2012-09-24 14:57:39

கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டதற்குப் பாகிஸ்தான் அரசுத்தலைவர் கண்டனம்


செப்.24,2012. பாகிஸ்தானின் Sarhadi லூத்தரன் கோவில் தீக்கிரையாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது என்ற அந்நாட்டு அரசுத்தலைவர் Asif Ali Zardari, இசுலாமிய தீவிரவாத நடவடிக்கைகளிலிருந்து பாகிஸ்தான் கிறிஸ்தவக் கோவில்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இறைவாக்கினர் முகமதுவைக் கேலிசெய்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்புக்காட்டும் விதமாக, பாகிஸ்தானில் இடம்பெறும் வன்முறைகளின் ஒருபகுதியாக லூத்தரன் கோவில், அதன் அருகிலிருந்த கல்விக்கூடம் மற்றும் ஆயர் இல்லம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதைப்பற்றிக் குறிப்பிட்டபோது இவ்வாறு தெரிவித்தார் அரசுத்தலைவர்.
பொதுச்சொத்துக்களையோ, தனியார் சொத்துக்களையோ அதிலும் குறிப்பாக மதம் தொடர்புடையவைகளை அழிவுக்குள்ளாக்குவது இசுலாம் மதத்திற்கு எதிராகச் செல்வதாகும் என்றார் அரசுத்தலைவர் Ali Zardari.
இதே Sarhadi லூத்தரன் கிறிஸ்தவக் கோவில் கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.