2012-09-19 16:03:00

திருஅவையில் திருப்புமுனைகள் – புனித ஜனுவாரியுஸ் (St. Januarius)


செப்.19,2012. ஆண்டுதோறும் செப்டம்பர் 19ம் தேதி தென் இத்தாலியின் நேப்பில்ஸ் நகரம் விழாக்கோலம் காணுகிறது. அந்த நகர்ப் பேராலயத்தில் நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டுவரும் திடப்பொருளாக இருக்கும் ஒரு புனிதருடைய குருதி அந்த நாளில் திரவமாக மாறுகிறது. நேப்பில்ஸ் பேராலயத்தில் ஒரு வெள்ளிப் பெட்டிக்குள் ஏறக்குறைய 12 செ.மீ. அகலமுடைய இரண்டு பளிங்குக் கண்ணாடிக் குப்பிகளுக்குள் இந்த வறண்டுபோன குருதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அப்புனிதருடைய தலையும் அங்குப் புனிதமாய்ப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தப் புனிதப் பொருள்கள் ஜனுவாரியுஸ் என்ற புனிதருடையது. 305ம் ஆண்டில் இவர் கிறிஸ்தவ விசுவாசத்துக்காகத் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டபோது, யுசேபியா என்ற பெண் இவரது குருதியைச் சேகரித்ததாகப் பாரம்பரியமாகச் சொல்லப்படுகிறது. புனித ஜனுவாரியுஸ் தலைவெட்டப்பட்ட செப்டம்பர் 19ம் தேதி, இவர் நேப்பில்ஸ் நகரத்திற்கும், நேப்பில்ஸ் உயர்மறைமாவட்டத்துக்கும் பாதுகாவலராகச் சிறப்பிக்கப்படும் டிசம்பர் 16ம் தேதி, இப்புனிதருடைய திருப்பண்டங்கள் ஒன்று சேர்க்கப்பட்டதை நினைவுகூரும் மே மாதம் முதல் ஞாயிறுக்குமுன் வரும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாள்களில் வறண்டு காணப்படும் இப்புனிதரது உறைந்த குருதி திரவமாக மாறுகிறது. தென் இத்தாலியின் Campania மாநிலத்தில் புனிதர்களின் குருதி மீதான பக்தி நீண்டகாலமாக இருந்து வந்திருக்கிறது. ஆயினும் 16ம் நூற்றாண்டில் இந்தப் பக்தி மறைந்து விட்டாலும் இம்மாநிலத்தின் Pozzuoliவில் கொல்லப்பட்ட புனித ஜனுவாரியுசின் உறைந்த குருதி இன்றும் திரவமாகிறது. அதேபோல் Ravelloவுக்கு அருகில் புனித Pantaleonனின் குருதியும், புனித Patriciaவின் குருதியும், புனித Gregorio Armeno துறவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள புனித திருமுழுக்கு யோவானின் குருதியும் குறிப்பிட்ட நாள்களில் திரவமாக மாறுவதாகச் சொல்லப்படுகின்றது.

நேப்பில்ஸ் நகரத்திற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் இருந்தாலும் புனித ஜனுவாரியுஸ்தான் முக்கியமானவராகச் சிறப்பிக்கப்படுகிறார். அப்புனிதரின் குறிப்பிட்ட விழா நாள்களில் அனைத்து விசுவாசிகளும், குறிப்பாக "புனித ஜனுவாரியுஸின் உறவினர்கள்" என்றழைக்கப்படும் குழுவினரும் இணைந்து உருக்கமாகச் செபித்த பின்னர், அந்தப் பளிங்குக் கண்ணாடிக் குப்பிகளுக்குள் உள்ள உறைந்த குருதி திரவமாக மாறுகிறது. இதனை நேப்பில்ஸ் பேராயர் அனைவருக்கும் தெரியுமாறு தூக்கிக் காண்பிக்கிறார். புனித ஜனுவாரியுஸின் வறண்ட குருதி திரவமாக மாறிவிட்டது என அறிவிக்கிறார். உடனே அந்நகரின் 13ம் நூற்றாண்டு Castel Nuovo அரண்மனையிலிருந்து 21 துப்பாக்கிகள் வெடித்து மரியாதை அளிக்கப்படுகிறது. திரவமாக மாறிய இந்தக் குருதி எட்டு நாள்களுக்குத் திருப்பலி பீடத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்படுகின்றது. மேலும், இப்புனிதரின் எலும்புகள் உள்ளிட்ட மற்ற புனிதப் பொருள்கள் விழா நாள்களில் பேராலயத்தின் முக்கிய பீடத்துக்குக்கீழ் வைக்கப்படுகின்றன. அத்துடன் அந்தத் திருப்பண்டங்கள் அனைத்தும் விழா நாள்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இவற்றை ஒரு தோல் பெட்டியில் வைத்துப் பூட்டி வங்கியில் வைத்து அதன் ஒரு சாவி அந்நகர மேயர் உட்பட அந்நகரின் முக்கிய அதிகாரிகளிடம் இருக்கும். இந்தப் புனிதரின் உறைந்த குருதி இவ்வாறு திரவமாக மாறிய நிகழ்வு முதல்முறையாக 1389ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதுமை சில நேரங்களில் உடனடியாகவும், சில சமயங்களில் சிலமணி நேரங்களிலும், சில நேரங்களில் சில நாள்கள்கூட எடுக்கும் என்றும் சொல்கிறார்கள்.

