின்றன. தனது சோதனை துயரங்களோடு போராடியதால் ஏற்படும் காயங்களால் ஒருவர் துன்பப்படும்போது கடவுள் அன்போடும் கனிவான நட்புணர்வோடும் தமது கரங்களை விரிக்கிறார். இதனால்தான் கிறிஸ்து, ஒருவர் தன்னோடு சேர விரும்பினால் அவர் தான் தேர்ந்தெடுத்த பாதையில் பயணம் செய்ய வேண்டும் எனச் சொன்னார். உலகம் மடமை எனக் கருதும் பாதையில் இறைமகன் செல்லும்போது மனிதர் உலகப் பெருமையை நாடும் வழிகளில் செல்வது சரியானது அல்ல. சீடர் தமது குருவுக்கு விஞ்சியவர் அல்லர். பணியாளர் தனது தலைவருக்கு மேற்பட்டவருமல்லர்”.

புனித அவிலா ஜான் மக்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தின் சில வரிகளே இவை. இவர் தான் வாழ்ந்த காலத்தின் குருக்களின் வாழ்வைச் சீர்திருத்துவதற்குப் பெரும் முயற்சி செய்தவர். நிறைய கடிதங்கள் எழுதியிருப்பவர். நிறைய குருக்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக இருந்தவர். இதனாலே புனித அவிலா ஜானை, கத்தோலிக்கத் திருஅவையின் மறைவல்லுனராக வருகிற அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்போவதாகத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதியன்று மத்ரித்தில் அறிவித்தார். புனித அவிலா ஜான் திருஅவையின் 34வது மறைவல்லுனராக அறிவிக்கப்படுவார். திருஅவையில் மறைவல்லுனராக அறிவிக்கப்படுவர்கள் மூன்று விதங்களில் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். ஒன்று அவர்கள் போதித்த சிறந்த கோட்பாடுகள். இரண்டாவது அவர்களின் குறிப்பிடத்தக்க தூய்மை வாழ்வு. மூன்றாவது அவர் திருஅவையால் அறிவிக்கப்பட வேண்டும். முதலில் போதகர் என்றும், சிறிது காலம் சென்று வல்லுனர் என்றும் மக்களால் அழைக்கப்பட்ட புனித அவிலா ஜான், திருஅவைக்குச் செய்துள்ளவை என்ன, அவரது வாழ்வால் நாம் கற்றுக் கொள்வது என்ன என்று அறிந்தால் அவர் மறைவல்லுனராக அறிவிக்கப்படவிருப்பதன் அர்த்தம் நமக்கு விளங்கும். புனித அவிலா ஜானின் செப வாழ்வு, பணி வாழ்வு மற்றும் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கைமுறையே இவரை இந்த மேலான நிலைக்கு உயர்த்தியுள்ளது.

இஸ்பெயின் நாட்டின் Toledo மறைமாவட்டத்தில் Extremadura என்ற ஊரில் 1499ம் ஆண்டு திருக்காட்சித் திருவிழாவன்று பிறந்தவர் அவிலா ஜான். பணக்கார, பக்தியுள்ள பெற்றோருக்கு ஒரே குழந்தையாக வளர்ந்தார். இவரது 14வது வயதில் சாலமாங்கா பல்கலைக்கழகத்துக்கு சட்டம் படிப்பதற்காக அனுப்பி வைத்தனர் பெற்றோர். ஆனால் ஓராண்டிலே வீடு திரும்பிய ஜான், மூன்றாண்டுகள் வீட்டிலேயே செபத்தில் ஆழ்ந்து தனிமை வாழ்வை வாழ்ந்து வந்தார். ஆயினும் ஒரு பிரான்சிஸ்கன் குருவின் ஆலோசனையின்பேரில் தனிமை வாழ்வை விட்டுவிட்டு புகழ்பெற்ற அல்காலா பல்கலைக்கழகம் சென்று மெய்யியல் மற்றும் இறையியல் படித்தார். Seville உயர்மறைமாவட்டத்தில் குருவான பின்னர் வேறு நாட்டுக்கு மறைப்பணியாளராகச் செல்ல விரும்பினார் ஜான். ஆனால் அவரது ஆயரோ, இவர் இஸ்பெயினில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருப்பதாகச் சொல்லி அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. ஏனெனில் அக்காலத்தில் முஸ்லீம் ஆதிக்கத்திலிருந்து மீண்டு வந்திருந்த இஸ்பெயினில் மறைப்பணிகள் ஏராளம் இருந்தன. ஆயரின் விருப்பம் இறைவனின் விருப்பம் என ஏற்று அதற்குப் பணிந்து தெற்கு இஸ்பெயினில் மறைப்பணியைத் தொடங்கினார் ஜான். இவர் செய்த மறைப்பணியே இவருக்கு, “Andalusiaவின் திருத்தூதர்” என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது.

