2012-09-20 16:31:50

புதிய ஆயர்களிடம் திருத்தந்தை : நற்செய்தியின் துணிச்சலான அறிவிப்பாளர்களாக இருங்கள்


செப்.20,2012. நற்செய்தி அறிவிப்புப்பணியின் புதிய முறைகளுக்கு ஒவ்வொரு விசுவாசியும் சவாலாக வாழ்வதற்கு அழைக்கப்படுகின்றார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
திருப்பீட ஆயர்கள் பேராயம் நடத்தும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் புதிய ஆயர்களை இவ்வியாழனன்று காஸ்தெல் கந்தோல்ஃபோவில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இருக்கின்ற மக்கள் கிறிஸ்துவோடு நல்லுறவு கொண்டு, விசுவாசத்தில் மிகவும் உறுதியுடன் வாழ்வதற்கு ஆயர்கள் துணிச்சலுடன் அம்மக்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென்றும் ஊக்கப்படுத்தினார்.
கடந்த ஆண்டில் புதிதாக நியமனம் பெற்ற இந்த ஆயர்களிடம் பேசிய திருத்தந்தை, இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் இந்த ஆயர்கள் ஐந்து கண்டங்களிலிருந்தும் வந்துள்ளதைக் குறிப்பிட்டு இவர்கள் அகிலத் திருஅவையோடு சிறப்பான ஒன்றிப்பைக் கொண்டிருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
விசுவாசத்தின் ஒன்றிப்பை முதலில் ஊக்குவித்துப் பாதுகாக்குமாறும் கூறிய திருத்தந்தை, இந்த விசுவாசத்திற்கு நம்பகமான சான்றுகள் தேவை என்றும், ஆயர்கள் விசுவாசத்தின் முதல் சாட்சிகளாக இருக்குமாறும் பரிந்துரைத்தார்.
ஆயர்கள் இறைவனின் முதல் ஊழியர்களாக இல்லாதவரை மக்களுக்கான சேவையில் அவர்கள் வெற்றியடைய முடியாது எனவும் அவர் கூறினார்.
நற்செய்தி அறிவிப்புப்பணியின் புதிய முறைகள் குறித்து தொடங்கவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், நற்செய்தி அறிவிப்புப்பணியின் புதிய முறைகள் பற்றிய பணி சில வல்லுனர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல, மாறாக, திருமுழுக்குப் பெற்ற அனைவருக்கும் உரியது என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.