2012-09-16 12:53:32

திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் – நிறைவு நாள் நிகழ்ச்சிகள்


செப்.16,2012. இஞ்ஞாயிறு லெபனன் நாட்டிற்கானத் திருத்தந்தையின் திருப்பயணத்தின் மூன்றாவது நாள். அதன் நிறைவு நாள். ஹரிஸ்ஸா திருப்பீடத் தூதரகத்திலிருந்து 30 கிலோ மீட்டர் காரில் பயணம் செய்து உள்ளூர் நேரம் காலை 9.15 மணிக்கு பெய்ரூட் நகரின் Waterfront City Centre என்ற இடத்தை அடைந்தார் திருத்தந்தை. இப்பரந்தவெளி, லெபனனில் 1975ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டுவரை கடும் உள்நாட்டுச் சண்டை இடம்பெற்று முடிந்த பின்னர், சண்டையில் சேதமடைந்த அனைத்துக் கட்டடக் கழிவுகள் மற்றும்பிறப் போர்க் குப்பைகளைக் கடலில் கொட்டியதால் உருவாகிய இடமாகும். கடற்கரையோரத்தில் அமைந்துள்ள இவ்விடத்தில், திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலியில் கலந்து கொள்வதற்கென மாரனைட்ரீதி கத்தோலிக்கரான லெபனன் அரசுத்தலைவர் மிஷேல் ஸ்லைமான் உட்பட ஏறக்குறைய 3,50,000 விசுவாசிகள் அமர்ந்திருந்தனர். இன்னும், அவ்விடத்தைச் சுற்றி 3,00,000 பேர் நின்று கொண்டும் இருந்தனர் என வத்திக்கான் வானொலி நிருபர்கள் கூறினர். திருத்தந்தையின் திறந்த கார் இம்மக்கள் மத்தியில் சுற்றி வந்தது. அச்சமயத்தில் வத்திக்கான் மற்றும் லெபனன் நாடுகளின் கொடிகளை உயர்த்திப் பிடித்து மக்கள் எழுப்பிய மகிழ்ச்சி ஆரவாரம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆயர்கள், முதுபெரும் தலைவர்கள் என 300 பேருடன் கூட்டுத்திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை. இஞ்ஞாயிறு திருப்பலி உடையின் பச்சை நிறத்திற்கேற்றால் போல் திருப்பலி மேடை முழுவதும் பச்சை நிறக் கம்பளம் விரிக்கப்பட்டு மிக அழகாகக் காட்சியளித்தது.
இத்திருப்பலியின் இறுதியில், துருக்கி, ஈரான் ஆயர் பேரவைத் தலைவர்கள், இன்னும் மத்திய கிழக்கின் அனைத்து ரீதிகளின் தலைவர்கள் அனைவருக்கும் மத்திய கிழக்கில் திருஅவை என்ற அப்போஸ்தலிக்க ஏட்டின் பிரதிகளை வழங்கினார். இந்த ஏட்டின் பரிந்துரைகளை இப்பகுதியின் அனைத்துக் கிறிஸ்தவர்களும் வாழ்வாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். பின்னர் இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையும் நிகழ்த்தினார் திருத்தந்தை.
பின்னர் அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசிரையும் வழங்கினார். பின்னர் குண்டு துளைக்காத கண்ணாடிக் காரில் ஏறினார். மக்கள் நாடுகளின் கொடிகளை ஆட்டிக்கொண்டு தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அங்கிருந்து ஹரிஸ்ஸா திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவருந்தினார் திருத்தந்தை. இந்த நிறைவு நாளின் முக்கிய நிகழ்ச்சி முடிந்த மகிழ்ச்சி எல்லாரிலும் காணப்பட்டது.
இஞ்ஞாயிறு மாலையில், Charfet சீரோ கத்தோலிக்க முதுபெரும் தலைவர் இல்லத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவினரைச் சந்தித்தல், பெய்ரூட் விமானநிலையத்தில் லெபனனுக்குப் பிரியாவிடை கொடுத்தல் இத்திருப்பயணத்தின் இறுதி நிகழ்ச்சிகளாக இருந்தன.
ஆயுதங்களின் சப்தங்கள் இடைவிடாமல் அலறிக்கொண்டிருக்கும் மத்திய கிழக்குப் பகுதியில், குறிப்பாக, சிரியாவில் அமைதி ஏற்பட நாமும் கடவுளை மன்றாடுவோம்.







All the contents on this site are copyrighted ©.