2012-09-14 17:12:03

பெய்ரூட் விமானநிலையத்தில் திருத்தந்தையின் உரை


செப்.14,2012. லெபனன் நாட்டுக்குத் தான் வருவதற்கு முன்வைக்கப்பட்ட அழைப்பை ஏற்பதை கவுரவமாகக் கருதுகிறேன். 2008ம் ஆண்டு நவம்பர் மற்றும் 2011ம் ஆண்டு பிப்ரவரியில் அரசுத்தலைவரும், அதற்கடுத்த 9 மாதங்களில் பிரதமரும் வத்திக்கான் வந்ததன் தொடர்ச்சியாக எனது இந்தப் பயணம் இடம்பெறுகின்றது. அரசுத்தலைவர் இரண்டாவது தடவை வத்திக்கான் வந்த போது புனித Maronனின் பிரம்மாண்டமான திருவுருவம் அர்ச்சிக்கப்பட்டது. வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவின் ஒரு பகுதியில் புனித Maronனின் திருவுருவம் அமைந்திருப்பது, திருத்தூதர் பேதுரு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் லெபனன் இருக்கின்றது என்பதை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றது. புனித Maron, பேதுருவின் திருத்தலத்தில் இருந்து கொண்டு, லெபனன் மற்றும், அனைத்து மத்திய கிழக்குப் பகுதிக்காகத் தொடர்ந்து செபித்துக் கொண்டிருக்கிறார். மேலும், மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானங்கள் அடங்கிய அப்போஸ்தலிக்க ஏட்டில் கையெழுத்திட்டு அதனை வெளியிடும் முக்கியமான திருஅவை நிகழ்வும், இத்திருப்பயணத்தின் மற்றுமொரு நோக்கமாகும். இங்கு வந்துள்ள அனைத்துக் கத்தோலிக்க முதுபெரும் தலைவர்களுக்கு நன்றி கூறுகிறேன். இவர்கள் வழியாக மத்திய கிழக்கு அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் தந்தைக்குரிய எனது நல்வாழ்த்தைத் தெரிவிக்கிறேன். இந்த அப்போஸ்தலிக்க ஏடு, இனி வரவிருக்கும் ஆண்டுகளுக்கு வழிகாட்டி வரைபடமாக இருக்கும். இந்நாள்களில் இந்நாட்டின் கத்தோலிக்கச் சமூகங்களின் பல பிரதிநிதிகளைச் சந்திக்கவிருக்கிறேன். அவர்களின் இருப்பும் சான்றுவாழ்வும், இந்த உங்களது அன்பு நாட்டின் அனைத்து மக்களாலும் போற்றப்படுகின்றது என்ற திருத்தந்தை, லெபனனின் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகள் மற்றும்பிற சமயங்களின் தலைவர்களுக்கும் நல்வாழ்த்தைத் தெரிவித்தார். ஒருவர் ஒருவரை மதிப்பதில் ஒவ்வொருவர் மத்தியிலும் நீங்கள் ஊக்குவிக்க விரும்பும் ஒத்துழைப்பில் உங்களது இருப்பும் உயர்வாகவும் மதிப்புமிக்கதாயும் இருக்கின்றது என்றார்.
உங்களது அழகான நாட்டைப் பல ஆண்டுகளாகப் பாதித்த வருத்தமும் வேதனையும் தருகின்ற நிகழ்வுகளை என்னால் மறக்க முடியாது. ஆயினும் லெபனன் மக்களாகிய நீங்கள் ஒன்றிணைந்து வெற்றிகரமாக வாழும்முறை அனைத்து மத்திய கிழக்குப் பகுதிக்கும், உலகமனைத்திற்கும் தெரிகின்றது. ஒரு நாட்டுக்குள்ளே பல்வேறு கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து வாழ முடியும். அதேசமயம், கிறிஸ்தவர்களுக்கும் அவர்களது பிற சமயச் சகோதரர்களுக்கும் இடையே ஒன்றிப்பும் மதிப்புமிக்க உரையாடலும் இடம்பெற முடியும் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. சிலவேளைகளில் தன்னலத்தாலும் பிரிவு மனப்பான்மையாலும் பிணக்குகளும் இடம்பெறுகின்றன. இங்குதான் நிதானமும் அளவற்ற ஞானமும் பரிசோதிக்கப்படுகின்றது. எனவே அனைத்து மக்களின் நலனை முன்னேற்றும் நோக்கத்தில் ஒருதலைச்சார்பான போக்கு களையப்பட வேண்டும்.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இறைவனின் பிரசன்னம் எவ்வளவு முக்கியம் என்பதையும் வலியுறுத்தவும் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன். எல்லாரையும் சகோதர சகோதரிகளாக வாழ வேண்டுமென்று விரும்பும் கடவுளில் வாழ்வு வேரூன்றப்பட்டிருந்தால் மட்டுமே ஒன்றிணைந்த வாழ்வுக்குச் சான்று பகர முடியும். சமத்துவ வாழ்வு வாழ விரும்பும் லெபனன் மக்களது ஆவல் உண்மைத்தன்மை பெற வேண்டும். இதனை நல்ல மனம் மற்றும் அர்ப்பணத்தின் மூலம் பெற முடியும். இதன் மூலம் லெபனன், அப்பகுதியினர் எல்லாருக்கும் எடுத்துக்காட்டாய்த் திகழ முடியும். பேதுருவின் வழிவருபவருக்கும் லெபனனுக்கும் இடையேயான தொடர்பு தொன்மையானது மற்றும் ஆழமானது. அன்பு அரசுத்தலைவரே, நண்பர்களே, அமைதியின் பயணியாக, கடவுளின் மற்றும் மனிதர்களின் நண்பராக இங்கு வந்துள்ளேன். “Salàmi ō-tīkum”, எனது அமைதியை உங்களுக்குத் தருகிறேன் எனக் கிறிஸ்து கூறுகிறார். மத்திய கிழக்குப் பகுதி முழுவதற்கும் அவர்கள் எம்மதத்தைச் சார்ந்திருந்தாலும், எந்தப் பூரிவீகத்தைக் கொண்டிருந்தாலும், அனைவருக்கும் அமைதியின் பயணியாக, கடவுளின் மற்றும் மனிதர்களின் நண்பராக அடையாளப்பூர்வமாக வந்துள்ளேன். “Salàmi ō-tīkum”என்று எல்லாரிடமும் கிறிஸ்து சொல்கிறார். நான் இங்கு வந்துள்ளதில் மகிழ்கிறேன். Lè yo barèk al-Rab jami’a kôm! உங்கள் எல்லாரையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக. இவ்வாறு இறுதியில் அரபு மொழியில் சொல்லி இந்த முதல் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.