2012-09-26 16:53:24

இன்றைய உலகின் நெருக்கடிகளைக் களைவதற்கு உலகத் தலைவர்களுக்கு ஐ.நா. வேண்டுகோள்


செப்.26,2012. குழப்பங்கள் நிறைந்த இக்காலத்தை அழுத்தும் நெருக்கடிகளைக் களைவதற்கு உலகத் தலைவர்கள் மேலும் அதிக அளவில் முயற்சிகள் எடுக்குமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் ஐ.நா. பொது அவையில் கேட்டுக் கொண்டார்.
இன்றைய உலகில் பரவலாக நிலவும் பாதுகாப்பற்றநிலை, பெருமளவான நிதி பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படாமல் மரணத்தை வருவிக்கும் ஆயுதங்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுவது, வெப்பநிலை மாற்றத்தால் அதிகரித்துவரும் எதிர்மறைத் தாக்கங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய பான் கி மூன், இன்றைய உலகு தன்னைக் காப்பாற்றுவதற்கு நேரம் காலம் பார்க்காது உடனடியாகச் செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
ஐ.நா.வில் இத்திங்களன்று தொடங்கியுள்ள 67வது பொது அமர்வு ஆண்டுக் கூட்டத்தில் இவ்வாறு உரையாற்றிய ஐ.நா.பொதுச் செயலர், மனிதக் குடும்பத்தினராகிய நாம் எல்லாரும் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து இவ்வாண்டின் இக்கூட்டத்தில் தான் பேச விரும்புவதாகத் தெரிவித்தார்.
உலகில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது, அரபு உலகம், மியான்மார், இன்னும் பிற நாடுகளில் இடம்பெற்றுவரும் மக்களாட்சியை நோக்கிய மாற்றங்கள், உலகில் வேகமாக வளர்ந்துவரும் ஆப்ரிக்கப் பொருளாதார முன்னேற்றம், ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் வளர்ந்துவரும் பொருளாதாரம் போன்ற முக்கியமான முன்னேற்றங்களைப் பாராட்டிப் பேசினார் பான் கி மூன்.
இந்த ஐ.நா.பொது அவையின் ஆண்டுக் கூட்டம் வருகிற அக்டோபர் முதல் தேதியன்று நிறைவடையும்







All the contents on this site are copyrighted ©.