2012-09-12 16:31:57

திருப்பீட அதிகாரி : வீடற்றநிலை உரிமைகள் இழப்புக்கானக் காரணத்தின் ஆரம்பம்


செப்.12,2012. பொதுவாக சாலைகளில் வாழும் மக்கள் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் நோக்கப்படுகின்றனர், இவர்கள் தங்களையே பாதுகாத்துக் கொள்ள முடியாத குரலற்ற மற்றும் முகவரியில்லாத மக்களாக இருக்கின்றனர் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
டான்சானிய நாட்டு Dar-Es-Salaamல் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள ஆப்ரிக்கச் சாலையோர மக்கள் குறித்த கூட்டத்தில் உரையாற்றிய, திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்வோர் அவையின் செயலர் ஆயர் Joseph Kalathiparambil, சாலையோர மக்கள் தங்களது எதிர்காலத்தை முன்னேற்றுவதற்கு வளங்களைக் காண முடியாமலும், தங்களைப் பாதுகாக்க முடியாத நிலையிலும் வாழ்கின்றனர் என்று கூறினார்.
குடியேற்றம், மனித வியாபாரம், மனித உரிமைகள் போன்ற தலைப்புக்களிலும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட ஆயர் Kalathiparambil, மனித வியாபாரம் மற்றும் சாலையோர மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்குத் திருஅவைகள் ஆற்றும் மேய்ப்புப்பணிகளையும் பாராட்டிப் பேசினார்.
உலகில் ஏறத்தாழ 15 கோடித் தெருச்சிறார் உள்ளனர். இவர்களில் 40 விழுக்காட்டினர் வீடற்றவர்கள். 60 விழுக்காட்டினர் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்காகச் சாலைகளில் வேலை செய்கின்றனர். மேலும், உலகில் 100 கோடிக்கு மேற்பட்டோருக்குப் போதுமான வீட்டுவசதி கிடையாது. 10 கோடிப் பேருக்கு வீடுகளே கிடையாது. போதுமான குடியிருப்பு வசதியில்லாததால் தினமும் 50 ஆயிரம் பேர் வீதம் இறக்கின்றனர் என ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது







All the contents on this site are copyrighted ©.