புனித ஜனுவாரியுஸின் பிறப்பு, வளர்ப்பு குறித்து அவ்வளவாக குறிப்புக்கள் இல்லை. தென் இத்தாலியின் Campania மாநிலத்தில் Benevento என்ற ஊரில் அன்றைய உரோமைப் பேரரசின் உயர்குலத்தில் பிறந்தவர். 15வது வயதில் Benevento பங்குக் குருவானார். அச்சமயத்தில் ஏறக்குறைய எல்லாருமே அந்நிய தெய்வங்களையே வணங்கி வந்தனர். ஜனுவாரியுசுக்கு 20 வயது ஆனபோது நேப்பில்ஸ் ஆயரானார். அச்சமயத்தில் புனித Sossius, Nicomediaவின் Juliana ஆகியோரின் நட்பு கிடைத்தது. Diocletian என்ற உரோமைப் பேரரசன் ஒன்றரை ஆண்டுகளாக கிறிஸ்தவர்களை நசுக்கி ஒடுக்கிக் கொலை செய்து வந்த சமயத்தில் ஜனுவாரியுஸ் தனது கிறிஸ்தவர்கள் பிடிபட்டுவிடாதபடிக்கு அவர்களை மறைத்து வைத்திருந்தார். ஆயினும், ஜனுவாரியுஸ் Sossiusஐ சிறையில் சந்திக்கச் சென்ற சமயம் கைது செய்யப்பட்டார். இவரையும் இவரோடு சேர்ந்தவர்களையும் Pozzuoli என்ற ஊரில் Flavian கேளிக்கை அரங்கில் கொடிய விலங்குகளுக்கு இரையாகப் போடும்படிக் கட்டளையிட்டான். இருந்தபோதிலும், பொதுமக்கள் கலகம் செய்வார்கள் என அஞ்சி, Pozzuoliவுக்கு அருகில் தலைவெட்டப்பட்டு கொலை செய்யப்படுமாறு ஆணையிட்டான் Diocletian. அவர் தலைவெட்டப்பட்டு இறந்தார் என்று ஒரு பாரம்பரியம் சொல்கிறது. வேறொரு பாரம்பரியம், ஜனுவாரியுஸ் முதலில் கொடிய விலங்குகளுக்கு இரையாகப் போடப்பட்டார். ஆனால் அவ்விலங்குகள் அவரை எதுவுமே செய்யாமல் மிகவும் அன்போடு அவரைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தன என்றும், பின்னர் எரியும் நெருப்பில் போடப்பட்டார், நெருப்பும் அவரை ஒன்றும் செய்யவில்லைம் என்றும், இறுதியில் தலைவெட்டப்பட்டு இறந்தார் என்றும் சொல்கிறது. இவர் 305ம் ஆண்டில் இறந்தார்.

"நேப்பில்ஸ் மக்களும் இத்தாலி நாடும் புனித ஜனுவாரியுசை மிகவும் கவுரவிக்கின்றனர். இப்புனிதரின் பரிந்துரைகளால் தொடர்ந்து பல புதுமைகளைச் செய்து நம் ஆண்டவர் இயேசுவும் இவரைக் கவுரவிக்கின்றார். குறிப்பாக வசுவியுஸ் எரிமலை நேப்பில்ஸ் நகரை முழுவதும் அழித்துவிடுவதாக அச்சுறுத்திய போது அந்த அழிவினின்று அந்நகரை இப்புனிதர் காப்பாற்றினார். எப்படியெனில் இப்புனிதரின் திருப்பண்டங்களைப் பவனியாக இந்த எரிமலை நோக்கி எடுத்து வந்தபோது எரிமலைக் குழம்புகளும் திரவமாகப் பாய்ந்து வந்த நெருப்பு ஆறும் நின்று விட்டன. இவரது உறைந்த இரத்தம் இருக்கும் வெள்ளிப் பேழை இவரது தலைக்குமுன் கொண்டு வரப்படும்பொழுது அது திரவமாக மாறுகின்றது. இந்தப் புதுமை பலர் முன்னிலையில் ஓராண்டில் பல தடவைகள் இடம்பெறுகின்றன. இதற்குப் பலர் சாட்சி" என்று புனித Alphonsus Liguori சொல்லியிருக்கிறார்.

புனித ஜனுவாரியுஸ் பக்தி இத்தாலியில் மட்டுமல்லாமல் நியுயார்க் நகரிலும் மிகவும் பிரபலம். இப்புனிதரது உறைந்த இரத்தம் உருகுவது குறித்து 1902ம் ஆண்டில் மருத்துவ ஆய்வு செய்த Gennaro Sperindeo, Raffaele Januario ஆகிய இருவரும், இந்த இரத்தத்தில் hemoglobin இருப்பதாகச் சொன்னார்கள். 1989ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வுமே 1902ம் ஆண்டின் முடிவுகளையே உறுதி செய்தன. அதோடு அது உருகி திரவமாகும் போது அது வைக்கப்பட்டுள்ள பாத்திரம் 28 கிராம் எடை கூடுவதாகவும் 1900 மற்றும் 1904ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட அளவுகள் தெரிவிக்கின்றன. இயற்கையில் இது எப்படி இயலும் என்று அறிஞர்கள் பரிசோதித்துப் பார்த்தாலும் அவர்களால் இதுவரை தகுந்த விளக்கம் அளிக்க முடியவில்லை. ஏனெனில் இது இறைவனின் செயல். புனித ஜனுவாரியுஸ், இரத்த வங்கிகளுக்குப் பாதுகாவலர். அத்துடன் எரிமலை வெடிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பவராகப் போற்றப்படுகிறார். பலரில் விசுவாசம் உயிரூட்டம் பெறுவதற்கு 4ம் நூற்றாண்டிலிருந்து துணையாய் இருந்து வருகிறார் புனித ஜனுவாரியுஸ். இவரது விழா செப்டம்பர் 19ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. ஆயரும் மறைசாட்சியுமான இப்புனிதர் தொடக்ககாலத் திருஅவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எனச் சொல்லலாம்.








All the contents on this site are copyrighted ©.