2012-09-14 17:05:21

திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் – முதல் நாள்


செப்.14,2012. லெபனன் நாட்டுக்கும் அனைத்து மத்திய கிழக்குப் பகுதிக்கும் அமைதியையும் ஒப்புரவையும் ஒன்றிப்பையும் வழங்கும் நோக்கத்தில் லெபனன் நாட்டுக்கானத் தனது முதல் திருப்பயணத்தை இவ்வெள்ளிக்கிழமை உரோம் நேரம் காலை 9.38 மணிக்கு தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். சிரியாவில் பல மாதங்களாக இடம்பெற்று வரும் உள்நாட்டுச் சண்டை நாளுக்கு நாள் கடுமையாகி அச்சண்டை அண்டை நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியதிலிருந்து, சிரியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான லெபனனுக்கானத் திருத்தந்தையின் திருப்பயணம் இடம்பெறுமா, இடம்பெறாதா என்று நிலவிய ஐயப்பாடுகளுக்கு முற்றாக முற்றுப் புள்ளி வைத்துவிட்டது இத்திருப்பயணம். வத்திக்கான் மற்றும் லெபனன் நாடுகளின் கொடிகளை முகப்பில் பறக்கவிட்டுக் கொண்டு உரோம் சம்ப்பினோ இராணுவ விமானநிலையத்திலிருந்து, A320 ஆல்இத்தாலியா விமானத்தில் புறப்பட்ட திருத்தந்தையை அல்பானோ ஆயர் மார்ச்செல்லோ செமெராரோ, இத்தாலிய அரசு சார்பில் ஐரோப்பிய விவகார அமைச்சர் Enzo Moavero, ஆல்இத்தாலியா விமானச் சேவை அமைப்புத் தலைவர் Roberto Colaninno ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். திருத்தந்தையுடன் 4 கர்தினால்கள், 2 ஆயர்கள், 8 அருள்பணியாளர்கள் 18 பொதுநிலையினர், இன்னும் பல நிருபர்களும் பயணம் செய்தனர்.
இத்திருப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் இத்தாலி, கிரீஸ் மற்றும் சைப்ரஸ் நாடுகளின் தலைவர்களுக்கு வாழ்த்துத் தந்திச் செய்திகளை அனுப்பினார் திருத்தந்தை. இத்தாலிய அரசுத் தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோவுக்கு அனுப்பிய செய்தியில், இக்காலத்தில் இத்தாலியர்கள் சந்திக்கும் சவால்களை இதமான அமைதியிலும் நம்பிக்கையிலும் எதிர்கொள்வார்களாக. லெபனன் நாட்டில் தான் மேற்கொள்ளும் இந்த மூன்று நாள்கள் திருப்பயணத்தில் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதற்குமென இடம்பெற்ற ஆயர் மாமன்றத்தின் அப்போஸ்தலிக்க ஏட்டை வழங்கவுள்ளேன். இவ்வேடு, இம்மக்கள், ஒன்றிப்பிலும் நம்பிக்கையிலும் வாழ உதவும் என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். இத்தாலிய அரசுத் தலைவர் நாப்போலித்தானோவும் திருத்தந்தைக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பியுள்ளார். 3 மணி 15 நிமிடங்கள் கொண்ட இவ்விமானப் பயணத்தில் நிருபர்களின் 5 முக்கிய கேள்விகளுக்கும் திருத்தந்தை பதில் சொன்னார்.
லெபனன் தலைநகர் பெய்ரூட் “Rafiq Hariri” விமானநிலையத்தை உள்ளூர் நேரம் பகல் 12.45 மணிக்குச் சென்றடைந்தார் திருத்தந்தை. விமானம் தரையிறங்குவதைக் கண்ட மக்கள், குறிப்பாக இளையோர், வத்திக்கான் மற்றும் லெபனன் நாடுகளின் கொடிகளை ஆட்டிக் கொண்டு பெனதெத்தோ பெனதெத்தோ என்று ஆரவாரித்துக் கொண்டிருந்தனர்.
லெபனன் அரசுத்தலைவர் Michel Sleiman, பிரதமர் Nagib Miqati, நாடாளுமன்றத் தலைவர் Nabih Berri ஆகியோர் விமானப்படிகளில் இறங்கி வந்த திருத்தந்தையைக் கைகுலுக்கி வரவேற்றனர். இன்னும், அரசு பிரமுகர்களும், திருஅவைத் தலைவர்களும் அங்கு இருந்தனர். ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் மரபு உடைகளில் வந்து திருத்தந்தைக்கு மலர்க்கொத்துக்களை அளித்தனர். விமானநிலையத்தில் 21 துப்பாக்கிகள் வெடிக்க அனைத்து சிவப்புக் கம்பள அரசு மரியாதைகளும் வழங்கப்பட்டன.
முதலில் லெபனன் அரசுத்தலைவர் Michel Sleiman அரபு மொழியில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.
மிகுந்த இரத்தம் சிந்தப்பட்டுள்ள லெபனனில் பல்வேறு சமூகங்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து மற்றவர்க்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றன. லெபனனிலுள்ள பாலஸ்தீனிய அகதிகளின் நிலைமை பற்றியும் எடுத்துரைத்த Sleiman, கிறிஸ்தவர்கள் இந்நாட்டிலும், இப்பகுதி முழுவதிலும் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர், ஒன்றிணைந்து வாழும்முறை பற்றிய செய்தியை இவர்கள் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூறினார்.
