2012-09-21 15:28:41

பிரான்சில் வெளியாகியுள்ள முகமது நபியின் கேலிச் சித்திரங்கள் பதட்டநிலைகளுக்கு உரம் போடுகின்றன : வத்திக்கான் தினத்தாள்


செப்.21,2012. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Charlie Hebdo என்ற பத்திரிகை முகமது நபியின் கேலிச் சித்திரங்களை வெளியிட்டுள்ளது, ஏற்கனவே முஸ்லீம் உலகில் இடம்பெற்றுவரும் கொந்தளிப்புகளுக்கு இரை போடுகின்றது என்று திருப்பீடச்சார்பு தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ கூறியுள்ளது.
அமெரிக்காவில் வெளியிடப்பட்ட “The Innocence of Muslims” என்ற திரைப்படத்தினால் எழுந்துள்ள பதட்டநிலைகளைத் தணிப்பதற்கு மிகவும் கஷ்டப்படும்வேளை, Charlie Hebdo என்ற ப்ரெஞ்ச் வார இதழில் வெளியாகியுள்ள முகமது நபியின் கேலிச் சித்திரங்கள் புதிய போராட்டங்கள் வெடிக்கக் காரணமாகியுள்ளன என்று அத்தினத்தாள் எழுதியுள்ளது.
இவ்விவகாரம் குறித்துப் பேசிய ப்ரெஞ்ச் ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Andre' Vingt-Troisம் லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாள் கூறும் கருத்தையே தெரிவித்துள்ளார்.
மேலும், “The Innocence of Muslims” என்ற அமெரிக்கத் திரைப்படம் தொடர்பாக நடத்தப்படும் போராட்டங்களை நிறுத்துமாறு பாகிஸ்தான் பல்சமயத் தலைவர்கள் கேட்டுள்ளனர்.
இறைவாக்கினர் முகமதுவைக் கேலிசெய்யும் இத்திரைப்படம், சமயப் பதட்டநிலைகளைத் தீவிரப்படுத்தி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது என்றுரைத்த பாகிஸ்தான் முஸ்லீம் குரு Allama Shafaat Rasool, எனினும் முஸ்லீம்கள் தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.