2012-09-19 15:57:22

இசுலாமைக் கேலி செய்யும் திரைப்படத்துக்கு எதிரானப் போராட்டங்களால் பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் பதட்டம்


செப்.19,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெளியான இசுலாமைக் கேலி செய்யும் 'The Innocence of Muslims' என்ற திரைப்படத்துக்கு எதிராகப் பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் முஸ்லீம்களின் கோபம்பொங்கும் போராட்டங்கள் அந்நாட்டின் ஹைதராபாத்தில் கிறிஸ்தவர்கள் மத்தியில் பதட்டநிலைகளையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியிருப்பதாக ஹைதராபாத் மறைமாவட்ட முதன்மைக்குரு Samson Shukardin தெரிவித்தார்.
நபிகள் நாயகத்தைக் கேலி செய்யும் இந்தத் திரைப்படம் பொதுவாகத் தடைசெய்யப்பட்டு அப்படத்தின் ஆசிரியர்கள் தண்டிக்கப்படும்வரைத் தாங்கள் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்று முஸ்லீம்கள் கூறிவருவதாகவும் பிரான்சிஸ்கன் அருள்தந்தை Shukardin கூறினார்.
மேலும், இதே விவகாரம் தொடர்பாக, இந்தியாவின் காஷ்மீரில் நடத்தப்படும் முஸ்லீம்களின் ஆர்ப்பாட்டங்களில் கிறிஸ்தவப் பள்ளிகள் தாக்கப்படக்கூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
காஷ்மீரிலுள்ள சமயத் தலைவர்கள் மேலும் வன்முறைகள் இடம்பெறாதிருக்கும்வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு காஷ்மீர் வட இந்தியக் கிறிஸ்தவ சபையின் P. K. Samantaroy கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, 'The Innocence of Muslims' என்ற இந்தத் திரைப்படத்தைத் தயாரித்த Sam Becile மற்றும் இதனைப் பொதுப்படையாக ஆதரித்த அமெரிக்கக் கிறிஸ்தவப் போதகர் Terry Jones ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.