பின்னர் திருத்தந்தையும் லெபனன் நாட்டுக்கானத் தனது முதல் உரையை வழங்கினார். இந்நாடு, முதல் உலகப் போருக்குப் பின்னர் அதாவது 1918ம் ஆண்டிலிருந்து ப்ரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்து, பின்னர் 1943ம் ஆண்டில் விடுதலை அடைந்தது. எனவே லெபனனில் அரபு ஆட்சி மொழியாக இருந்தாலும், ப்ரெஞ்சும் ஆங்கிலமும் பரவலாகப் பேசப்படுகின்றன. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் உரையும் ப்ரெஞ்சு மொழியில் இருந்தது.
பின்னர் விமானநிலையத்தில் மற்ற பிரமுகர்களைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் வெளியில் நின்ற மக்கள் பாப்பிறை வாழ்க என்று சப்தமிட்டுக் கொண்டே இருந்தனர்.
பின்னர் காரில் ஹரிஸ்ஸா திருப்பீடத் தூதரகம் சென்று ஓய்வெடுத்தார் திருத்தந்தை. பின்னர் உள்ளூர் நேரம் மாலை 6 மணியளவில் ஹரிஸ்ஸா கிரேக்க மெல்கித்தே ரீதி புனித பவுல் பசிலிக்காவில் நடைபெறும் செப வழிபாட்டின்போது, மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானங்கள் அடங்கிய அப்போஸ்தலிக்க ஏட்டில் கையெழுத்திடுவது இம்முதல்நாள் பயணத் திட்டத்தில இருந்தது.
பெய்ரூட் நகரில் இவ்வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே ஆலய மணிகள் ஒலித்துக் கொண்டிருந்தன. திருத்தந்தை இங்கு இருக்கிறார், நல்வரவு என்ற விளம்பரங்களை எல்லா இடங்களிலும் காண முடிகின்றது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டினால் பயங்கரவாத இயக்கம் என்று முத்திரை குத்தப்பட்டுள்ள Hezbollahவின் ஷியைய்ட் இசுலாம் தீவிரவாத இயக்கமும், அரபு மற்றும் ப்ரெஞ்ச் மொழிகளில் திருத்தந்தையின் படத்துடன் அவரை வரவேற்கும் சொற்கள் அடங்கிய விளம்பரத் துணிகளை விமானநிலையத்திலிருந்து நகருக்குச் செல்லும் சாலை முழுவதும் கட்டியிருந்தது. ஒன்றிணைந்து வாழும் லெபனனில் Hezbollah திருத்தந்தையை வரவேற்கின்றது என்று அவைகளில் எழுதப்பட்டிருந்தது. மேலும், திருத்தந்தை மீது Hezbollah இயக்கம் கொண்டிருக்கும் நல்லெண்ணத்தின் அடையாளமாக அவர்களிடமிருந்த கடைசிப் பிணையல் கைதிகளான துருக்கி நாட்டு லாரி ஓட்டுனர் மற்றும் ஒரு தொழிலதிபரை ஏழு நாள்களுக்கு முன்னரே விடுவித்து விட்டனர் என செய்திகள் கூறுகின்றன. இன்னும், 5,000த்துக்கு மேற்பட்ட காவல்துறையினரும் மற்றவர்களும் தற்போது பெய்ரூட்டில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
15 வருடங்களுக்குப் பின்னர் திருத்தந்தை ஒருவர் லெபனன் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதன் முறையாகும். இந்த மூன்று நாள் திருப்பயணத்தில், லெபனனிலுள்ள 18 சமயக் குழுக்களின் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் சந்திக்கிறார் திருத்தந்தை.
செப்டம்பர் 15, இச்சனிக்கிழமையன்று லெபனன் அரசுத்தலைவர் மற்றும் பிரதமரைத் தனித்தனியே சந்தித்தல், முஸ்லீம் மதத் தலைவர்களைச் சந்தித்தல், அரசு உறுப்பினர்கள், தூதரக அதிகாரிகள், சமயத் தலைவர்கள், கலாச்சாரப் பிரதிநிதிகள் எனப் பலதரப்பட்ட குழுவினர் எல்லாரையும் அரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தல், அந்நாட்டு ஆயர்கள் மற்றும்பிற கிறிஸ்தவத் தலைவர்களைச் சந்தித்தல் என பல முக்கிய நிகழ்வுகள் திருப்பயணத்திட்டத்தில் உள்ளன.
செப்டம்பர் 16 இஞ்ஞாயிறன்று பெய்ரூட் நகர வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தி அந்த அப்போஸ்தலிக்க ஏட்டை அத்தலத்திருஅவைகளுக்கு வழங்கும் திருத்தந்தை அன்று மாலை உரோம் திரும்பி காஸ்தெல் கந்தோல்ஃபோ செல்வார். இத்துடன் லெபனன் நாட்டுக்கானத் திருத்தந்தையின் இத்திருப்பயணம் நிறைவு பெறும். இது அவரது 24வது வெளிநாட்டுத் திருப்பயணமாக அமைகின்றது.







All the contents on this site are copyrighted ©.