2012-09-22 15:27:21

எந்த ஒரு நிலையிலும் கருக்கலைப்பு ஒருபோதும் தீர்வாக அமையாது- அர்ஜென்டினா பேராயர்


செப்.22,2012. தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கருவில் வளரும் குழந்தையின் வாழ்வதற்கான உரிமைகள் மதிக்கப்படுமாறு அந்நாட்டின் இரண்டு ஆயர்கள் கேட்டுள்ளனர்.
அர்ஜென்டினா நாட்டு Mendoza உயர்மறைமாவட்டப் பேராயர் José Maria Arancibiaவும் துணை ஆயர் Sergio Buenanuevaம் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியல்வாதிகள் சட்டம் இயற்றும்போது உலகளாவிய விழுமியங்கள் மற்றும் இலக்குகளின் அடிப்படையில் நியாயமான மற்றும் அறிவுக்கு ஒத்த சட்டங்களை உருவாக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு என்பது, மனித உயிர் வாழத் தொடங்கும் நேரத்தில் அதனைத் திட்டமிட்டுக் கொலை செய்வதாகும், இது கடுமையான அநீதி என்றும் கூறும் ஆயர்கள், அர்ஜென்டினாவின் நாடாளுமன்ற விவாதத்தில் கருவில் வளரும் குழந்தையின் மாண்பு அங்கீகரிக்கப்படும் என்ற தங்கள் நம்பிக்கையையும் தெரிவித்துள்ளனர்.
மேலும், உலகின் பணக்கார நாடாகிய அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் இலத்தீன் அமெரிக்கக் குழந்தைகளுள் மூன்றுக்கு ஒன்று வீதம் பசியால் வாடுகின்றது என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 16 விழுக்காட்டினர் இலத்தீன் அமெரிக்கர்கள்.







All the contents on this site are copyrighted ©.