ஜான் தனது குருத்துவப் பணியின் தொடக்க காலங்களில் ஒரு சகோதரத்துவ குழுவில் வாழ்ந்து வந்தார். இவரது வாழ்வுமுறையை விரும்பிய மற்ற குருக்களும் இவரோடு சேர்ந்து பணி செய்தனர். இவர் பல பள்ளிகளையும் குருத்துவ மாணவர்களுக்கான இல்லங்களையும் கட்டினார். விசுவாசத்தில் வேரூன்றிய இவரது ஆழமான ஆன்மீக வாழ்வும், செபமும் பணியும் பல குருக்களுக்கும் குருத்துவ மாணவர்களுக்கும் எடுத்துக்காட்டாய் இருந்தன. புனித அவிலா தெரேசா, புனித அல்காந்த்ரா இராயப்பர், புனித இறையோவான், புனித பிரான்சிஸ் போர்ஜியார் உட்பட பலருக்கு இவர் ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார். ஜான் எப்பொழுது தனது வேலையைத் தொடங்கினாலும் செபித்த பின்னர்தான் ஆரம்பிப்பார். இவர் கிறிஸ்து மீது வைத்திருந்த அதீத விசுவாசமே இவரது குருத்துவ வாழ்வின் பாறையாக இருந்தது எனச் சொல்லப்படுகிறது. இவர், தான் போதித்ததை வாழ்வில் வெளிப்படுத்தினார். இவரது செபம் வாழ்வில் வெளிப்பட்டது. இவர் கடைப்பிடித்த ஏழ்மை, கன்னிமை, பணிவு ஆகிய மூன்று நற்செய்தி அறிவுரைகள், மக்கள் மத்தியில் மிகுந்த பலன்களைத் தந்தன.

அக்காலத்தில் இஸ்பெயினில் குருக்கள் தாங்கள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட நாளில் நண்பர்களையும் உறவுகளையும் வரவழைத்து அந்நாளைப் பெரிய விருந்தாகக் கொண்டாடி வந்தார்கள். ஆனால் ஜான் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவராய் இருந்தபோதிலும், குருவான நாளில் நகரின் தெருக்களுக்குச் சென்று 12 ஏழை மனிதர்களை அவரது வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களது பாதங்களைக் கழுவி அவர்களை நன்கு உபசரித்து கவுரவப்படுத்தினார். மறைப்பணிக்காக இஸ்பெயின் எங்கும் பயணம் செய்தபோது பயணியர் விடுதிகளில் தங்கவில்லை. அந்த ஊரில் பணிசெய்யும் குருக்களோடு தங்கினார். ஒரு குருவுக்கு இந்த ஏழ்மை அவசியம் என உணர்ந்தார் ஜான். ஒரு சமயம் இவர் தெருவில் சென்று கொண்டிருந்தபோது பட்டு உடை உடுத்திக்கொண்டு சென்ற ஒரு குருவை மக்களும் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்ததைப் பார்த்தார். உடனே புனித ஜான் அக்குருவிடம், இந்த உடுப்பின் சலசலப்பு ஒலி உங்கள் மந்தையை அச்சுறுத்தும் என்று காதுபடச் சொன்னார். பின்னர் அந்தக் குரு புனித ஜானின் கூற்றின் பொருள் உணர்ந்து தனது வாழ்வை மாற்றிக் கொண்டார் எனச் சொல்லப்படுகிறது.

இறையன்பின் மிகுதியினால் கன்னிமை வாழ்விலும் சிறந்து விளங்கினார் ஜான். எந்தப் பெண்ணையும் இவர் தனியாகச் சந்தித்தது கிடையாது. திறந்த வெளியில் அல்லது திறந்த ஆலயங்களிலே பெண்களைச் சந்தித்திருக்கிறார். திருஅவையின் குற்ற விசாரணையின்பேரில் ஓராண்டு சிறையில் இருந்தார். அப்போது துறவற வாழ்வில் சேரவிருந்த அவரது ஆன்மீக மகளுக்காக Audi Filia என்ற புத்தகத்தை எழுதினார். இவர் தனது வாழ்நாளில் எழுதிய ஒரேயொரு புத்தகம் இது மட்டுமே. பின்னர் அந்த மகள் இறந்த பின்னர் அந்த நூலை மீண்டும் புதுப்பித்தார். இந்நூல் கன்னிமை வாழ்வுக்கு நேர்த்தியான பல அறிவுரைகளைக் கொண்டுள்ளது. இவரது பணிவு வாழ்வும் சிறந்திருந்தது. எல்லாவற்றையும் இறைவனின் விருப்பத்துக்கும் அவரின் பராமரிப்புக்கும் விட்டுவிட்டார். இந்த மூன்று பண்புகளுமே இவர் தூய்மை வாழ்வு வாழ உதவின.

