2012-09-19 15:50:05

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


செப். 19, 2012. கடந்த சில வாரங்களாக, தன் புதன் பொது மறைபோதகங்களில், செபம் குறித்து புதிய ஏற்பாட்டு நூலில் காணப்படுபவைகள் பற்றித் தன் சிந்தனைகளை மக்களுடன் பகிர்ந்து வந்த திருத்தந்தை, இவ்வாரம், தன் அண்மை லெபனன் திருப்பயணம் குறித்து எடுத்துரைத்தார்.
லெபனன் நாட்டிற்கான என் அண்மைத் திருப்பயணம் குறித்து உங்களுடன் நான் பகிந்துகொள்ள விரும்புகிறேன். மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் பேரவை இறுதித் தீர்மானங்களை லெபனன் மற்றும் மத்திய கிழக்குப்பகுதி முழுவதும் இருக்கும் திருஅவைத் தலைவர்களிடம் ஒப்படைப்பது இப்பயணத்தின் முதல் நோக்கமாக இருந்தது. அதேவேளை, அப்பகுதிக் கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளையும், கிறிஸ்தவ சமூகங்களையும், இசுலாமிய மதத்தலைவர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது. மத்தியக்கிழக்குப் பகுதியின் துன்பகரமான சூழல்களின் முன்னால் நின்று கொண்டு என்னால் என் இதயத்திலிருந்து பேச முடிந்தது, மற்றும் அம்மக்களின் அமைதிக்கான நியாயமான ஏக்கத்திற்கு என் செப ஊக்கத்தையும் வழங்க முடிந்தது. தலத்திரு அவையின் விசுவாசம் என்னை மிகப்பெரும் அளவில் வியப்புக்குள்ளாக்கியது. பெருந்துன்ப சூழல்களில் பகைமையின் மேல் அன்பையும், பழிவாங்கலின் மேல் மன்னிப்பையும், பிரிவினைகளின் மேல் ஒன்றிப்பையும், வெற்றியாகப் பெற்றுக் கொண்டாட உதவும் பலத்தை, தங்கள் பார்வையை சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவில் நிலைநிறுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளுமாறு அப்பகுதியின் விசுவாசிகளுக்கு நான் விண்ணப்பம் விடுத்தேன். என்னை மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்ற இசுலாமியத் தலைவர்களுக்கு என் நன்றியை வெளியிட ஆவல் கொள்கிறேன். அவர்களுக்கு நான் ஒன்றிப்பு மற்றும் பேச்சுவார்த்தைகளின் செய்தியை முன்வைத்தேன். இறுதியாக, என் திருப்பயணம் நன்முறையில் வெற்றியடைய உதவிய அனைவருக்கும் மீண்டுமொருமுறை நன்றி கூறுவதோடு, மத்திய கிழக்குப் பகுதியின் அனைத்து அன்புநிறை மக்களுக்கும் என் செபம் மற்றும் அன்பின் உறுதியை வெளிப்படுத்துகிறேன்.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.