2012-09-16 12:49:53

திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் – இரண்டாவது நாள் மாலை நிகழ்ச்சிகள்


செப்.16,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இவ்வெள்ளிக்கிழமையன்று லெபனன் நாட்டிற்கு முதல் முறையாக தொடங்கிய இந்த 3 நாள் திருப்பயணம் அவரது 24வது வெளிநாட்டுத் திருப்பயணமாகும். இச்சனிக்கிழமை காலையில் லெபனன் அரசுத்தலைவரின் Baabda மாளிகையில், அரசு, தூதரக மற்றும் பல்சமயத் தலைவர்களைச் சந்திப்பதற்கு முன்னர், அங்கிருந்த தோட்டத்தில் அரசுத்தலைவருடன் சேர்ந்து ஒரு கேதார் மரக்கன்றை நட்டு இப்பயணத்தின் பசுமையான நினைவுகள் என்றும் இருப்பதற்கு வழி செய்தார் திருத்தந்தை. கேதார் மரங்கள் நிறைந்த லெபனன் நாட்டுக் கொடியிலும் இம்மரம் இடம்பெற்றுள்ளது. லெபனனின் அண்டை நாடான சிரியாவில் கடும் உள்நாட்டுச் சண்டை இடம்பெற்றுவரும்வேளை, திருத்தந்தையின் இப்பயணம் குறித்தப் பாதுகாப்பு சற்றுக் கேள்விக்குறியாகவே இருந்தது. லெபனன் தலைநகர் பெய்ரூட்டில் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். ஆனால் இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு, Bkerkeலுள்ள மாரனைட்ரீதி முதுபெரும் தலைவர் இல்ல வளாகத்தில் கடலெனத் திரண்டிருந்த இளையோரைக் கண்டு பாதுகாப்புப் பணியினரே அசந்து விட்டனர். இந்த இளையோர் கடலைப் பார்த்து லெபனன் மக்களே வியந்து கொண்டிருந்தனர். திருத்தந்தை அங்கு வரும்போது பாதுகாப்புப் பணிகள் எப்படி நடக்கின்றன என்றும் பார்த்துக் கொண்டிருந்தனர். பல வண்ண ஆடைகளில் லெபனன் முழுவதிலுமிருந்தும், சிரியா, புனிதபூமி, ஈராக், ஜோர்டன், குர்திஸ்தான், இன்னும், ஐரோப்பா, அமெரிக்கா ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளிலிருந்தும் இளையோர் கூடி, துன்புறும் உலகுக்காகத் திருத்தந்தையோடு அமைதிக்காகச் செபிக்க ஆவலோடு காத்திருந்தனர். அந்த வளாகத்தில் நீல மற்றும் மஞ்சள் நிறங்களில் பிரமாண்டமான பலூன் ஜெபமாலைகள் அன்னைமரியா அடையாளத்தோடு வானில் பறந்து கொண்டிருந்தன.
பாதுகாப்புகள் பற்றி இளையோர் கவலைப்படவே இல்லை. சிரியாவிலிருந்து வந்த ஓர் இளைஞி வத்திக்கான் வானொலி நிருபர்களிடம், நான் சிரியாவில்தான் இருக்கிறேன், அமைதிக்கானத் திருத்தந்தையின் செபத்தைத் துன்புறும் எனது நாட்டுக்கு எடுத்துச் செல்ல வந்திருக்கிறேன் என்று கூறினார். மேலும், இந்த வளாகத்தில் கிறிஸ்தவ இளையோர் மட்டுமல்லாமல், முஸ்லீம் இளையோரும் திருத்தந்தையின் வருகைக்காகக் கூடியிருந்தனர். முஸ்லீம் இளையோர் மட்டும் குறைந்தது ஆயிரம் பேர் இருந்தார்கள் என்றும், அவர்களும் மற்ற இளையோரோடு சேர்ந்து பாடிக்கொண்டு இருந்தனர் என்றும் பெய்ரூட்டிலிருந்து வந்த செய்திகள் கூறுகின்றன. மாபெரும் விழாவாகத் தெரிந்த இந்த இடம் ஓர் அனைத்துலக இளையோர் தினம் போலவே காட்சியளித்தது. வழக்கமாக பல நாட்டு இளையோர் கூடியிருக்கும் இடங்களில் பல நாடுகளின் கொடிகள் பறக்கும். ஆனால் இங்கு ஒரே கொடி, அதுவும் லெபனன் கொடி மட்டுமே பறந்ததாம். இதுபோல் இதுவரை பார்த்ததேயில்லை. இது பல நாட்டவர் பல மதத்தவர் ஒன்றிணைந்து வாழ்வதைக் காட்டியதாக எமது நிருபர்கள் கூறினார்கள்.
திருத்தந்தை நின்று கொண்டு கைகளை விரித்து வாழ்த்தியபடி வந்த அவரது குண்டு துளைக்காத கண்ணாடிக் கார் இந்த வளாகத்தில் நுழையத் தொடங்கியதுமே இளையோர் வெள்ளம், “இயேசு எனது மகிழ்வு” என்ற பொருளில் தொடர்ந்து பாடிக் கொண்டே இருந்தனர். “உனக்கு எதிராகப் போர்கள் எழுந்தாலும், நீ துன்புற்றாலும், உனது எதிரி தொடர்ந்து சித்ரவதை செய்தாலும், இயேசு எனது மகிழ்வு” என்று பாடிக் கொண்டே இருந்தனர். அங்கிருந்த குறைந்தது முப்பதாயிரம் இளையோர் மத்தியில் வலம் வந்த திருத்தந்தை அந்த இளையோர் சந்திப்பு நிகழ்வைத் தொடங்கி வைத்தார். மாரனைட்ரீதியின் அந்தியோக்கிய முதுபெரும் தலைவர் பெக்காரா பூத்ரோஸ் ராய் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் இளையோரும் தங்களது சாட்சியங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மத்திய கிழக்குப் பகுதியின் ஓர் இளைஞரும் இளைஞியும் பேசிய போது, இளையோராகிய நாங்கள் கடலளவு இன்னல்களிலும் பயங்களிலும் ஏக்கங்கள் எதிர்பார்ப்புக்களிலும் மூழ்கியுள்ளோம். ஊக்கமிழப்பும் ஊழலும் மிகுந்துள்ளன. இவை பாதுகாப்பின்மை, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளோடு தொடர்புடையவை. திருமணத்தின் புனிதம்இழப்பு, கடவுள் நம்பிக்கையின்மை, சமய மற்றும் சமூகப் பாகுபாடு, மதுபானம் மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமை போன்ற இன்னல்களையும் கிறிஸ்தவக் குடும்பங்கள் சந்திக்கின்றன என்று கூறினர். மற்றோர் இளைஞர் திருத்தந்தையிடம், திருத்தந்தையே, லெபனனில் தங்களது பிரசன்னம் அமைதி மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கின்றது என்று சொன்னார். இந்த இளையோர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த திருத்தந்தை, இவற்றையெல்லாம் நான் அறிந்தே இருக்கிறேன் என்று சொன்னார்.
இந்த இளையோர் சந்திப்புடன் இச்சனிக்கிழமை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. அதன் பின்னர் ஹரிஸ்ஸா திருப்பீடத் தூதரகம் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.