புனித பவுலைத் தனது வாழ்வு மற்றும் பணியின் எடுத்துக்காட்டாய்க் கொண்டிருந்தார் ஜான். ஒரு குருவில் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவை மக்கள் பார்த்தால் அவர் தனது புகழுக்காக அல்ல, கடவுளின் மகிமைக்காக வாழ்கிறார் என மக்கள் அறிந்து கொள்வார்கள் என இவர் சொல்வதுண்டு. இவரிடம் மக்கள் அவ்வாறு பார்த்ததால் இஸ்பெயின் பங்குக் குருக்களுக்கு புனித அவிலா ஜான் பாதுகாவலராகப் பெயரிடப்பட்டார். இவர் தனது பலவீனத்திலும் நோயிலும் கிறிஸ்துவின் பெயரால் திருப்பணிகள் செய்தார். துன்பமே இவரது அன்பு மொழியாக இருந்தது. இதுவே இவரது மந்தையை வலுப்படுத்தியது. ஒருசமயம் தூய ஆவி பற்றி இவர் மறையுரையாற்றியபோது, தூயஆவி உங்களில் ஏற்கனவே இருக்கின்றார் என்பதை எப்படி அறிவீர்கள் என்று கேட்டு அதற்குப் பதிலும் சொன்னார். உனது ஆன்மா நடத்தும் வாழ்வைப் பொருத்து அறியப்படும். ஆன்மா இறந்துவிட்டால் அது நல்ல செயல்களைச் செய்ய முடியாது. உனது செபம் உண்மையானதாக இருந்தால் அது உனது வாழ்வில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

ஓர் இறையியலாளர் தனது சொந்த விசுவாச வாழ்வை ஆழப்படுத்தவும், அவரது ஆய்வை செபத்தோடு இணைத்துச் செய்யவும் அழைக்கப்படுகிறார். அப்படியிருக்கும்போது ஒரு குரு எவ்வாறெல்லாம் விசுவாச வாழ்வை மேம்படுத்த வேண்டும் எனக் கேட்டார் ஜான். இவர் தபச்செயலாகத் தன்னை அடித்துக் கொண்டதற்காகவோ அல்லது முடியினாலான சட்டையைப் பயன்படுத்தியதாலோ அல்லது நீண்ட நாள்கள் நோன்பு இருந்ததாலோ இவர் மறைவல்லுனர் என அறிவிக்கப்படவில்லை. ஆனால் இவர் வாழ்ந்த காலத்தில் குருக்களின் உருவாக்குதலில் சீர்திருத்தத்தைக் கொணர துணிச்சலுடன் இவர் எடுத்த முயற்சிகள், குருக்களின் ஆன்மீக வாழ்க்கையை ஆழப்படுத்தவும் அவர்கள் அறிவில் வளரவும், அவர்கள் திருஅவைக்குப் பிரமாணிக்கமாக இருக்கவும், கிறிஸ்துவை மற்றவர்க்கு எடுத்துச் செல்வதில் தொடர்ந்து தளராமல் ஈடுபடவும் இவர் எடுத்த முயற்சிகளே இவரை இன்று மறைவல்லுனர் என்ற நிலைக்கு உயர்த்தவுள்ளன.

40 ஆண்டுகள் கடுமையாக உழைத்த புனித அவிலா ஜான் 1569ம் ஆண்டு மே 10ம் தேதி மொந்தில்லாவில் இறந்தார். திருத்தந்தை 13ம் கிளமென்ட்டால் 1759ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி வணக்கத்துக்குரியவராகவும், திருத்தந்தை 13ம் சிங்கராயரால் 1893ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி அருளாளராகவும், திருத்தந்தை 6ம் பவுலால் 1970ம் ஆண்டு மே 31ம் தேதி புனிதராகவும் அறிவிக்கப்பட்டார். திருத்தந்தை 16ம் பெனடிக்டால் 2012ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி திருஅவையின் மறைவல்லுனராக அறிவிக்கப்படவுள்ளார் புனித அவிலா ஜான்.








All the contents on this site are copyrighted ©.